-சித்ரப்ரியங்கா பாலு

இந்த ஒரு வார்த்தையில் தான்அகிலமே உள்ளடக்கம்!
உன்ன நினச்சாலே உள்ளமெல்லாம் புல்லரிக்கும்!
கண்கண்ட தெய்வமாக் கடவுள் அனுப்பி வச்சவளே
கடவுளாவே மாறித்தான் காத்து நித்தம் ரட்சிப்பவளே!
திருமண பந்தத்துக்காக நீ சொந்தமெல்லாம் விட்டுவந்து,
தன்னவனையே தலச்சனாய்த் தாங்கித்தான் கொண்டவளே!
கட்டினவன் இஷ்டப்பட கஷ்டமுந்தான் நீயும் பட்டு,
கண்மணிகள் மூவருக்குக் கருவறையைக் கடனாகக் கொடுத்தவளே!

பெண்பிள்ள வேண்டாமென்ற பழங் கூற்றை நீ போக்க,
பத்து மாதம் என்னயுந்தான் பாதுகாத்து வளர்த்தவளே!
சந்ததியும் சிறக்கத்தான் சங்கடங்கள் பல பொறுத்து,
சிந்தை எல்லாம் என்மேல்வைத்து விந்தை உலகை காட்டியவளே!
தவமாய்த் தவமிருந்து உன் தங்கமகள் எனை ஈன்று,
தந்தை அவர் கைகளிலே தாலாட்டக் கொடுத்தவளே!
பெற்றவர் என்முகம் பார்த்துப் பூரித்து மகிழக் கண்டு,
உனக் கட்டினவன் முகம் மலரக் கண்கள் ஓரம் கசிந்தவளே!

உன் வயிற்றில் இருந்தப்போ உதைத்த வலி நீ மறந்து,
உச்சிதனை முகர்ந்து நித்தம் உள்ளம்குளிர ’இச்சு’ கொடுத்தவளே!
உதிரத்தைப் பாலாய் அளித்து உண்ணாது நீயும் தவித்து,
ஒருவாய்ச் சோறு நான் உண்ண ஓராயிரம் வார்த்தைசொல்லிக் கொஞ்சியவளே!
செல்ல மகள் நானுந்தான் சிறப்பாய் வரவிரும்பி,
பிஞ்சுவிரல் நீ பிடித்துப் பள்ளியிலே விட்டவளே!
விட்ட விரல் ஸ்பரிசத்துக்கு நானுந்தான் ஏங்கிநிற்க,
வந்ததுமே வாரியணைத்து அந்தக் குறை தீர்த்தவளே!

மகளா இருந்த நான் குமரியா மாறயிலே,
மகிழ்ச்சிப் பூரிப்பில் உள்ளம் நெகிழ்ச்சியால் நிறைந்தவளே!
பள்ளிப் படிப்பு முடிந்தும் குறையேதும் வைக்காது,
கல்லூரியின்கண் விட்டு வாழ்க்கைக் கண் திறந்தவளே!
கல்லூரியில் என்ன விட்டு உன் கண் கசிந்த காட்சியுந்தான்,
என் கண்ணுக்குள்ள நிக்குதம்மா என் நெஞ்சுக்குழி விம்முதம்மா!
சிறந்த பொறியாளனாய் நான் வெளிவந்த நேரம்,
வியந்து நின்றவளே விலைமதிப்பற்ற என் மாணிக்கமே!

மகராசி நீயுந்தான் ஒம் மக வாழ்க்கையிலே,
ஆசானாதான் உயர அகல் விளக்கா நின்னவளே!
எனப் பெத்தவளே உன்பெரும பத்தி பேசித்தான் வாய் மாளாது,
என் பேனா வரி எழுதத் தமிழ்ச் சொற்கள் போதாது!
எத்தொலைவு நீ இருந்தாலும் என் ஜீவன் நீ அம்மா!
உன்னைப் போன்ற சொந்தம் உலகில் வேறு யாரம்மா?
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
என்றும் உன் அன்பிற்காக
ஏங்கும் உன் மழலை!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *