நிர்மலா ராகவன்

பாதுகாப்பு யாருக்காக?

உனையறிந்தால்

கேள்வி: நாம் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்தால், அது அவர்களுக்கு நன்மைதானே? ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

விளக்கம்: சிறு பிராயத்திலிருந்தே மனிதனுக்கு முரணான இரு குணங்கள் இருக்கின்றன. ஒன்று சுதந்திரம், இரண்டாவது பாதுகாப்பு. உதாரணமாக, `நான் பெரியவன்! தானே அம்மா கை பிடிக்காமல் நடக்க முடியும்!’ என்பதுபோல் தனியாக ஓடும் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று, குரைத்தபடி ஓடும் நாயைப் பார்த்தால், அம்மாவை ஓடி வந்து கட்டிக்கொள்ளும். இந்த இயற்கையைப் புரிந்துகொண்டு, குழந்தையை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

ஒரு தாய்க்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளும்கூட ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு குழந்தை பசி வந்தால், பிராணன் போகிறமாதிரி அலறும். இன்னொன்று வெறுமனே முனகும். ஜீன் வித்தியாசப்படுவதால், ஒவ்வொன்றும் தனி ஜீவன்தான். இது புரியாது, தனி மனிதனின் நன்மையைவிட பொது நலனே முக்கியம் என்று வளர்க்கப்படும்போது, ஒருவனின் தனித்தன்மைகள் வெளிப்பட வாய்ப்பு இல்லாது போகிறது. எப்போதும் பாதுகாப்பாக உணர்ந்தாலும், சுதந்திரம் கிடைப்பதில்லை.

`வயது முதிர்ந்ததும், எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா?’ இப்படி யோசிக்கும் தாய், மகன் தன்னைப் பாதுகாப்பான் என்ற எதிர்பார்ப்புடன், `பாசம்’ என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலிருந்து அவன் தன்னையே சார்ந்து, எதற்கும் நாடும்படி,வேண்டியதை எல்லாம் கவனித்துச் செய்வாள் — மகனுக்கு எத்தனை வயதானாலும். முதலில் சௌகரியம் என்று பட்டது இப்போது இரு தரப்பிலும் ஆத்திரத்தை விளைவிக்கும்.

குழந்தை தாயை எதிர்த்து, தானே தன் காரியங்களைச் செய்ய முற்படும்போது, இத்தகைய தாய் நொந்து போகிறாள் –தன்னை உபயோகமானவள் என்று மகன் நினைக்கவில்லையே என்று.  மகன் விரும்புவதெல்லாம் சிறிது சுதந்திரம். அவ்வளவுதான். அது அவளுக்குப் புரியவில்லை.

ஒரு சிறுவன் தானே தனது காரியங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பது அகம்பாவத்தால் அல்ல. `என்னாலும் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையைப் பெற.  இது புரிந்து, அபாயமற்ற காரியங்களில் அவனைத் தன் போக்கில்விட்டு, சிறு தவறுகள் நிகழும்போது, அவைகளைப் பெரிதுபடுத்தாது, எப்படித் தடுப்பது என்று சொல்லிக் கொடுப்பதுநல்லது. இல்லாவிட்டால், எந்த வயதிலுமே புதிய காரியங்களைச் செய்யத் தயங்குவான் — எங்கே தவறு நிகழ்ந்து, பிறரது கேலிக்கு ஆளாக வேண்டி வருமோ என்று.

குழந்தை சுயமாகச் சிந்திக்கும் சூழ்நிலைகளை ஒன்றரை வயதிலிருந்தே சிறுகச் சிறுக  உருவாக்குங்கள்.

`இன்னிக்கு இந்த சட்டை போட்டுக்கறியா, இல்லே இதுவா?’

`உனக்கு மைலோ வேணுமா, ஹார்லிக்ஸா?’

குழந்தை முதலில் ரொம்ப யோசிக்கும்.

`மைலோ பிரௌன் கலர். ஹார்லிக்ஸ் வெள்ளையா இருக்கு, பாத்தியா? எது வேணும்?’

காலையில் ஒன்று, மாலையில் மற்றொன்று என்று பெருமையாகத் தேர்ந்தெடுக்கும்.

குழந்தை காலையில் ஹார்லிக்ஸ் கேட்டு, நீங்கள் தவறாக மைலோ கொடுத்தால், தன் கருத்து மதிக்கப்படவில்லையே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். வெள்ளை நிறத்தில் சிறிது பிரௌன் கலந்தால், அந்த விஷயத்திற்கு ஒரு நல்ல முடிவு கட்டிவிடலாம். குழந்தைகளை ஏமாற்றுவது எளிது!

பொதுவாக எல்லாக் குழந்தைகளுமே தங்கள் வயதுக்கு மீறிய செயல்களைச் செய்ய முற்படுகிறார்களே, ஏன் தெரியுமா?தங்கள் எல்லை எவ்வளவு என்று அறியும் முயற்சி அது. அவ்வப்போது வாய் வார்த்தையாகக் கண்டிக்க வேண்டுவது அவசியம். `குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று நீண்ட காலம் விட்டுக்கொடுத்தால், பிறகு அடக்க முடியாது.

குழந்தைகளுக்கு விளையாடுவதைத் தவிர மற்ற எல்லாமே அநாவசியம்தான். குளிப்பது, பல் துலக்குவது போன்ற அவசியமானவற்றைக்கூட செய்ய மறுக்கும் குழந்தைகள் உண்டு.

`பல் தேய்ச்சாதானே பல் முத்து மாதிரி மின்னும்! இல்லாட்டா பூச்சி வரும்!’ என்று ஆசை காட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதித்துக்கொள்ள  வேண்டியதுதான். பள்ளிக்கூடத்துக்குப் போக அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய படிப்பாளிகள் ஆவது போலத்தான்!

தான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே என்று ஆத்திரப்பட்டு அடித்து மசியவைத்தால், `நான் ஒரு பயந்தாங்குளி!’என்று பெருமை பேசுகிறவர்களாகிறார்கள். இவர்களால் தனித்து எதையும் செய்ய துணிவில்லாததால், தம்மைப்போன்ற பிறரையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுபோல் நடப்பார்கள்.

தம்மைப்போல் இல்லாது, சிறு வயதிலேயே போதிய சுதந்திரம், பாதுகாப்பு என்று அன்புடன் வளர்ந்தவர்களைக் கண்டுபொறாமை எழுகிறது. அவர்களை மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பழித்து, தங்களைப்போல் மாற்ற எண்ணுவார்கள். அவர்களுக்கு வேண்டியது நட்பு. அதனால் கிடைக்கும் பலம், பாதுகாப்பு. ஆனால், சண்டையில் துவங்குவார்கள்.

பிறர் நம்மிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்பதுதான் பெருந்தன்மை. எல்லாரிடமும்இருக்கும் குற்றம் குறைகளையே பார்த்துக் கொண்டிருந்தால், நட்பும், உறவும் எப்படி வளரும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *