காதலின் பொன்வீதியில் – 10
– மீனாட்சி பாலகணேஷ்.
மனதில் தைத்த முள்!
மானின் மருண்ட பார்வை; இயற்கையாகவே எழில் பொங்கும் பால்வதனம்; அழகுக்கு யாராவது அழகு செய்வார்களோ? இருப்பினும், நந்தவன மலர்கள் அவ்விளம் மங்கையைப் போட்டி போட்டுக் கொண்டு அலங்கரித்தன. எளிய ஆசிரம உடையிலும் அவளது பேரெழில் பொங்கி வழிந்தது. அவளும் தோழியரும் நீர் கொண்டு செல்கின்றனர். ஆசிரமத்திலுள்ள எல்லாச் செடி கொடிகளுக்கும் அன்பாக நீர் வார்க்கிறாள் அம்மங்கை. ஒரு முல்லைப் பூங்கொடி அழகான மலர்களைக் கொத்துக் கொத்தாகத் தாங்கி நின்று அந்த மங்கை சகுந்தலையுடன் போட்டியிட முயலுகின்றது. தோழி ப்ரியம்வதை கூறுகிறாள்: “அனசூயா, பாரடி, இந்த இரு கொடிகளில் எது அழகு என்று உன்னால் கூற முடியுமா?”
“அனசூயா, பாரேன், இந்த முல்லைக் கொடி எத்தனை அழகாக, ஆவலாகத் தன் காதலனான மாமரத்தைத் தழுவியபடி நிற்கிறது,” என்ற சகுந்தலை அதனைக் கண்கொட்டாமல் நோக்க, கலீரெனச் சிரித்த இரு தோழிகளும், “உன் ஏக்கம் எங்களுக்குப் புரிகின்றதடி! உனக்கும் இது போல ஒரு அருமையான துணைவன் சீக்கிரமே வாய்க்கக் கடவது,” என்கின்றனர்.
“ஓ! ப்ரியம்வதா, பாரேன், இந்த வண்டு அந்த முல்லை மலர்களை விட்டு விட்டு வந்து என்னைச் சுற்றித் தொல்லை கொடுக்கிறதடி,” எனச் சகுந்தலை பதறுகிறாள். தோழிகளின் நகைப்பு மாறவே இல்லை; “இந்த நாட்டு அரசன் தான் இந்த வண்டை விரட்டி உன்னைக் காக்க வேண்டும். இந்தத் தவச்சாலையில் உள்ளோரைக் காப்பாற்றுவது அவன் கடமையல்லவோ?” எனப் பரிகசித்தனர்.
சொன்னது தான் தாமதம். புதர் மறைவிலிருந்து இத்தனை நேரம் ஒளிந்திருந்து இந்தக் காட்சிகளையும், இளம் பெண்களின் உரையாடலையும், சகுந்தலையின் பேரழகையும் கண்டு ரசித்து நின்ற மன்னன் துஷ்யந்தன் வெளிப்பட்டான்! “யாரது? என் குடிமக்களைத் தொல்லைப் படுத்துவது?” என்றான்.
வேட்டையாட வந்த இடத்தில், ஆசிரமத்தைக் கண்டவன், முனிவர்களிடம் ஆசி வாங்க வந்தான். இளம் பெண்களின் உரையாடலையும் விளையாட்டையும் கணடு களித்தவன் சகுந்தலையின் இனிய தோற்றத்தினால் கவரப்பட்டு அவள் பால் காதல் வயப்பட்டான். கண்வ மகரிஷியின் அருமை வளர்ப்பு மகளான சகுந்தலையும் அவனிடம் தன்னை அறியாமலேயே தனது இளம் உள்ளத்தினைப் பறி கொடுத்தாள்.
விரும்பிய மங்கை கிடைப்பாளா என ஏங்கிய மன்னன் துஷ்யந்தனும், கொழுகொம்பினைத் தேடி நின்ற பூங்கொடி மங்கை சகுந்தலையும் காதலின் ராஜபாட்டையில் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர். தோழிகளின் துணையால் சந்தித்தனர். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் தற்காலிகப் பிரிவு அவர்களைத் தொல்லைப் படுத்தியது.
