இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (167)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் நலம், நலமறிய ஆவலாயுள்ளேன்.

உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தமக்கென எல்லைகளை வகுத்து வைத்திருப்பதோடு தமது கலாச்சாரத்தையும் தனித்தன்மையையும் சார்ந்த சில அடையாளத்துவங்களை தனியாகக் கொண்டிருக்கின்றன.

காலம் மாற மாற நாடுகளின் கட்டமைப்புகளும் மாறிக்கொண்டே போகின்றன. இக்காலமாற்றம் கொண்டுவரும் மாற்றங்கள் அந்நாடுகளின் மீது திணிக்கப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும்..

குறிப்பாக, ஓர் உதாரணத்திற்கு இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோமே !

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இருந்த இங்கிலாந்தும் இப்போது இருக்கும் இங்கிலாந்தும் வித்தியாசமடைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே! ஆங்கிலம் மட்டுமே மொழியாகக் கொண்டிருந்த பெரும்பான்மையான கிறிஸ்தவ மதத்தினரையே கொண்டிருந்த ஒரு நாடு எனும் நிலைமாறி இப்போது பல்லினக் கலாச்சாரங்களை உள்ளடக்கிய பல மதத்தினரை தன்னுள் உள்வாங்கியுள்ள ஒரு நாடாக இன்றைய இங்கிலாந்து பரிணமித்துள்ளது. அன்று முக்கியமாக தமது நாட்டின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட எத்தனையோ விடயங்களின் முக்கியத்துவம் இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே!

வெள்ளை இனத்தவரல்லாத அனைவரும் இந்நாட்டிற்கு வந்தேறிய குடிகள் என்று இருந்த காலம் மாறி, வெள்ளை இனத்தவரல்லாத பலர் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களாக, இந்நாடே தமது தாய்நாடாகவும், ஆங்கில மொழியைத் தமது தாயக மொழியாகவும் கொண்டுள்ளார்கள்.

இந்நாட்டின் தொன்மை மிக்க மக்களின் பெரும்பான்மை அடையாளங்களை முக்கியப்படுத்தும் வகையில் இந்நாட்டின் கலாச்சார அடையாளங்களை வகுத்து வைத்திருந்தால் இப்போதைய கால கட்டத்தில் இப்போது இந்நாடு இருக்கும் கட்டமைப்பின் அடிப்படையில் அவை பொருத்தமானதாக இருக்கின்றனவா என்பதே கேள்வியாகிறது.

என்ன? சக்தியின் இவ்வார மடலின் ஆரம்பம் நம்மை எங்கே எடுத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கை. இதோ எனது மடலின் கருவிற்கு வருகிறேன்.

ஒரு நாட்டின் அடையாளம், அந்நாட்டின் தனிச் சொத்து, அந்நாட்டையும் அந்நாட்டினில் வாழும் அனைத்து மக்களையும் ஒருமைப்படுத்தும் வகையில் பிரதிபலிக்கும் தேசியகீதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. கடந்த வாரம் இங்கிலாந்தில் “Battle of Britain” என்றழைக்கப்படும் பிரித்தானியாவின் யுத்தம் முடிந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பழைய இராணுவ வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வொன்று நடந்தது.

இத்தகைய நிகழ்வுகளில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கு பெறுவது நாட்டு வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வழக்கத்திற்கமைய அந்நிகழ்விலும் பிரதமர் டேவிட் கமரன், மற்றும் பலத்த சர்ச்சைக்கிடையில் தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட ஜெர்மி கோபன் எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையிலும் பங்கு பற்றினார்கள்.

அநேகமாக எந்த நாட்டிலும் ஒரு தேசிய அளவிலான நிகழ்வு நடைபெறும்போது தேசியகீதம் இசைக்கப்படுவது வழமையல்லவா? அதேபோல இங்கும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசியகீதத்தை அனைவரும் பாடினாலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் பாடாமல் மௌனமாக நின்றிருந்தார். எங்கே, எப்போது என்று அவர்மீது பாயக் காத்திருந்த ஊடகவியலாளர்கள் சும்மா இருப்பார்களா என்ன?

167.3தேசியகீதத்தைப் பாடமறுக்கும் ஒருவர் எப்படி நமது நாட்டின் பிரதமராக வர முடியும் என்று தேசபக்தியற்றவராக திரு ஜெர்மி கோபனைச் சித்தரித்து சர்ச்சையைக் கிளப்பி விட்டார்கள். இனி வரும் இத்தகைய நிகழ்வுகளில் தான் நிச்சயம் தேசியகீதத்தைப் பாடுவேன் எனும் அவர் சார்பான விளக்கம் அவரது பிரச்சாரப் பீரங்கிகளிடமிருந்து வெளிப்பட்டன.

இந்த விவாதம் என் மனதில் ஒரு பெரிய கேள்வியை எழுப்ப நான் இங்கிலாந்து தேசியகீதத்தின் பின்னணியைச் சிறிது பார்த்தேன். பெரிய பிரித்தானியா அல்லது பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்றழைக்கப்பட்ட பிரித்தானியாவின் தேசியகீதத்தை இயற்றியது யார் என்பது அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் 1619 ஆம் ஆண்டளவில் வாழ்ந்த ‘ஜோன் புல்’ என்பவர் இதை இயற்றியிருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது.

சரி இனி இந்த தேசியகீதத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். பிரித்தானிய தேசிய கீதத்தின் ஆரம்பம் கடவுளே எமது இராணியைக் காப்பாற்று என்றாரம்பிக்கிறது.

எமது ஆடம்பரமான இராணியை
ஆண்டவா காப்பாற்று
அவளை வெற்றிக்குரியவளாக்கு
மகிழ்ச்சியாகவும், பெருமைக்குரியவளாகவும்
எமை அநேக காலங்கள் ஆள்வதற்காக
ஆண்டவா எமது இராணியைக் காப்பாற்று

ஆண்டவனே எழுந்திடுவாய்
எமது எதிரிகளைச் சிதறடிப்பாய்
அவர்கள் அரசியலை நிர்மூலமாக்கு
அவர்களின் வியூகந்திரங்களை
உடைத்தெறிந்து வெறுப்படைய வைப்பாய்
உன்மீது எமது நம்பிக்கையை வைக்கிறோம்
ஆண்டவா இராணியைக் காப்பாற்று

மதிப்பிலுயர்ந்த வெகுமதிகளை
அவள் மீது பொழிந்திடுவாய்
நீண்டகாலம் எமது அரசியாயிருந்து
சட்டங்களை அவள் காத்திடுவாள்
எம் இதயம் பொங்க அவள் வாழ்த்துகளை
மகிழ்வுடன் பாடி நாம் வேண்டிடும் வகையில்
ஆண்டவா இராணியைக் காத்திடுவாய்

167.1மேற்கூறிய சாரத்திலேதான் இங்கிலாந்தின் தேசியகீதம் அமைந்துள்ளது. இந்த இராணி பதவிக்கு வந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது இவருக்கு முன்னால் இவரது தந்தை கிங் ஜார்ஜ் அரசராகவிருந்தார். அப்போது இதே பாடலில் இராணி என்று வரும் இடங்களுக்கு ராஜா என்று மாற்றியமைத்த தேசியகீதமாகவிருந்தது. அன்றைய இங்கிலாந்துக்குப் பொருத்தமான தேசியகீதம் இன்றைய இங்கிலாந்தின் கட்டமைப்புக்குப் பொருந்துமா என்றொரு விவாதம் அறிவுஜீவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

167.2பல்லினக் கலாச்சார அடிப்படையிலமைந்த இன்றைய இங்கிலாந்தின் குடிமக்கள் பல கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களும் பெருமையுடன் இந்நாட்டின் தேசியகீதத்தைப் பாட வேண்டுமானால் அது அவர்களின் மனதுக்கு உகந்த வகையிலான சிலபகுதிகளைக் கொண்டிருக்க வேண்டாமா என்பதுவே அவர்களது வாதம். காலங்கள் தோறும் வித்தியாசமான கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள் எமது நாட்டில் வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். அதற்காக எமது தேசியகீதத்தை அடிக்கடி மாற்றியமைத்துக் கொண்டிருக்க முடியுமா? என்கிறார்கள் இங்கிலாந்தின் பழமைவாதிகள்.

இங்கிலாந்தில் இருக்கும் அரச முடியுரிமை அழிக்கப்படவேண்டும், இங்கிலாந்து குடியரசாக வேண்டும் எனும் கருத்துக் கொண்ட ஒரு பகுதியினர் இங்கிலாந்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஏன் எமது தேசியகீதம் இராணியை மையப்படுத்தி இருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இராணி ஒரு காட்சிப்பொருளாக மட்டும் தான் இருக்கிறார் என்று வாதிடுகிறார்கள்.

இது ஒரு விடையில்லா வினாவாகத்தான் இருக்கிறது. இவ்விவாதம் இன்னும் பலகாலம் தொடரத்தான் போகிறது . அதுமட்டும் ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ ஜெர்மி கோபன் இந்த தேசியகீதத்தைப் பாடத்தான் வேண்டும் போலுள்ளது.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

நன்றி – விக்கிப்பீடியா, galleryhip.com/god-save-the-queen-wallpaper.html

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.