மீனாட்சி பாலகணேஷ்.

 

காதலனை அறிந்தாள்!

கண்ணொடு கண்ணிணை நோக்கி, உளம் மாறிப் புகுந்து காதலில் ஒன்றுபடுவது ஒருவகை. ஒரு மங்கை நல்லாளைப் பற்றியோ அல்லது ஆடவருள் உயர்வானவன் பற்றியோ மற்றொருவர் வாயிலாகக் கேள்வியுற்று ஒருவரை ஒருவர் காணாமலேயே காதல் வயப்படுவது இன்னொரு வகை. நிடத நாட்டு மன்னனான நளனுக்கும் விதர்ப்ப நாட்டரசன் மகள் தமயந்திக்குமுண்டான காதல் இவ்வகைப்பட்டதாம்!

நீணிலத்தால் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தால் பொய்கைத் தலம்சிவப்ப- மாணி றத்தான்

முன்’ தோன்றிய அன்னப்பறவை ஒன்றே நளன் தமயந்தி இருவரிடையும் காதல் பிறக்கக் காரண கர்த்தாவாயிற்று! அக்காதல் முளைவிட்ட சிறிது நேரத்திலேயே பெரும் மரமாகச் செழித்து வளர்ந்ததற்கும் அன்னத்தின் பங்கு மகத்தானதாகும்.

“உன் இசைமுகந்த தோளுக்கு இசைவாள், வசையில் தமையந்தி என்றோதும் தையலாள்,” என்று நளன் உள்ளத்தில் பெருத்த ஆவலையும் ஆர்வத்தையும் காதலையும் ஏக்கத்தையும் தமயந்தி பால் எழுப்பி விட்டு விடுகின்றது அந்த மடவன்னம்! (உனது புகழ் வாய்ந்த தோளுக்கு இசைந்தவள் குற்றமற்றவளான தமயந்தி எனப்பொருள்).

themozhi (1)
அன்னம் மொழிந்த சொற்கள் செவிவழியாகப் புகுந்து அவனுடைய மனத்தை அடைவதற்கு முன்பாகவே, தமயந்தி என்னும் மடந்தை நளனுடைய மனக்கோயிலினுள் புகுந்து அவனைத் தன் வசமாக்கிக் கொண்டு விட்டாள் என அழகுற விவரிக்கிறார் நளவெண்பா எனும் இந்நூலினை யாத்த புலவர் புகழேந்தியார்.

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்- சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.

மன்மதன் அம்புகளுக்கு இலக்காகி விட்ட நளமன்னன் துடிதுடித்து, “யாரவள் அம்மடந்தை?” எனக் கேட்கத் தலைப்பட்டான்.

இங்கு அவனுக்கு தமயந்தியைப் பற்றிக் கூறுகின்றது அன்னம். அவள் விதர்ப்ப நாட்டரசன் மகள், என அவளழகையும் குணங்களையும் கவினுற விவரித்து, மன்னன் ஆவலையும் காதலையும் பெருகச் செய்கின்றது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நான்கு பெண்மைக் குணங்களும் நான்கு வகைச் சேனைகளாகவும், ஐம்புலன்களும் ஐந்து நல்ல அமைச்சர்களாகவும், காற்சிலம்பொலியே முரசமாகவும், தன் கண்களே வேற்படையும் வாளுமாகக் கொண்டு முகமெனும் நிலாவட்டக் குடையின் கீழ் பெண்மை அரசு வீற்றுள்ள தன்மையுடையவள் தமயந்தி எனக் கூறுகின்றது அன்னப்பறவை.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பேஅணிமுரசா- வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

இப்படிப்பட்ட பெருமையுடைய மங்கையைக் கண்களால் காணாமலே அவளிடம் காதல் கொள்கிறான் நளன். இதில் ஆச்சரியமும் உண்டோ? அன்னத்தையே தன் காதலைச் சொல்ல அவளிடம் அனுப்புகிறான்.

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும் அன்னம் கூறியது கேட்ட பெண்மயிலாள் உள்ளமும் மன்னன் பால் எழுந்த காதலால் துடித்தது! ” அன்னமே! என் நிலையை அவரிடம் சென்று சொல்வாயாக!” எனப் பதைத்தாள். அன்னமும் அவ்வாறே சென்று அவன்பால் அவள் காதலை உரைத்தது.

காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் காணாமலே வளரும் காதலுக்கு ஒரு பெருத்த இடையூறு வருகின்றது. சுயம்வரம் என்பதன் வடிவில்!

விதர்ப்ப நாட்டரசன் வீமன் தன் மகளுக்கு சுயம்வரம் நடத்தத் தீர்மானித்து எல்லா மன்னர்களுக்கும் செய்தி அனுப்புகிறான். நளனும் விதர்ப்ப தேசத்தை நோக்கி விரைகின்றான். தமயந்தியின் குணநலன்களைக் கேள்வியுற்ற தேவேந்திரனும் மற்ற தேவர்களும் அந்த சுயம்வரத்திற்கு வருகின்றனர். அது மட்டுமின்றி, நளனையே தங்கள் தூதுவனாக தமயந்தி பால் அனுப்பி, “எங்களில் ஒருவருக்கு மணமாலை சூட்டக் கூறுவாயாக,” என்கின்றனர்.

