குறளின் கதிர்களாய்…(81)
-செண்பக ஜெகதீசன்
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (திருக்குறள்-339: நிலையாமை)
புதுக் கவிதையில்…
நிலையா உலகம் இது,
சாவு இதில்
சோர்ந்து தூங்குதல் போன்றது
தூங்கி எழுவது போன்றதுதான்
தரணியில் பிறப்பு!
குறும்பாவில்…
ஆழ்ந்த உறக்கம் போன்றது சாவு,
அதை முடித்து
விழித்தெழுதல் ஒப்பதே பிறப்பு!
மரபுக் கவிதையில்…
நிலையா உலகின் நிலையிதனை
நினைத்து செயல்படு வாழ்வினிலே,
அலைந்து திரிந்தே பணிமுடித்து
அயர்ந்து தூங்குதல் போன்றதாகும்
விலையிலா உயிரதும் உடல்பிரிந்து
விடுதலை பெற்றிடும் சாவென்பது,
சிலைபோல் பிள்ளை பிறப்பதனைச்
சொல்லிடு உறங்கி விழிப்பெனவே!
லிமரைக்கூ…
உடல்சோர உறங்குதல் போன்றது இறப்பு,
உறக்க மதனை முடித்து
விழித்து எழுதல் போன்றதுதான் பிறப்பு!
கிராமிய பாணியில்…
நெலயில்ல நெலயில்ல
வாழ்க்கயிது நெலயில்ல,
வெவரந்தெரிஞ்சி நடந்துக்க
வேலயெல்லாம் முடிச்சிக்க
வேலசெஞ்சி களச்சிப்போயி
ஒறக்கம்போலத்தான் சாவுங்கிறது,
ஒறங்கிமுளிச்சி எந்திரிக்கது
போலத்தானிந்த பொறப்புங்கிறது
அதால,
நெலயில்ல நெலயில்ல
வாழ்க்கயிது நெலயில்ல,
வெவரந்தெரிஞ்சி நடந்துக்க
வேலயெல்லாம் முடிச்சிக்க!