இலக்கியம்கவிதைகள்

மன்னிக்க வேண்டா மனம்

நாகினி

 

 

பிஞ்சு மலரைப் பிடுங்கிக் கனிவான

நெஞ்சு கசக்கியே நோவாக்கும்.. வஞ்சத்தை
மன்றாளும் வேந்தர் மறந்து பொறுத்தாலும்
மன்னிக்க வேண்டா மனம்!
***
மனதால் இணைந்த மணத்தை நசுக்கி
இனபேதம் சார்ந்தே இதயம் – தனத்திற்குச்
சன்னலென ஆகிவிட்ட சண்டாள ஈனரை
மன்னிக்க வேண்டா மனம்!
***
இளமை மெதுவாய் இறங்கி கடந்து
வளமை அகற்றும் வரம்தான் – களமென்று
கன்னமிட்டு வாழ்வோர் கயமை முகத்திரையை
மன்னிக்க வேண்டா மனம்!
***
பசியில் வதங்கும் பலரும் வளரும்
வசிப்புப் பெறவே வருந்தி – கசிந்துருகி
மன்றாடும் கோலம் மதிக்கு நகைப்பாதல்
மன்னிக்க வேண்டா மனம்!
***
படிப்பில் கவனமற்றுப் பார்வை சிதறி
தடித்த கயிற்றினால் தன்னை – முடித்தலென
உன்மத்தம் கைக்கொள் உறங்கிடும் மாணவரை
மன்னிக்க வேண்டா மனம்!

.. நாகினி

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    கோலங்கள் போட கற்றுக்கொண்ட பொழுதுகளில் பெண் பிள்ளைகள்.. புதிது புதிதாக வரைந்து காட்டுவார்கள்.  அதுபோல் மரபுக் கவிதை எழுதக் கற்ற நீங்கள் வரைந்துகாட்டும் கவிதைகள்.. அழகுதான்.. வாழ்த்துகள்….

  2. Avatar

    மிக்க நன்றி… மோதிரக்கையால் குட்டுப்பட்டிருக்கிறேன் இன்று  🙂 பெருமகிழ்ச்சி 

Comment here