காதல் திரைப்படங்களில் வருவது போல இது என்னவொரு கொடுமை! கடமையின் பால் கட்டுண்டு காதலை மறக்க வேண்டிய நிலைக்கு உந்தப்படுகிறான் நளன். அவன் செய்யக் கூடியது இங்கு ஒன்றுமே இல்லை.

நளன் – தமயந்தி கதை சற்றும் விறுவிறுப்புக் குறையாத அழகான காதல் கதை!

தன் மனத்துக் காதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு தமயந்தி பால் தேவர்கோனுக்காகத் தூது செல்கிறான் நளன். கன்னிமாடத்தில் அவள் முன்பு போய் நிற்கிறான். இங்கு தான் ஆச்சரியம்.

முன்பின் ஒருவரை ஒருவர் கண்டறியாத இரு காதலரும் ஒருவரை ஒருவர் தம் நோக்கினாலேயே இனம் கண்டு கொள்கின்றனர். இது தான் காதலின் வலிமை! குவளை மலர்களும் தாமரை மலர்களும் ஒன்றினிடத்தே ஒன்று பூத்தது போல, இருவர் கண்களும் காதல் நோக்கினாலேயே ஒன்றில் ஒன்று சென்று கலந்தனவாம். கடமைக்கும் காதலுக்கும் இடையே தடுமாற்றம் கொள்கிறான் நிடத நாட்டரசன்.

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே- ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
பொதுநோக்கு எதிர்நோக்கும் போது.

இவ்வாறு சிந்தையில் குடிகொண்ட காதலனைக் கண்டு அறிந்தவளான தமயந்தியின் மன நிறை அழிந்து படுகின்றது. காதலுணர்வு பெருகி வர அவனை நோக்கிய வண்ணம் இருக்கிறாள்; அவனுடைய அழகுக் கடலானது அவளைக் கரையேற விடவில்லை என்கிறார் புலவர். அவன் தன்னிடம் வந்த காரணத்தை அவள் அறிந்திலள். முன்பின் கண்டறியாத அவன் தான் நளன் என எவ்வாறு அவள் தெரிந்து கொண்டாள்? இது தான் காதலின் உள்ளுணர்வோ?

அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, “காவல் கடந்தெங்கள் கன்னிமாடம் புகுந்த நீ யார்?”என்றவளிடம், தான் யாரெனக் கூறி, “என் சொல்லை இகழாது தேவர்கோமானுக்கு நீ மாலை சூட்டுக,” என்கிறான்.

கேட்டவள் ஒரு கணம் சிந்திக்கிறாள். அவன் கடமையின் பொருட்டு தூதுவனாகத் தன்னிடம் செய்தி கூற வந்துள்ளான் என அறிந்தாள். இனி அவனால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. தங்கள் காதல் வெற்றிபெறத் தானே அவனுக்கு சுயம்வரத்தில் மணமாலை சூட்டி விடுவது என உறுதி கொள்கிறாள்.

தன் மனதின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சில சொற்களைக் கூறுகிறாள். பின்னால் இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காது என அவளுக்குத் தெரியும். “இந்த சுயம்வரந்தான் நின் பொருட்டால் என்பதனை நீ நினைவில் கொள்க. அந்தத் தேவர்களுடன் நீயும் சுயம்வர மண்டபத்துக்கு நாளை எழுந்தருள்க,” என வேண்டுகிறாள்.

அவள் துயரம் இனிமேல் தான் ஆரம்பமாகின்றது. “இவன்பால் நான் காதலுற்றேன். இவனோ மற்றவர்க்கு மாலையிடு எனக்கூறி என்னிடம் தூது வந்தான். இவன் எவ்வாறு என்னை மணந்து கொள்வான்,” என எண்ணி எண்ணித் துயருற்றாள். பெருமூச்செறிந்தாள்; வியர்த்தாள்; சோர்ந்து வீழ்ந்தாள்.

‘உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல்’ உயிர் சோர்ந்து நின்றாள்.

ஞாயிறு மறைந்து அந்திப்பொழுது தோன்றுகிறது. நிலவு அவளைச் சுடுவதற்கென்றே எழுகின்றது; கண்ணீர் பெருக, “மன்னவனே! யான் இந்த இரவிற்கு இரை தானோ? இந்த இரவுப் பொழுது விரைந்து போகாதோ?” எனப் பலவாறு புலம்புகிறாள் தமயந்தி. இவளுடைய ஆழ்ந்த துயரத்துடன் கூடியதாகப் பொழுதும் புலர்கின்றது. கதிரவனும் தோன்றுகிறான்.

