வார்த்தைகளைத் தேடும் கவிதைகள்
க. பாலசுப்பிரமணியன்
உள்ளத்தில் கொந்தளிக்கும் எரிமலைகள்
உதடுகளின் வாசலில் உதிரத்தை சுவாசிக்கும் !:
உயிரோடு மெய் சேர்க்காமல் உணர்வலைகள்
சொல்லுக்குச் சுவைதேடிச் சோர்ந்திருக்கும் !!
பெருமூச்சில் நினைவுகள் சுமையிறக்கி
சோகத்தில் சொந்தத்தை வளர்த்திருக்கும் ..
கல்லில் சிலைவடிக்கத் துடிக்கும் கைகள்
உளியின் வலிக்கு ஒத்தடம் கொடுத்திருக்கும் !!
கற்பனைகள் நினைவில் கதறிக் கதறி
கால் விலங்குகளை உடைக்கத் துடித்திருக்கும்
காய், மா, பலாவின் கதவுகளைத் தட்டிக்
கவிதைகள் உள்ளே வரக் காத்திருக்கும்
எழுதத் துடிக்கின்ற இதயத் தேருக்கு இயலாமை
முட்டுக்கட்டை போட்டு முன் நிற்கும் !
காலத்தில் கலங்கி நிற்கும் கவிதை
காற்றுண்ட கார்மேகமாய் கலைந்து நிற்கும் !