வளராத பொருளென்று வானுக்குக் கீழ்வாழும்
.. வகையே தில்லை!
துளிராக வருகின்ற துளிர்ப்பொன்றே மரமாகித்
.. தொடரும் தோப்பாய்!
களராக வாழ்வெல்லாம் கழியுங்கால் விழையெண்ணம்
.. கனவாய்ப் போகும்!
தளராத உழைப்புடையார் தாமெண்ணும் உயர்வையெலாம்
.. தமதாய்ச் சேர்ப்பர்! (1)

 

வில்லின்றோர் இலக்கடைய விரைகாற்றைக் கிழித்தன்றோ
.. விலக்கும் அம்பும்!
கல்லொன்றில் எறும்பூரக் கால்பட்ட இடந்தேய்த்துக்
.. கரைக்குங் கல்லை!
அல்லொன்றின் இருளழிக்க ஆதவனில் செந்தீயாய்
.. அமையுங் கோபம்!
செல்கின்ற வழியெங்கும் சிறப்பான உழைப்பிருப்பின்
.. செயந்தான் ஆங்கே! (2)

 

அலையாடும் கடல்சேரும் ஆற்றுக்குத் துளிநீரால்
.. அமைந்த ஆதி!
மலையேறும் போதெல்லாம் மனங்குவித்த முதலடியே
.. மலைப்பைப் போக்கும்!
விலையாகும் பொருளெல்லாம் விளைவிக்கும் திறன்கொண்ட
.. விதையின் வீச்சே!
தலையான பணியேற்கத் தரநெஞ்சின் முதலூக்கத்
.. தவிப்பே போதும்! (3)

 

செய்கின்ற செயலொன்றும் சிந்தனையும் தேர்ச்சியையும்
.. தெரிதல் வேண்டும்!
மெய்யொன்றி முனைப்பினையும் முயற்சியையும் ஏற்றாற்றும்
.. முறைகள் வேண்டும்!
ஐயங்கள் வரும்போதில் அவைதீர்க்க அறிஞர்கள்
.. அருகே வேண்டும்!
தொய்கின்ற மனச்சோகை தொலைத்திலக்கை நோக்கிமனம்
.. தொடர்தல் வேண்டும்! (4)

 

விட்டத்தை நோக்கிநிதம் விழித்திருப்பின் விழைகின்ற
.. விடியல் இல்லை!
சொட்டுங்கள் மலரறிந்து தொலைதூரம் சென்றளிகம்
.. தொகுத்தாற் போலே
திட்டங்கள் வேண்டுமவை தீட்டுதற்காய்த் தெளிவுடைய
.. திறமை வேண்டும்!
கட்டங்கள் வரும்போதில் கலக்கிமிலா மனத்திறத்தால்
.. கடத்தல் வேண்டும்! (5)

 

துயரங்கள் வரும்போகும்! தொலைதூரம் வழிகாட்டும்
.. துணிச்சல் ஒன்றே
பயில்கின்ற மடிநீக்கி பக்கத்தில் வெற்றிதனை
.. பழகச் செய்யும்!
அயர்வுக்காய்க் காரணங்கள் ஆயிரமாய் இவ்வுலகில்
.. அமைந்த போதும்
உயர்வுக்கோ ஒற்றைவழி! உண்மையுடன் நாமாற்றும்
.. உழைப்பென் றொன்றே! (6)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *