வன் கயிறு
-பத்மநாபபுரம் அரவிந்தன்
துடித்த கயிறு
அடங்கிய போது
எதையோத் திறந்து
எதுவோ போனது
விறைத்த கழுத்தில்
அழுந்தப் பதிந்த
கயிற்றின் தடம்
இருந்த இடமிருந்து
வெளிவந்து வெறித்த கண்கள்
கத்த நினைத்த நாக்கைக்
கடித்தழுத்திப் பிடித்த பற்கள்
கடை சொட்டுச் சிறுநீரும்
கால்வழி வழிய
இனியில்லை சுமையொன்றும்!
நிமிடத்தில் நிகழ்கிறது
வாழ்க்கையின் புரட்டல்
மறுயோசனை பற்றிச்
சாத்தியமற்றுப் போன
சில நிமிட அவகாசத்தில்
துடித்தடங்கியது வன்கயிறு