“நில்லடி, அனசூயா, இந்த முள் என் காலில் குத்தி விட்டது பார், ” என்ற சகுந்தலை, ஒரு பொய்யான முள்ளை எடுக்கும் சாக்கில் பின்னால் திரும்பித் தன்னைப் பிரிய மனமின்றி நின்றிருந்த துஷ்யந்தனின் கண்களோடு காதல் மொழி பேசி விட்டுத் தான் போகிறாள்.
இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் தேவையே இருக்கவில்லை. மனங்கள் சங்கமித்து விட்டால், பின் வேறென்ன வேண்டும்?
“சகுந்தலா, நான் உன்னை காந்தர்வ முறைப்படி மணந்து கொள்கிறேன்,” என்றான் துஷ்யந்தன். மலர் மாலைகளை மாற்றிக் கொண்டு இயற்கை சாட்சியாக மணம் புரிந்து கொண்டனர் காதலர். இன்பமாக நாட்கள் பறந்து சென்றதே தெரியவில்லை.
மன்னன் துஷ்யந்தன் தனது தலைநகரான அஸ்தினாபுரிக்குப் போக வேண்டிய அவசர வேலை வந்துற்றது. உறவு வந்தால் பிரிவும் வருவது இயற்கை அல்லவா? கலங்கி நின்ற காதலிக்கு, “இந்த எனது மோதிரத்தை எப்போதும் உன் விரலில் அணிந்திரு சகுந்தலா. விரைவில் என் அமைச்சரை அனுப்பி உன்னைத் தலைநகருக்கு வரவழைத்துக் கொள்வேன்,” எனக் கூறி விடைபெறுகிறான் துஷ்யந்தன்.
விதியின் விளையாட்டை யாரறிவார்?
நாட்கள் உருண்டோடின. துஷ்யந்தனின் நினைவாகவே, கனவுலகிலும் நனவுலகிலும் மாறி மாறி சஞ்சரித்த வண்ணம் இருக்கிறாள் சகுந்தலை.
***
“பெண்ணே! யார் நீ? நான் உன்னை முன்பின் அறிந்திலனே! உனக்கு என்ன வேண்டும்?” அவளிடம் இந்த வினா கேட்கப்படுகிறது. கேட்டவன் அரசன் துஷ்யந்தன்; இடம்- அவனது அரசவை. சகுந்தலை அவளை அழைத்து வந்த ஆசிரமவாசிகளுடன் நிற்கிறாள்.
ஒரே கணம்- சிந்தித்துப் பார்த்தால், அவள் இதயம் எவ்வாறு துடித்திருக்கும் என நாம் அறிவோமா? கண்ணெதிரே நிற்கின்றான் காதல் கதைகள் பல பேசி, காந்தர்வ மணம் புரிந்து, அவள் கருவிலும் சுமந்திருக்கும் மகவின் தந்தையானவன். சபையோர் முன்பு என்ன அவமானம் இது! மறுமொழி கூற நாவெழவில்லை அவளுக்கு! உடன் வந்திருந்த கண்வரின் சீடர் கூறுகிறார்: “அரசே! இவள் கண்வரின் வளர்ப்பு மகள். தங்கள் மனைவி, விரைவில் தாயாகப் போகிறாள். தங்கள் அன்பு மனைவியைத் தங்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ளோம் மன்னா!”
துஷ்யந்தனுக்கு வியப்பும் சினமும் ஒருங்கே எழுகின்றன. யாரிவர்கள்? என்ன கதை இது? யாரோ ஒரு பெண்ணைக் கூட்டி வந்து என் மனைவி எனக் கூறி நிற்கின்றனர்?.
ஆயினும் அரசனல்லவா? மதி நுட்பமாக அன்றோ இதனைக் கையாள வேண்டும்?
“எனக்கு இவளை அடையாளம் தெரியவில்லை. இருப்பினும், உங்களிடம் ஏதேனும் சாட்சியங்கள் உள்ளனவா?”
ஐயகோ! காதல் உறவையும் காந்தர்வ மணத்தையும் மெய்ப்பிக்க அடையாளச் சின்னம் வேண்டுமோ?
ஆசையும், அன்பும் காதலும் ததும்பிய மனதில் இப்போது அவலமும், ஆற்றாமையும், அழுகையும் பொங்கி வர, “அரசே! இதோ, நீங்கள் எனக்களித்த மோதிரம்……..” எனக் கூறத் தொடங்கிய சகுந்தலை விக்கித்து நின்றாள். சொற்கள் வெளிவரவில்லை. கடவுளும் அவளைக் கைவிட்டு விட்டாரா என்ன? எங்கே அவன் தந்த அந்த அன்பின் பரிசான மோதிரம்? அவள் அதனை விரலை விட்டுக் கழற்றுவதே இல்லையே!
வரும் வழியில், ஆற்றில் தாகத்திற்கு நீர் பருகிய போது, மோதிரம் விரலை விட்டு நழுவி விழுந்ததா? எண்ணங்கள் அனைத்தும் துஷ்யந்தனைப் பற்றியே சுழன்று கொண்டிருந்ததால்அதை அவள் கவனிக்கவே இல்லையே!
இனி எதனைக் காட்டித் தன் காதலை, உரிமையை அவள் நிரூபிப்பது? மொழி தடுமாற, உடல் தளர, உள்ளம் உடைந்து நின்றாள் சகுந்தலை. அன்று காலில் குத்திய முள் இன்று மனதில் அல்லவா தைத்து விட்டது? யார் அதனை எடுத்துப் புண்ணை ஆற்றுவார்கள்? இது ஏன், எதனால் இவ்வாறு நடந்தது?
***
சகுந்தலை அறியாத அவளுடைய கதையின் ஒரு பகுதி …………………
விருந்தாளியின் வடிவில் அவள் காதல் கனவுகளுக்கு முடிவும், துயரத்தின் துவக்கமும் வந்தது.
வளர்ப்புத் தந்தை கண்வரின் நண்பரும், கோபத்திற்கு பிரசித்தி பெற்றவருமான துர்வாச மகரிஷி ஆசிரமத்திற்கு வருகை புரிகிறார். காதல் துணைவனைப் பிரிந்திருக்கும் சகுந்தலை, அவனைப் பற்றிய எண்ணங்களில் தன்னை மறந்து, முனிவரை வரவேற்று உபசரிக்கவும் மறந்து இருக்கிறாள். முனிவருக்கு வந்ததே கோபம்! “எதனால், யாருடைய நினைவினால் இவள் தன்னை மறந்து, அதிதிகளை உபசரிப்பதையும் மறந்து இருக்கிறாளோ அவன் இவளை மறக்கக் கடவது!” எனச் சாபமளிக்கிறார். கேட்ட தோழிகள் முனிவரைக் கெஞ்சி சமாதானப்படுத்த முயல்கின்றனர்.
“என் சாபத்தைத் திரும்பப் பெற முடியாது. அவன் சகுந்தலைக்குக் கொடுத்த ஒரு பொருளைக் கண்ணுற்றதும் அவளைத் திரும்ப நினைவு கூர்வான்,” என்கிறார் முனிவர்.
விதி எவ்வாறெல்லாம் விளையாடுகிறது! காதலின் பொன்வீதி சில சமயங்களில் கல்லும் முள்ளும் நிறைந்து கரடுமுரடாகி விடுவது ஏன்? காதலர்களின் மென்மையான உள்ளங்கள் புயலில் சிக்கிய பூங்கொடியாகத் துடிப்பதும் ஏன்?
உலகில் விடை இல்லாத ஒரே வினா இதுவாகத்தான் இருக்கும்.
***
விதியின் விளையாட்டு திசை திரும்பி, துஷ்யந்தனிடம் வருகின்றது.
அவனுடைய அரசவை: “அரசே! இந்த மீனவனிடம் உங்கள் பெயர் பொறித்த முத்திரை மோதிரம். எப்படியோ திருடி விட்டு, தான் பிடித்த மீனின் வயிற்றில் இருந்ததெனப் பொய் சொல்கிறான்.”
துஷ்யந்த மகாராஜா மோதிரத்தைப் பார்த்ததும் அயர்ந்து போகிறான்: “ஹா! இது நான் சகுந்தலைக்கு அளித்த காதல் பரிசல்லவோ? என்னைத் தேடி வந்தவளைப் பழித்து, அவமானப்படுத்தி அனுப்பினேனே! எங்கே சென்றாள் அவள்?” மனமுடைந்து துயரில் ஆழ்கிறான் மன்னன். அவளுடன் இன்பமாகக் கழித்த நாட்களின் நினைவுகள் அவனைச் சுட்டெரிக்கின்றன.
