Featuredஇலக்கியம்கட்டுரைகள்

ஆண்மையின் தாய்மை!

-முனைவர் கமலம் சங்கர்

தாய்மை என்னும் சொல் பெண்மையை நினைவுபடுத்துவதே. பத்து மாதம் கருவிலே சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணின் பொறுப்பு இயற்கையின் அற்புதம். பெண்மையின் பூரணத்துவம் தாய்மையில் என்பது உலக வழக்கு. ஏன்? ஒவ்வொரு பெண்ணுமே ஏற்பதும் கூட.

கவியரசர் கண்ணதாசன்,

எந்த மனதில் பாசம் உண்டோ

அந்த மனமே அம்மா அம்மா  (படம் : எங்க மாமா)

என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.

அன்பு இல்லாத ஆண்மனம் உண்டா?

பாசம் பொழியாத ஆண்மனத்தைக் காட்ட முடியுமா?

அன்பும் பாசமும் காட்டி உருக வைக்கும் அண்ணன் பாத்திரம் திரைப்படங்களில் காட்டப்படும் போது பாசத்துக்கு ஓர் உருவம் கிடைக்கிறது.

மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி

திருமகளே செல்க!

வாழ்ந்த வீடும் கொண்டவன் வீடும்

மணம் பெறவே செல்க!  (படம் : பச்சை விளக்கு)

பிறந்த வீடும் புகுந்த வீடும் அவளால் சிறக்க  வேண்டும் என நெகிழ்ந்து வாழ்த்தும் அண்ணனின் மனம் அன்னையின் மனம்தானே?

தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று

பாடும் குரல் கேட்குது  (படம் : தங்கைக்காக)

என்று தங்கை ஒருத்தி தன் அண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் உணர்ந்து வணங்குகிறாள்.

அன்பு காதலாகும் போது… ஆணின் மனம் உருகித் தவிக்கும்போது… தாய்மையும் அவனது உயிர்த் துடிப்பாகிறது. காதலனே – கணவனே – தாயாகி உருகும் பாடல்கள், உருக வைக்கும் திரைப் பாடல்கள் எத்தனை!

பெண் காதலில் முதன்முதலாக உணர்வதே பாதுகாப்புத் தரும் அணைப்பு. தாயின் அணைப்புக்குப் பின், தந்தை தரும் பாதுகாப்புக்குப் பின் வளர்ந்த பெண் அதே பிம்பத்தை உணரும் ஓர் ஆணிடம் தன் மனத்தைப் பறிகொடுக்கிறாள். மனம் அவள் மனத்தில் பொங்கும் தாய்மை தரும் இதத்தை சுவைக்கச் சுவைக்க… தன்னை இழப்பதும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை அவளுக்கு.

தாயார் அணைந்திருந்த மயக்கமுண்டுநான்

தந்தை மடியிருந்த பழக்கமுண்டு

நீ யாரோ நான் யாரோ தெரியாதுஇன்று

நேர்ந்தது என்ன வென்று புரியாது.  (படம் : பரிசு)

என்றும்,

தங்கமகள் கூந்தல் என்று

தாய் முடித்துப் பூவும் வைப்பாள்

மங்கை மணம் முடிந்துவிட்டால்

மணவாளன் பூ முடிப்பான்  (படம் : கைராசி)

என்றும் பெண்ணொருத்தி தாயின் அன்பைக் காதலனிடம் காணும் இயல்பைக் காட்டுகிறார் கவியரசர்.

உயிரை வளர்ப்பானாம் காதலன்

தாம் விரும்பி மணமுடிப்பார்

தம் உயிரில் நமை வளர்ப்பார்  (படம் : கைராசி)

உண்மை! உயிரோடு சேரும் உறவுதானே காதல்? முதலில் சேர்க்கிறது. அதன்பின் ஆணின் உயிர் வளர்க்கும் உயிராகிறாள் பெண்.

குழிவிழுந்த கன்னத்தை என்

இதழில் மூடவாஉன்னைக்

குழந்தையாக்கி மடியில் வைத்துப்

பாட்டுப் பாடவா?  (படம் : பனித்திரை)

என்று கேட்கும் காதலன் கனிவின் உருவமாகிறான்.

பெண்ணுக்கு வேண்டியது அதுதான். அவள் பிள்ளை பெற்றுத் தாயானாலும் அவள் மனத்தில் புதைந்து கிடக்கும் ‘குழந்தை மனசு’ அதைக் கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கும் அப்போது மகிழும்!

சின்னச் சின்னப் பறவை

அன்னை அவள் மடியில்

தவழ்வதுபோல் நான் தவழ்ந்திருப்பேன்  (படம் : போலீஸ்காரன் மகள்)

இப்போது புரிகிறதா பெண்ணின் மனசு? அதன் எதிரொலியாக…

கண்ணை மெல்ல மறைத்து

உன்னைக் கையில் எடுத்து

காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்  (படம் : போலீஸ்காரன் மகள்)

இப்படி நம்பிக்கையளிக்கிறான் ஆண். பெண்ணின் எதிர்பார்ப்பு, அவனிடம் தான் பெறத் தவிக்கும் தாய்மை வெளிப்பாடு! அவ்ன் அந்தத் தாய்மையுணர்வை நம்பிக்கையாக்கி, உறவுக்கு உரம் சேர்க்கிறான். பெண்ணின் உயிரோ கொடியாகப் பின்னிக் கொள்கிறது.

ஆலங்குடி சோமுவும் இத்தகைய நுண்மையான மனவோட்டத்தைத் தீட்டுகிறார்.

ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி

அருகில் நெருங்கிடவோ

உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே

அள்ளி அணைத்திடவா?

அன்னையைன் போலே உன்னுடல் தன்னை

வருடிக் கொடுத்திடவாநீ

அமைதியுடன் துயில் கொள்ளும்

அழகை ரசித்திடவா?  (படம் : கார்த்திகை தீபம்)

குழந்தையின் கண்களைத் தன் கையால் மூடி மூடி எடுப்பதும் – அள்ளி அணைப்பதும் – வருடிக் கொடுப்பதும் – உறங்க வைப்பதும் – உறங்கும் அமைதியான அழகை ரசிப்பதும், முத்தமிடுவதும்… அட எல்லாமே தாய்மை வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிற செயல்கள்!

தலையைத் தடவி – உச்சி முகர்ந்து – கன்னம் வருடி.. பூச்சூட்டி… என்றெல்லாம் ஆண் செய்யும் செயல்கள் பெண்ணை எப்படிக் குழந்தையாக்கிக் குதூகலிக்கச் செய்கின்றன என்பது அவளுக்கு மட்டும்தான் புரியும், அவள் இணங்குவதிலிருந்து அவனுக்குத் தெரியும்.

ஆணின் மனத்தில் பொங்குத் தாய்மைப் பிரவாகமே பெண் உணரும் காதல்! காமம்!! தாம்பத்திய சுகம்!!! எல்லாம்! எல்லாம்!! எல்லாமே!!!

கவியரசரின் கடைசிப் பாடலான ‘கண்ணே கலைமானே’ பாடல், ஆண் உள்ளத்தில் உறைந்து பிடந்து விரிந்து வானளவு பரவிய தாய்மை வெளிப்பாடுதானே?

உலக வரலாற்றில் போற்றப்படும் தலைவர்கள் எல்லாருமே இத்தகைய தாய்மையை அடித்தளமாக்கி மனித குலத்துக்கு வளம் சேர்த்தவர்கள் தாமே?

தாய்மை உடல் சார்ந்த மொழி அல்ல, உள்ளம் சார்ந்தது; உயிரைச் சார்ந்தது.

எனினும்…

உடலாலும் தாய்மை ஏற்று அதன் மணம் பரப்புபவள் பெண்! ஆம்! இது இயற்கையின் அதிசயம்!

உயிராலும் உள்ளத்தாலும் மட்டுமே தாய்மை ஏற்று, அந்த வரத்தைப் பரிசாக்குகிறான் ஆண்! ஆம்! இது இயற்கையின் பேரதிசயம்!

இந்த இணைப்பே இயற்கை இந்த உலகம் என்றும் வாழ வழங்கியிருக்கும் கொடை! அற்புதம்! ஆச்சர்யம்! எல்லாமே!

ஒற்றை வரியில் சொன்னால்…

ஆண்மையின் தாய்மையே பெண்மையின் தாய்மைக்கு வேர்! எல்லா உறவுகளிலும்!! எல்லா நிலைகளிலும்!!!

-முனைவர் கமலம் சங்கர், சென்னை.

06.03.2015

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    எல்லோரும் தாய்மையை பெண்ணிடத்தே மட்டும் காண்கிற நிலையில்…
    முதல் முறையாக ஆண்மையிடத்தே தாய்மை இருப்பதை அழகாக..  தெளிவாக..  திரையிசைப் பாடல்களுடன் உதாரணங்கள் தந்து மகளிர் தின சிறப்புப் பதிவை
    வழங்கியிருக்கும் முனைவர் கமலம் ஷங்கர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. நன்றிகள்…

    காவிரிமைந்தன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க