ஒருகருதிருப் பயணம்
-மீ.விசுவநாதன்
மலம்சூழ்ந்த பையருகில் மிதந்திருந்தேன் – ஒரு
மகராசி மடிதிறக்க மண்விழுந்தேன்!
பலம்கொண்ட மட்டும்நான் அழுதிருந்தேன் -அவள்
பாலூட்ட வாய்சிரித்துக் கண்வளர்ந்தேன்! (1)
வருமுறவு கொஞ்சிடவே வரவிழைந்தேன் – அந்த
வாஞ்சையிலே கைகாலை உதைத்திருந்தேன்!
இருமலுடன் மலஜலத்தில் தவழ்ந்திருந்தேன் – தாய்
இதயத்தில் கமலமென மலர்ந்திருந்தேன்! (2)
நடைபயின்று நடுவீட்டில் நான்களிப்பேன் – பலர்
நகைப்புடனே பார்த்திருக்கும் விழியாவேன்!
உடைபுதிதாய் அணிந்தணிந்து களைந்திடுவேன் – அப்பா
உச்சிமோந்து பார்க்கையிலே உயிர்பெறுவேன்! (3)
தெருப்புழுதி பீயெல்லாம் நான்புரள்வேன் -அந்த
விளையாட்டில் நட்புடனே நாள்மறப்பேன்!
உருவம்தான் உயர்ந்துவர அழகானேன் – ஓர்
ஊரூராய்ப் படிஏறிப் படிப்பறிந்தேன்! (4)
பட்டகல்வி படித்தகல்வித் துணையோடு – ஒரு
பதவியிலும் அமர்ந்தேதான் பணிசெய்தேன்!
தொட்டவிழிப் பார்வைக்குள் சிக்கியதால் – ஒரு
தோகையுடன் காதல்வழிக் கைபிடித்தேன்! (5)
அன்பான இருகுழந்தை நான்கொண்டேன் – அவர்கள்
அறிவோடு விளங்கிவரத் தேனுண்டேன்!
என்போன போக்கிற்கு நானிருப்பேன் – என்ற
இயல்பான குணத்தாலே வாழ்கின்றேன்! (6)
பூவைப்போல் புதிதாயும் நானிருப்பேன் – பெரும்
புயலைப்போல் சிலநேரம் தானிருப்பேன்!
தேவைக்குத் தேடுகின்ற விலங்கினம்போல் – சில
வேளைக்குச் சிறுமதியின் சொல்கேட்பேன்! (7)
சிற்றின்பம் பேரின்பம் இரண்டிலுமே – என்
சிந்தனைகள் சென்றதனால் மெய்ம்மறந்தேன்!
கற்றதுவும் பெற்றதுவும் காடுவரை – என்ற
கற்கண்டு அனுபவத்தில் மெய்யுணர்ந்தேன்! (8)
சரியான நேரத்தில் குருபார்க்க – இந்தச்
சண்டாளன் மாறியதை நானறிவேன்!
சரிபோடா வாழ்வெல்லாம் இப்படித்தான் – என்ற
சத்தியத்தின் மனத்துள்ளே நானறிந்தேன்! (9)