***
எல்லாத் துயரங்களுக்கும் என்றாவது ஒரு முடிவு தெரியுமல்லவா? காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் துயரங்களைத் தான் அடைவர் என்றால் காதலுக்கே மதிப்புக் குன்றி விடுமல்லவோ? சகுந்தலை- துஷ்யந்தன் காதலுக்கும் பொற்காலம் பிறந்தது.
***
தேவலோகம் சென்று திரும்பிய துஷ்யந்த மகாராஜாவை இந்திரனின் ரதம், ஓரிடத்தில் இறக்கி விட்டு விட்டுச் சென்றது. அவ்விடத்தின் அழகினை வியந்த வண்ணம் சென்று கொண்டிருந்த அரசன் கண்களில் அந்த அற்புதக் காட்சி……
சின்னஞ்சிறு ஆண் குழந்தை ஒன்று- ஐந்தாண்டுகள் நிரம்பியிருக்குமா?- ஒரு சிங்கக் குட்டியினைக் கட்டிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. முதலில் அதிர்ச்சியடைந்த மன்னன், பின் ஆச்சரியத்திலாழ்ந்தான். அழகான அந்தத் துறு துறு சிறுமகனைத் தேடித் தாயிடம் அழைத்துச் செல்லத் தாதியர் வந்தனர். குழந்தையின் கையிலிருந்த தாயத்து கழன்று கீழே விழுந்திருந்தது. துஷ்யந்தன் அதனை எடுத்துத் திரும்ப அணிவிக்கப் போனான்.
“தொடாதீர்கள் அதனை! அவனுடைய தந்தையைத் தவிர யாராவது அதனைத் தொட்டால் அது பாம்பாக மாறி உம்மைத் தீண்டி விடும்,” கூவினாள் ஒரு தாதி. ஆனால் துஷ்யந்தன் அதனைக் குழந்தையின் கையில் அணிவித்தபோது ஒன்றுமே நிகழவில்லை.
மீன் வயிற்றிலிருந்து கிடைத்த மோதிரம் தான் அவனுக்கு சகுந்தலையின் நினைவைத் திரும்பக் கொண்டு வந்தது எனில், குழந்தையின் தாயத்து ஒன்றே அவனுக்கும் இவ்வுலகுக்கும் தந்தை- மகன் உறவை அறிவித்தது. எதிர்பாராத ஒற்றுமை.
தாதியின் கூவலைக் கேட்டு அங்கே வந்த சகுந்தலை, ஆச்சரியத்தில் சிலையாகி நின்றாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? ஆனால் பேச ஒருவன் இருந்தானே அங்கு- அது தான் அவர்களின் சிறு மகன்- பரதன்.
அவர்கள் கண்ணெதிரே விரிந்த காதல்பாதையில் நறுமண மலர்கள் தூவப்பட்டிருந்தன.
அன்றொரு நாள் விதி வசத்தால் தன்னை யாரென அறியாது ஒதுக்கிய துஷ்யந்தன் மீது சகுந்தலை சினம் கொள்ளவில்லை. ‘என் குழந்தையைத் தொடாதே, நான் உன்னுடன் இனி வரவில்லை’ எனவெல்லாம் அவள் புலம்பவில்லை.
காலத்தையும், தன் கண்ணீரையும் அதன் போக்கில் கண்டு அனுபவித்தவள், குழந்தை பரதனுக்காக மட்டுமல்ல, தனது உள்ளம் போற்றும் காதலுக்காகவும், தனக்காகவும், துஷ்யந்தனுக்காகவும் துஷ்யந்தனுடன் செல்லத் தயாராகி விட்டாள்.
காதலின் பொன்வீதியில் இருவரின் கைகளும் இணையும்போது இடையில் ஒரு பிஞ்சுக்கரமும் இணைந்து கொண்டு அக்காதல் பயணத்தை மிகவும் இனிமையும் வலிமையும் பொருந்தியதாக்குகின்றது.
***