“அன்புள்ள அம்மா”
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்
(மீ.விசுவநாதன்)
( பகுதி: நான்கு )
தியானமும் உழைப்பும்
இரவே
தூங்கும் வேளை
சுதாமணி
தூங்கமாட்டாள் !
அரவே
தீண்டினாலும்
தியானத்தை விட்டு
நீங்கமாட்டாள்!
அவளின் அப்பா
சுகுணானந்தர்
அவளுக்குக்
காவலாய் நிற்கும்
காட்சியைக் கண்டும்
ஏங்கமாட்டாள்!
கண்ணனை
நெஞ்சில் வைத்து
கடல்போல
அன்பு வைத்து
உலகுக்காய் வந்தவள்!
வீட்டுச்
செலவுக்காய் வேலை
செய்து மகிழ்ந்தவள் !
பள்ளிப் படிப்பும் வீட்டுச் சூழலும்
பள்ளிக்குப் போனதோ
நான்காண்டுகள் !
சுள்ளி பொறுக்கவும்
சொந்தம் காக்கவும்
தான்கண்டதோ
பல்லாண்டுகள் !
வாத நோயால்
விழுந்த தாயவள்
பாதம் தொட்டுப்
பணிசெய்த சேயிவள்!
படிப்பை விட்டுத்
தொண்டு செய்யும்
துடிப்பைப் பெற்றவள் !
பெற்றவள் இவளை
அடிக்கும் போதும்
பொறுமை காக்கும்
படிப்பினைப் பெற்றவள் !
சிறுமியான போதும்
சிறுமை எண்ணாத
பெருமை மிக்கவள் !
குடிநீருக்காக
தொலைதூரம் சென்று
கிணற்றுக் குள்ளே
“தோண்டி”யை விட்டு
விலைமதிப்பில்லா
நீரினை எடுத்து
அலைகடலோரம்
அமைதியாய் நடந்து
“அகத்தைத் தோண்டி”
கிருஷ்ணா என்பாள் !
அகத்தை அடைந்ததும்
அடுத்த வேலையை
அம்மா தருவாள் !
அகந்தை இல்லாமல்
எம்மாம் பெரிய
வேலையானாலும்
சும்மாச் செய்வாள்
சுதாமணி மெய்யாள்!
கண்ணன் பெயரைச்
சொல்லும் பொழுதே
கண்கள் நீரைச்
சொரியும் அமுதாள் !
எண்ணும் வேலைகள்
எத்தனை யாயினும்
எண்ணத்தில் இறைவனை
இருத்திய அமுதாள் !
அண்ணன் தம்பியர்
துணிதுவைத்திடுவாள் !
பண்ணும் பாட்டால்
பணிகளித்திடுவாள் !
கிருஷ்ணனின்
பீதாம்பரமாய் நினைத்து
உடைகளை உலர்த்துவாள் !
கிருபையைத் தாவென
கடைக்கண் நீரவர
அவன்மனம் மலர்த்துவாள்!
பசுக்களை மேய்ப்பாள்
பரந்தாமனோடு
பிருந்தாவன மாவாள்!
சிசுக்களைப் பெற்றோர்
பால் வேண்டுவார்கள்
பசிபோக்கி வருவாள் !
அதனால் தன்
பெற்றோர் தரும்
அடிதாங்கி வருவாள் !
அடித்தாலும் அவரின்
அடிதாங்கி மகிழ்வாள் !
…….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)
புதுக்கவிதையில் மரபின் எதுகை மோனை இயைபு கலந்ததில் ஓசை சிறக்கிறது.
ரமணி