செண்பக ஜெகதீசன்

  

 

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை 

வெரூஉம் புலிதாக் குறின்.

      -திருக்குறள் -599(ஊக்கமுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

உருவில் பெரியது யானை,

நெருங்கிட அஞ்சும்

கூரிய கொம்புடைத்தாயினும்,

ஊக்கமுடன்

உருவில் சிறிய புலி தாக்கிட,

பயந்து ஓடும்…!

 

குறும்பாவில்…

 

பெரிய வலிய கொம்பன்யானையும்

பயந்தோடும்,

ஊக்கமுடன் புலி எதிர்த்தால்…!

 

மரபுக் கவிதையில்…

 

காட்டி லுள்ள விலங்குகளில்

     காணும் பெரிய உடலுடனே

ஈட்டி போன்றே கூர்மையுடன்

     இரண்டு தந்தம் இருந்தபோதும்,

ஓட்டம் பிடிக்கும் யானையதும்

     ஊக்க முடனே புலிபாய்ந்தால்,

காட்டிடு செயலில் ஊக்கமதை

     காசினி வாழ்வில் வென்றிடவே…!

 

லிமரைக்கூ…

 

பயந்தோடும் உருவில் பெரிய யானை

ஊக்கமுடன் புலி எதிர்த்தால்,

ஊக்கம் வாழ்வில் வென்றிடும் சேனை…!

 

கிராமிய பாணியில்…

 

யானயான கொம்பன்யான

காட்டுலபெரிய கொம்பன்யான,

ஈட்டிபோல கொம்போட

எவரயுமே குத்தும்யான..

 

ஊக்கமோட காட்டுப்புலி

பாஞ்சிவந்தா வீரத்தோட,

பயந்தேஓடும் யானையுந்தான்..

 

அதால,

வேணும்வேணும் ஊக்கம்வேணும்

வெற்றிகெடைக்க ஊக்கம்வேணும்…!

 

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *