நாகேஸ்வரி அண்ணாமலை

Narendra_Modi-Oct-12

புதுதில்லியில் இந்துத்துவவாதிகள் சில கிறிஸ்தவத் தேவாலயங்களையும் பள்ளிகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் உங்களைப் பார்த்து இந்த மாதிரி வன்முறைகளைத் தடுக்கும்படி 2014 டிசம்பரில் மனுக் கொடுக்க வந்தபோது அவர்களைச் சந்திக்க நீங்கள் மறுத்திருக்கிறீர்கள். இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க மாநாட்டில் கலந்துகொள்ள வருவதாகயிருந்த வாடிகனைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. இவர்கள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்கு வருவதற்கு விசாவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள். கடைசி நாள் வரை அவர்களுக்குப் பதில் எழுதாமல் இருந்துவிட்டுக் கடைசி நாளில் நொண்டிச் சாக்குகள் சொல்லி அவர்களுடைய விசா விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறார்கள். விண்ணப்பத்தில் எப்படிப்பட்ட தவறு என்று எந்த விளக்கமும் கூறப்படவில்லை. நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரி இருந்தீர்கள்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து மஹாசபா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் அதன் மூலம் செயல்களையும் மக்களிடையே பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மொகலாய மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னும் பிரிட்டிஷ் காலனீயவாதிகள் இந்தியாவை ஆள ஆரம்பிப்பதற்கு முன்னும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த எல்லோரும் இந்துக்களே எனவும், அதனால் இப்போது அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி அப்பாவி மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள். குடிமக்கள் எல்லோருக்கும் பிரதம மந்திரியான நீங்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் இந்துக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இந்தியக் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் எடுத்துக்கொண்டு அவற்றைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இளைஞர்கள் மனதை தங்கள் கொள்கைகளின் பக்கம் திருப்ப முயன்று வருகிறார்கள். இதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நீங்கள் மௌனம் சாதித்தீர்கள்.

குஜராத்தில் பி.ஜே.பி.யின் மதவாதக் கொள்கை பற்றிப் பேசுவதற்காகத் தன் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கடசியைச் சேர்ந்த ஒருவரையும் அவர் மனைவியையும் இந்துத்துவவாதிகள் சுட்டிருக்கிறார்கள். இதைப் பற்றியும் நீங்கள் எதுவும் கூறவில்லை.

இதுவரை மௌனம் சாதித்துவந்த நீங்கள் திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்னால் புதுதில்லியில் நடந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பிறரை மதம் மாற்ற முயற்சிப்பவர்களைக் கண்டிப்புடன் எச்சரித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதாகப் பத்திரிக்கையில் வந்ததை அப்படியே கீழே தருகிறேன். “மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; சமூக அமைதியைக் குலைக்கும் அத்தகைய வன்முறைகளைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”. மேலும் நீங்கள் கூறியது: “‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’ என்ற கொள்கையின் அடிப்படையில் எங்கள் அரசு செயல்படுகிறது. இதை ஒவ்வொரு மேஜையிலும் உணவு; ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில்; ஒவ்வொருவருக்கும் வேலை; ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் மற்றும் கழிப்பறை’ என எளிதாகக் கூறலாம். இந்தக் கொள்கைதான் இந்தியாவைப் பெருமையுடைய நாடாக மாற்றும். ஒற்றுமை மூலம்தான் நாம் இதை அடைய முடியும். ஒற்றுமை நம்மை பலமடையச் செய்யும். வேற்றுமை நம்மை பலவீனமடையச் செய்யும்”. மேலும் நீங்கள் கூறியது: “எங்கள் அரசு எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பளிக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற முழுச் சுதந்திரத்தை அரசு உறுதிசெய்கிறது. பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த மதக் குழுக்களோ அல்லது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மதக் குழுக்களோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை உமிழ, மோதலை ஏற்படுத்த விட மாட்டோம். மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய வன்முறைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.”

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் ‘டில்லியில் கிறிஸ்தவப் பள்ளிகள் மீதும் தேவாலயங்கள் மீதும் நடந்த வன்முறைகளை அனுமதிக்க முடியாது. அது தொடர்பான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு சமுதாயத்தில் இடமில்லை’ என்று கூறியிருக்கிறார்.

இந்தத் திடீர் மாற்றம் உங்களிடம் எப்படி, எப்போது வந்தது? இந்தியாவிற்கு வந்துவிட்டுப் போன அமெரிக்க அதிபர் ஒபாமா தான் திரும்பிச் செல்வதற்கு கொஞ்ச நேரம் முன்பு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நாசூக்காக மத நல்லிணக்கம்தான் இந்தியாவுக்கு நல்லது. இந்தியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று சொன்னதன் விளைவா? பின் அவர்கள் நாட்டிற்குச் சென்ற பிறகு அங்கு நடந்த ஒரு ஜெபக் கூட்டத்தில் இந்தியாவில் இந்துக்களல்லாத இந்தியர்கள் மேல் நடக்கும் வன்முறைகளை அறிந்தால் காந்திஜி அதிர்ச்சி அடைவார் என்று சொன்ன பிறகா?

இதைவிட முக்கியமாக டில்லி சட்டசபைத் தேர்தலில் மக்கள் உங்கள் கட்சியை மூன்றே இடங்களில் ஜெயிக்கவைத்து உங்கள் கட்சியோடு தொடர்புடைய இந்துத்துவவாதக் கட்சிகள் செய்த செயல்களும் அவற்றை நீங்கள் கண்டிக்காததும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்திய பிறகா? தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளர் டிபாசிட் இழந்த பரிதாபத்தைப் பார்த்த பிறகா?

எந்த நிகழ்ச்சி உங்களை மாற்றியிருந்தாலும் இந்திய மக்களாகிய எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நீங்கள் கூறியவற்றை அப்படியே செயலில் காட்ட வேண்டும். குஜராத்தில் கம்யூனிஸ்ட் தலைவரைச் சுட்டவர்களைத் தீவிரமாகத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். மறுமதமாற்றம் செய்பவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவேண்டும். மதம் சார்ந்த வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும்படி சட்டம் இயற்ற வேண்டும். இதைப் பயமின்றிச் செய்ய போலீஸ், சி. பி. ஐ., அரசு தரப்பு வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். ‘லவ் ஜிஹாட்’ என்னும் பெயரில் காதலர்களைப் பிரிப்பவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எல்லா மதத்தினரின் முக்கிய தினங்களிலும் அவர்களை இந்தியப் பிரதமர் என்ற முறையில் நீங்கள் மனதார வாழ்த்த வேண்டும். ட்விட்டர் செய்தி எல்லாருக்கும் போய்ச் சேராது. இந்துக்கள் நிறையப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் சாமியார்களின் வாயை அடைக்க வேண்டும். நீங்கள் பேசும் மேடைகளில் எல்லாம் மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்தியா முன்னேற அது ஒன்றுதான் வழி என்று அடித்துச் சொல்ல வேண்டும். பாடப் புத்தகங்களில் மத விரோதத்தைத் தூண்டும் பாடங்களை அகற்ற வேண்டும். கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நீங்கள் பேசியது உங்கள் உள்ளத்திலிருந்து வந்தது என்று நாங்கள் நம்ப வேண்டுமானால் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

செய்வீர்களா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.