நயமான நட்பு!
பவள சங்கரி
நாலடியார்
நான்கு வரிகளில் நயமிகு சொற்களைக்கொண்டு நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய வெண்பா. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இதை இயற்றியவர்கள் 400 சமண முனிவர்கள். திருக்குறள் போலவே, அறம் பொருள், இன்பம் என முப்பால்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
என்ற பழமொழியில் அந்த நாலு நாலடியார் மற்றும் இரண்டு என்பது திருக்குறள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா… ஆம் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும், மன உறுதியும் பெற்றவர்களாக இருப்பர். இதோ ஒரு நாலடியார் பாட்டு:
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய். 247
பொருளுரை: நாம் மனத்தில் நினைக்கும் ஒன்றை குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையவரை நண்பராகக் கொண்டோமானால் நம் இன்பம் மிகும். அவ்வாறின்றி, நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்திருந்தாலும் அவற்றை உணர முடியாதவரை நண்பராகக் கொண்டால், அவர்களால் ஏற்படும் துன்பம், அவர்களை விட்டுப் பிரிந்தால் தானே நீங்கிவிடும்.
இப்படி குறிப்பறிந்து உதவும் விழுமிய நட்பு எத்தனை பேருக்கு வாய்த்துவிடும்? ஒரு வேளை இப்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன்று தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகுமோ..
சுந்தரர் வழி நெடுக பல பதிகளையும் தரிசனம் செய்துவிட்டு திருக்கருகாவூர் வந்து சேருகிறார். அப்பொழுது, களைப்பு மிகுதியால் நீர் வேட்கையும், தாங்கொணா பசியும் ஏற்படுகிறது. மிகவும் வருந்தியிருந்த சுந்தரரின் நிலையுணர்ந்த சிவபெருமானார், தமது ஆத்ம நண்பர் சுந்தரர் நடந்து வரும் பாதையில் வெம்மையைத் தணிக்கும் பொருட்டு குளிர்பந்தலும். பசி நீங்க சோரும், தாகம் தணிக்க குளிர் நீரும் தம் கரங்களில் ஏந்திக் கொண்டு, மறைவேதியர் போன்ற வேடம் தாங்கி சுந்தரர் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். அடியார்கள் திருக்கூட்டத்தினருடன் சுந்தரர் அந்த குளிர்பந்தலுக்குள் நுழைந்து இறைவன் அளித்த சோற்றை உண்டு, குளிர் நீரைப் பருகி பசியும், தாகமும் தீர்ந்து, களைப்பும் நீங்க இறைவன் திருவருளை எண்ணியபடி உண்ட களைப்பில் ஆனந்தமாக உறங்கினர். அப்பொழுது, வேதியர் வடிவில் எழுந்தருளிய சிவபெருமான் திடீரென்று மறைந்தபோது வந்திருந்தவர் இறை என்றுணர்ந்து அவரருளைப் போற்றிப் பாடினார்.
நற்றவா உனை நான்மறக்கினும்
சொல்லும் நா நமச்சி வாயவே