பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: சுமையொடு மேல்வைப்பா மாறு
சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வ முடையார்
அறஞ்செய் தருளுடைய ராதல் – பிறங்கல்
அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
சுமையொடு மேல்வைப்பா மாறு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல்-பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப! அதுவே
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு.
பொருள் விளக்கம்:
சிறப்பாக இன்பங்களைத் துய்த்து வாழும் செல்வந்தர்கள், அறங்களைச் செய்து அருள் உடையவராகவும் வாழ்வதென்பது; மலையில் மூங்கில்களும், வேய்களும் (உட்பக்கம் துளையுடைய மற்றொருவகை மூங்கில்) நெருங்கிச்செறிந்து வளர்ந்துள்ள மலை நாட்டைச் சேர்ந்தவரே, அத்தகைய வாழ்வு பொற்குவியல் சுமையின் மேல் விலைமதிப்பற்ற கற்களையும் வைத்துச் சுமந்து செல்வதைப் போன்றதாகும்.
பழமொழி சொல்லும் பாடம்: இம்மையில் செல்வந்தராக இன்புற்று வாழ்பவர், அவர் செய்யும் அறச்செயல்களால் மறுமைக்கும் பயன் தரும் அருள் பெறத்தக்க வாழ்க்கையை வாழ்வது, பொற்குவியலின் மேல் மணிகளையும் சுமந்து செல்வதைப் போன்ற செய்கை என்பதால், செல்வந்தர்கள் அறச்செயல் புரிந்து வாழ்ந்திட வேண்டும். பொருள், அருள் ஆகியவை இம்மையிலும் மறுமையிலும் அடையும் பேறு என்பதைக் குறிக்க வள்ளுவர்,
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)
பொருள் இல்லாதவர்க்கு இப்புவியில் இன்ப வாழ்வு இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மறுமையில் இன்பம் இல்லை என்று குறிக்கிறார்.
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்