ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 6

0

அண்ணாமலை சுகுமாரன்

 

5)   நிலமைந்து நீர்நாங்கு நீடங்கி மூன்றே
யுலவையிரண் டொன்று விண்

நிலம் = பிருத்துவி எனும் நிலம்
ஐந்து = ஐந்து பகுதி  ஆகவும்
நீர் = அப்பு எனும் நீர்
நான்கு = நான்கு பகுதியாகவும்
நீடு =  நீண்ட
அங்கி = தேயு எனும் நெருப்பு
மூன்று =    மூன்று பகுதியாகவும்
உலகை = வாயு எனும் பூதம்
இரண்டு = இரண்டு பகுதியாகவும்
விண் =  ஆகாயம் எனும் பூதம்
ஒன்று = ஒரு பகுதியாகவும்

பஞ்ச  பூதங்களான நிலம் ஐந்து பங்குகளாகவும் , நீர் நான்கு பங்குகளாகவும், நெருப்பு மூன்று பங்குகளாகவும் ,வாயு இரண்டு பங்குகளாகவும் ,விண் ஒரு பங்காகவும் உடையது இவ்வுடல் என்பதே இக்குறளின் மையக் கருத்தாகும்.

இதையே  வேறு சில உரையாசிரியர்கள் நிலமைந்து என்றதும் குறிஞ்சி, முல்லை,மருதம் ,நெய்தல்  பாலை ஆகிய   ஐந்து நிலைகளில்  நிலம் அமைந்துள்ளது எனவும் பொருள்படும் படிக்கூறுகின்றனர் .

ஆயினும் இந்த முதல் அதிகாரம் பிறப்பின் தன்மையினைக கூறி வருவதால் முதலில் அளிக்கப்பட்டுள்ள பொருளே பொருத்தமாக இருப்பதாகத் தெரிகிறது.


6 ) மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி  யைந்து

மாயன் = திருமாலும்
பிரமன் = பிரமனும்
உருத்திரன் = RUTHTHIRANUM
MAGESAN =மகேசனும்
ஆயும் = வேதங்களினால் ஆராயப்படும்
சிவமூர்த்தி = சதசிவனான
ஐந்து = பஞ்ச மூர்த்திகளாவார்கள்.

திருமாலும் ,பிரம்மனும் உருத்திரனும் .மகேசுவரனும், சிவனும் பஞ்ச மூர்த்திகளாவார்.

பிருத்திவிக்கு பிரம்மனும் ,அப்புவிற்கு திருமாலும் ,தேயுவுக்கு உருத்திரனும், வாயுவிற்கு மகேசனும் ,ஆகாயத்திற்கு சிவனும் அதிபர்களாவார்கள்.


7 )  மாலயங்கி யிரவி மதியுமையோ
டேலுந  திகழ் சக்தியாறு

ஏலும் = பொருந்திய
திகழ் = விளங்குகின்ற
சக்தி = சக்திகள்
மால்  = திருமால்
அயன்  = பிரம்மா
உத்திரன்  =உருத்திரன்
இரவி = சூரியனும்
மதி = சந்திரனும்
உமை =உமா தேவியும்
ஆறு = ஆகிய அறுவராம்

சக்திகள் அறுவர் உடலில் இருப்பதாகக் கூறுகிறது  இந்தக் குறள்

திருமாலின் சக்தியாகிய இலக்குமியும் ,பிரம்மாவின் சக்தியாகிய சரசுவதியும் ,அக்னியும் சூரியனும் ,பார்வதியும் இந்தத் தேகத்தில் பொருந்திப் பிரகாசிக்கின்ற ஆறு சக்திகளாக இருக்கின்றனர்.

ஞான சாதனைக்கும், இலட்சியத்திற்க்கும் இலக்குமியும், அறிவுக்கு சரசுவதியும், அஞ்ஞான இருளை நீக்கவும் , பிராணனுக்கு வலிமை சேர்க்கவும்  அக்னியும் ,பிரம்மத்தைக் காட்ட  சூரியனும் ,தேகத்தை வளர்க்கவும் ,மனதின் வலிமையைக் கூட்ட சந்திரனும், ஞானம் பெறுவதற்கு உமை அன்னையும் உள்லொளியுடன் உயிறாற்றல்  சக்தியாக விளங்குகிறார்கள் எனலாம்

இன்னும் நிறைய குறள் ஆழமான ஞானத்தின்  திறவு கோலாக அடுத்து அடுத்து இருப்பதால், சற்று சுருக்கமாகவே முதலில் வரும் குறள்களைக்  காணலாம் என நினைக்கிறேன் .எனினும் தேவைப் படும் இடங்களில் விரிவாகவே பொருளை விளக்க முயல்கிறேன் .சித்தர்களின் திருவருள் கூடின் மீதியை அடுத்து காணலாம் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.