– சுரேஜமீ

கோதையின்  நாயகனே எங்கள்
கீதையின் திருமகனே என்றும்
அனுபவம் தரும் வழியில்
அறிவினைப் பெறுவதற்கு உன்
திருநாம மெனும் அந்தத்
தெவிட்டாத தேனெதற்கு?

கோகுலக் களியாட்டம் முதல்                      lord-krishna
பார்குலப் போராட்டம் வரை
பன்முக அரிதாரம் கொண்ட
பரந்தாமன் உனக் கென்றும்
அவனியில் மாந்தர் படும்
அல்லல்கள் புரியாதோ?

பிறப்பினில் ஏது  குற்றம்
அறம் வளர்ப்பதில் மாறு
பட்டுப் பின் பட்டபின்
பாடம் கற்கும் நிலையினைக்
கொடுப்பதற்கு மண்ணில் எதற்கினிக்
கடவுளெனும் கேள்வி?

ஐவரை வைத்து நீயும்
அறத்தினை நாட்டி எங்கள்
குலத்தினைக் காப்பதற்கு நெறி
களத்தினை ஏற்படுத்தி எம்மதி
தனை எழுப்பி விட்ட
அந்தக் கண்ணனெங்கே?

யாவரும் வேண்டுவது உன்
மாபெரும் துணையன்றி வேறு
தேவையும் எமக்கில்லை இனி
தூயனற் சிந்தனையில் என்றும்
மற்றவர் துயர் களையும்
மாண்பினைத் தருவாயா?

ஏடுகள் சொல்வதிலும் உள்ள
ஏற்றங்கள் தெளிவுடனே பற்றிப்
போற்றுதல் செய்து நல்ல
தேற்றுதல் பெற்று நாளும்
காலத்தை வென்றிடும் உன்
கருணையைப்  புரிவாயா?

மாயத்திரை விலக்கி
மந்திரங்கள் சொல்வாயோ?
தவிக்கும் எம்முன்னே
தந்திரங்கள் தாராயோ?
கர்ம வினையென்னும்
கல்லினை அகற்றாயோ?
பாராமுக மிருந்தால்
பரந்தாமா உனையன்றி
பாரினில் யாருளர்?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *