-செண்பக ஜெகதீசன்

குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. (திருக்குறள்:758-பொருள்செயல்வகை)

images

புதுக் கவிதையில்…

குன்றில் நின்று
இடரின்றி
யானைகள் சண்டை
பார்த்திடுதல் போன்றதே,
தன் கைப்பொருளுடன்
தொடங்கிடுதல் செயல் ஒன்றை…!

குறும்பாவில்…

தன் கைப்பொருளுடன் செயல் தொடங்குதல்,
குன்றிலேறிப் பாதுகாப்பாய்
யானைச்சண்டை பார்ப்பது போல்தான்…!

மரபுக் கவிதையில்…

குன்றில் நின்று பாதுகாப்பாய்க்
கீழே போரிடும் யானைகளை
நன்றாய்ப் பார்த்துக் களித்திடலாம்
நமக்குச் சிறிதும் இடரிலாதே,
என்றும் இதுபோல் பாதுகாப்பாய்
இருக்கும் நமது கைப்பொருளில்,
வென்றிடும் வகையில் செயல்தொடங்கி
வெற்றி என்றும் பெறலாமே…!

லிமரைக்கூ…

கைப்பொருளால் செயலைத் தொடங்கிப் பார்,
பாதுகாப்பில் இதனை ஒத்ததே
குன்றிலேறி பார்க்கப்படும் யானைகளின் போர்…!

கிராமிய பாணியில்…

சண்டசண்ட யானச்சண்ட
கிட்டபோனா காயம்படும்,
எட்டிப்போனா ஆபத்தில்ல
ஏறிநின்னா மலமேல
எல்லாந்தெரியும் தெளிவாவே,
சண்டசண்ட யானச்சண்ட..

கதயிதுதான் கைக்காசிலயும்-
கையிலுள்ள காசவச்சி
வேலசெஞ்சா கவலயில்ல,
கொளப்பமில்ல பயமுமில்ல
பாதுகாப்புக் கொறவுமில்ல…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.