-செண்பக ஜெகதீசன்

நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (திருக்குறள்-124: அடக்கமுடைமை)

புதுக் கவிதையில்…

உயர்விலும் தாழ்வினிலும்,
உள்ளநிலை மாறாது
அடக்கமாய் இருப்போரின்
சிறப்பின் தோற்றம்,
உயர் மலையினும்
உயர்வானதே…!

குறும்பாவில்…

எந்நிலையிலும் மாறாத
அடக்கமுடையோர் தோற்றம்,
உயர்வானதே மலையை விடவும்…!

மரபுக் கவிதையில்…

வெற்றி பெற்ற உயர்வினிலும்
வீழ்ச்சி யடைந்த தாழ்வினிலும்,
பெற்றதை வைத்துப் பொறுமையுடன்
பொங்கி எழாதே அடங்கிவாழ்வோர்,
பெற்றிடும் தோற்றம் பெரிதன்றோ
பெருமை மிக்க உருவன்றோ,
கொற்றவன் போலத் தலைநிமிர்ந்த
கல்மலை தாண்டிய உயர்வன்றோ…!

லிமரைக்கூ…

உயர்வினிலும் தாழ்வினிலும் மாறமாட்டார் நிலை,
அடக்கமுடன் வாழும் இவர்தம்
தோற்றத்தைவிட உயர்ந்ததல்ல என்றுமே மலை…!

கிராமிய பாணியில்…

அடங்கியிருக்கணும் அடங்கியிருக்கணும்
ஆமபோல அடங்கியிருக்கணும்…
வாழ்க்கயில ஒயர்வுவரும்
வழுக்கிவுழும் தாழ்வுவரும்,
வாழ்வுவந்தா ஆடாம
தாழ்வுவந்தா ஓடாம
ஒண்ணா எடுத்துக்கணும்
ரெண்டயும்
ஒண்ணா எடுத்துக்கணும்…
அப்புடிப்பட்டவன் உருவந்தான்
அடங்கியிருக்கவன் உருவந்தான்,
பெருசுதான் பெருசுதான்
மலயவிடப் பெருசுதான்…
அதால
அடங்கியிருக்கணும் அடங்கியிருக்கணும்
ஆமபோல அடங்கியிருக்கணும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *