நான் அறிந்த சிலம்பு – 184
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல்
மன்னனைக் கண்ட பொற்கொல்லன்
அவன் காலடியில் விழுந்து
அவனைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்.
“கன்னக் கோலும், கவைக்கோலும் இன்றி
வாயில் காத்து நின்றோரையும் மயக்கி
அவர்களை உறங்கச் செய்து,
அரண்மனை புகுந்து,
அரசியின் சிலம்பைத்
திருடச் சென்ற கள்வன்,
காவலர் கண்களையும் மறைத்து
ஒளிந்து கொண்டு இருந்தவன்,
என்னுடைய சிறுமை பொருந்திய
குடிலில் வந்து தங்கியிருக்கிறான்”
என்று அரசனிடம் உரைத்தான்.
மன்னவன் வினைவசத்தால் மயங்கிக் காவலர்க்கு இட்ட கட்டளை
வினையின் பயன் தோன்றிய
காலம் வந்து விட்டது;
ஆதலால், கொம்புகளுடன் கூடிய
வேம்பு மாலை அணிந்த
பாண்டிய மன்னன்
சற்றும் ஆராய்ந்து சிந்திக்க இயலாதவனாய்க்
காவலர்களை அழைத்து,
“தாழ்ந்த பூங்கோதைகளையுடைய
என் தேவியின் காற்சிலம்பு
இவன் காட்டிக் கொடுக்கும்
அந்தக் கள்வனது கையில் இருக்குமாயின்,
அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை
இங்கு கொண்டு வருவீர்களாக” என்றான்.
காவலாளருடன் திரும்பி வந்த பொற்கொல்லன் கோவலனிடம், “இவர் சிலம்பு காண வந்துள்ளனர்” என்று சிலம்பைப் பற்றிக் கூறுதல்
அங்ஙனம் அரசன் காவலரை ஏவியதால்
தீயதொழில் புரியும் பொற்கொல்லன்
‘கோவலன் திருட்டுப்பழி ஏற்க வேண்டும்’
என்ற தன்எண்ணம்
ஈடேறப்போகிறது என்று நினைத்து
அகம் மகிழ்ந்தான்.
ஊழ்வினையின் வலையில் விழுந்து கிடந்த
கோவலனை அணுகினான்.
“வெற்றி பொருந்திய படைகளையுடைய
மன்னனின் ஏவுதலினால்
உம்மிடம் உள்ள சிலம்பைக் காண
இங்கு வந்துள்ளனர்.
அதனைக் காட்டுவாயாக”
என்று கூறினான்.
கோவலனும் தன் கையில் உள்ள சிலம்பை
அவர்களிடம் காட்டினான்.
அதன் அருமை பெருமைகளை
விளக்கிச் சொல்பவன் போல
அக்காவலர்களைத்
தனியே அழைத்துச்சென்ற
அக்கயவன் பொற்கொல்லன்,
அரசியின் சிலம்பை அது எவ்வாறு
ஒத்திருக்கிறது என்பதை
விளக்கிச் சொன்னான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 142 – 161