குறளின் கதிர்களாய்…(70)
-செண்பக ஜெகதீசன்
செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
தில்லாளி னூடி விடும். (திருக்குறள்-1039: உழவு)
புதுக் கவிதையில்…
நிலத்துக்குரியவன்
நித்தம் சென்று பேணினால்தான்,
நின்று வளரும் பயிர்
நிறைய வரும் மகசூல்…
சோம்பலில்
பாராது விட்டுவிட்டால்,
நிலமும்
கோபத்தில் மனைவிபோல
ஊடல் கொள்ளும்,
பலனேதும் வராது…!
குறும்பாவில்…
நித்தம் பேணிடு
நிலத்தை மனைவிபோல்,
இல்லையேல் ஊடிடும்
இரண்டும்…!
மரபுக் கவிதையில்…
நிலத்தின் சொந்தக் காரனும்தான்
நித்தம் சென்று நீர்பாய்ச்சிப்
பலரும் மெச்சப் பண்படுத்திப்
பாடு பட்டே வந்தால்தான்,
நிலமதில் பயிரும் நிமிர்ந்துவரும்
நிறைய மகசூல் கொண்டுவரும்,
குலமகள் ஊடல் கொள்வதுபோல்
காட்டுமே நிலமவன் சோம்பலிலே…!
லிமரைக்கூ…
நேரில் செல்லவேண்டும் நிலத்திற்கு தினம்,
செல்லாமல் சோம்பியவன் நிலம்
மாறிடுமே ஊடல்கொண்ட இல்லாள் இனம்…!
கிராமிய பாணியில்…
காட்டாத காட்டாத
சோம்பலத்தான் காட்டாத,
சொந்தமான நெலத்தத்தான்
சோர்வுல்லாமத் தெனம்பாரு..
சோம்பலாவே நீயிருந்தா
கோவிச்சிக்கும் நெலங்கூட
கெட்டுன பொண்டாட்டிபோல,
கெட்டுப்போவும் எல்லாமுமே…
அதால,
காட்டாத காட்டாத
சோம்பலத்தான் காட்டாத…!