சுயம்வர தினம். மண்டபத்தில் மன்னர் பலரும் வந்துள்ளனர். மன்னர்கள் பலரின் நடுவினில் நளனும் அமர்ந்திருக்கிறான். அத்தனை மன்னர்களும் தமயந்தியின் வருகையை எதிர் நோக்கி உள்ளனர். மிகுந்த தாமரை மலர்கள் பூத்துள்ள ஒரு தடாகத்தில் அன்னப்பறவை புகுவது போல தமயந்தி சென்று புகுகின்றாள். தோழிகள் ஒவ்வொரு மன்னனாக, இவன் சேரன், சோழன், பாண்டியன், அவந்தி மன்னன், பாஞ்சால தேச மன்னன், கோசல நாட்டு மன்னன், என அவர்கள் பெயரையும் புகழையும் விளக்கிக் கூறுகின்றனர். தமயந்தியின் கண்கள் தனக்குடையவனான நளனையே தேடுகின்றன; பார்த்துக் கொண்டே செல்கின்றாள்.

ஓரிடத்தில் நான்கு தேவர்களும் நளன் உருவை எடுத்துக் கொண்டு உருமாறி வந்து அவன் அருகிலேயே அமர்ந்திருந்தனர். தமயந்தி அவர்களைக் காண்கிறாள். இல்லை, இல்லை- ஐந்து நளர்களைக் கண்டாள். இவர்களில் உண்மையான நளன் எவன் என மயங்கி அவளுடைய உள்ளம் ஊசலாடுகின்றது. என்ன செய்வாள் பேதை? கையிலுள்ள சுயம்வர மாலை நளனுக்கானது என அவள் உள்ளம் மட்டுமே அறியும்.

தமயந்தியின் அழகும் குணநலன்களும் குடிப்பிறப்பும் மிக்க உயர்வானது ஆகையால், நளன் எனும் ஒருவன் பால் அவள் உள்ளம் ஈடுபட்டு விட்டது என அறிந்தும், அவளைப் பெற தேவர்கள் முயல்கின்றனர். அவள் மனம் மாறுபடாது என அறிந்ததால், அவள் உள்ளம் கவர்ந்தவனின் உருவையே தாமும் எடுத்துக் கொண்டு அவளைத் தம்மில் ஒருவருக்கு மாலை சூட்டச் செய்ய முயல்கின்றனர். இது என்ன சூழ்ச்சி? அவலம்?

ஆனால் காதலின் வல்லமை மிகப் பெரிது அல்லவோ! சில கணங்கள் தான். தான் உள்ளத்தில் வரித்தவனையே எண்ணிக் கொண்டு அவனுக்கே மாலையிட அருளும்படி தெய்வத்தை வேண்டுகிறாள்: “இந்த வீமராஜனின் உண்மையான குலத்தில் உதித்த கற்பு முதலான குணங்கள் நிறைந்த கன்னி நான் ஆகில், அன்னம் எனக்குக் கூறியவனையே நான் இன்று மணமாலை சூட்ட அருளுக,” என வேண்டுகிறாள் தமயந்தி.

மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபில் செம்மைசேர்
கன்னியான் ஆகில் கடிமாலை- அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருள்என்றாள் சூழ்விதியின்
மன்னவனை தன்மனத்தே கொண்டு.

ஆகா! இப்போது அந்த இறையருள் அவளுக்கு வழிகாட்டி விட்டது. அந்த ஐவருள் உண்மை நளன் யார் என அறியும் வகை கண்டு கொண்டு விட்டாள் தமயந்தி. தான் நின்ற இடத்திலிருந்து ஐவரையும் நன்றாக நோக்குகிறாள். ஐவருள் நளன் ஒருவனே மானிடன். அவனுடைய கண்கள் மட்டுமே இமைக்கின்றன; கால்கள் தரையில் படிந்து தோய்கின்றன. அவன் அணிந்துள்ள வண்ண மலர்மாலை சிறிதே வாடிக் காணப் படுகின்றது. மற்ற நால்வரும் நளன் உருவில் இருப்பினும் அவர்கள் தேவர்கள். தேவர்கள் கண்கள் இமையாது. கால்கள் தரையில் தோயாது. அவர்களுடைய மலர் மாலைகள் வாடாது. வழி காட்டிய இறைவனை உள்ளத்தில் வழுத்தியபடி உண்மை நளனை அறிந்தாள் இலக்குமியை ஒத்த நன்னுதல் அணங்கு தமயந்தி.

கண்ணிமைத்த லால்அடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால்- எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.

தன் கையிலிருந்த மணமாலையை நளனுக்குச் சூட்டினாள்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்– எனும் குறள் காதலின் பொன்வீதியில் நளனுடன் நடை பயிலும் இவளுக்குமே பொருந்துமல்லவோ?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காதலின் பொன்வீதியில் – 2

  1. Beautiful presentation with the classic picture.
    Best wishes to Smt Meenakshi Balganesh.
    May her writings continue ever !

  2. மிகவும் எளிமையாகவும் தீஞ்சுவையோடும் படைத்திருகின்ரீர்.. நனி நன்றி.. இப்படி இன்னும் பலப் படைக்க வாழ்த்துகள்.. காத்திருக்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.