இலக்கியம்கவிதைகள்

காதலின் தினம்

நாகினி

 

இல்லத்தின் மணமகளாய்
வர தட்சணை வேண்டாம் என
ஓசை படாமல் ஓங்கி குரல் கொடுத்து
மனைவி எனும் புனிதம் தந்தாய்!

நீரலை கடல் ஆழமென
நீங்காத அன்பு தந்து
நித்திரையில் இருந்த என் அறிவை
நித்தமும் ஒளிரச் செய்தாய் செய்தி
நிறை கணினி இயக்கும் மேதையாய்!

பக்குவமாய் சமைத்தேனோ என்னவோ
பண்புடன் விரும்பி உண்டு
பாங்குடன் நிறை குறை சொல்லி
பாசமுடன் உருவாக்கினாய் உலகின்
புது மழலை மெச்சும் சமையல் கலைஞியாய்!

அறிவு தெளிவாகி நான் எனும்
ஆணவம் அடங்கி நாம் என
ஆதரவுடன் திகழ்ந்து அன்பாய்
அளவுடன் மழலைச் செல்வம் பெற்று
ஆண்டாண்டு தோறும் ஊர் உலகம் சுற்றி
ஆயிரம் அலுவல் துயரில் வீட்டின் கடமையையும்
அக்கறையாய் அரவணைக்கும் தலைவனே!

நாம் இருவரும் இணைந்தே பக்குவமாய்
உண்மை ஒளியாய் உலகிற்குச் சொல்வோம்….
தினம் தினம் சண்டையிட்டாலும்
விலகா மனம் கொண்ட
இருமன இணைவு எனும் இல்லறமே
நாள்தோறும் காணும் உண்மைக்
காதலின் தினம் என்று!!!

— நாகினி

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க