— முனைவர் சி.சேதுராமன்.

Thirumoolar_Nayanarயோக நெறிகளில் மிகச் சிறந்தவராக விளங்குபவர் திருமூலர் ஆவார். அவரே யோகநெறிகளின் தந்தையாக விளங்குகின்றார். யோகநெறிகளைத் தான் மட்டுமே பயன்படுத்திப் பயன் பெறாது அனைவருக்கும் அந்நெறியைப் போதித்து அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவராகத் திருமூலர் திகழ்கின்றார். இவர் எழுதிய திருமந்திரம் வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் பெருமை மிகுந்த யோக நூலாகத் திகழ்கின்றது.

திருமந்திரம் பத்தாம்திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்று கூறுவர். திருமூலர் ஒரு யோகியாவார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருட்களையும் அடைய முடியும் என்ற உயர் யோக நெறியைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றார். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும்.

கூடுவிட்டுக் கூடுபாய்தல்:
தன் உடலை விட்டுவிட்டு வேறொரு உடலில் புகுவதையே கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று சித்தர்கள் மொழிவர். இதனைப் பரகாயப் பிரவேசம் என்று குறிப்பிடுவர். பர – வேறு, காயம் – உடல், பிரவேசம் – புகுதல். இதன் பொருள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டுநீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததாக வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப்பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர்உதாரணமாக விளங்குகிறது.

திருமூலரின் வரலாறு:
நந்தியெம்பெருமான் மாணாக்கரில் பதஞ்சலியும், வியாக்கிரமரும் கயிலையினின்றும் தென்னாடு வந்து தில்லையம்பலத்தில் சிவபெருமானுடைய நடன தரிசனம் காண்பதற்காக வந்த காலத்து, திருமூலநாயனாரும் தம்முடைய சொந்த உடம்புடன் (அஃதாவது மூலனுடைய சரீரத்தில் புகுவதற்கு முந்தி) அவர்களுடன் கூடவே வந்து, நடனக் காட்சியைக் கண்டு களித்துப் பின் கயிலைக்கு ஏகி, அங்குத் தவத்தினில் இருந்தார் என்பதை,

“செப்பும் சிவாகமம் என்னுமப் போர்பெற்று
அப்படி நல்கும் அருணந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே.”
“இருந்தேனிக் காயத்தில் எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற விடத்தே
இருந்தேன் இமயவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.”
என்ற தமிழ் மூவாயிரச் செய்யுட்களால் அறியலாம்.

“இமயவர் ஏத்தும் பதத்தே” என்றதாலும், “என் நந்தி இணையடிக் கீழே” என்றதாலும். நாயனார் தில்லைக்கூத்தைக் கண்டு களித்தபின் கயிலை சென்று தவம் இயற்றினார் என்பது தெளிவாகின்றது.

திருமூலர் பதஞ்சலி வியாக்கிரமருடன் தென்னாடு போந்தது முதல் தடவையாகும். அப்போது அவருக்குத்திருமூலர் என்ற பெயர் கிடையாது. இரண்டாவது முறையாக அவர் கயிலையினின்றும் பொதியையை நோக்கிவரும்போது, சோழநாட்டுச் சாத்தனூரில் பசுக்கள் மேய்க்கும் மூலன் இறந்து கிடக்கக் கண்டு, தம் உடலை ஓர்அரசமரப் பொந்தில் வைத்துவிட்டு, தம் உயிரை மூலன் உடம்புக்குள் புகுத்தி மூலனாக எழுந்த பின்னர் அப்பெயர் ஏற்பட்டது ஆகும். யோகநெறியை நந்திதேவரிடமிருந்து கற்ற திருமூலர் சிவ யோகியாகவே முதலில் அறியப்படுகிறார்.

மூலன் உடலில் புகுந்தது: 
கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அட்டமா சித்திகளையும் கைவரப் பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கையிலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும்பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

பின்னர் திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கினார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன், அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

அப்போது அதன் வழியாகச் சென்ற சிவயோகியார் அதனைக் கண்டார், பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகிக் கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார்.

அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்றிருந்து, நன்னெறிகளை விளக்கும்‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார்.

தாம் வீடுபேறு அடைவதற்கு முன்னர் “திருமந்திரத்தைத்” தம்முடைய ஏழு சீடர்களுக்கும் கற்பித்து, உலகில் பல மடங்களை ஏற்பாடு செய்து பதி, பசு, பாச இலக்கணங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்குமாறு செய்து, திருமந்திரம் எழுதப்பட்ட ஒரு சுவடியைத் திருவாடுதுறைத் திருக்கோயிலின் முன்னர் இருக்கும் பலிபீடத்தின் கீழ்ச் சேமித்து வைத்த பின்னரே இறைவனோடு கலந்தார்.

திருமூலருக்கு ஏழு சீடர்கள் உண்டு என்பதும், அவர் ஏழு மடங்களை நிறுவினார் என்பதும்,

“மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.”
“வந்த மடமேழு மன்னும்சன் மார்க்கம்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை.”
என்ற திருமந்திரச் செய்யுட்களால் அறியலாம்.

திருமூலரது நூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மனித உடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளார். அதனால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்றுவழங்கப்பட்டது.

திருமந்திரத்தை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார். இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தரநாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் சிவபெருமானின் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும்.

திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரத்தில்

“மந்திரங் கொண்டு வழிபடு வோர்க்குச்
சுந்தர நாதன் சொல்லிய மந்திரம்
நந்திஎந் நாதன் நாவார ஓதினன்
பைந்தொடி மேனிப் பயனது தானே.”
“வந்தமட மேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

இச்செய்யுள் சுந்தரநாதருடன் ஒருங்கு கற்ற ஒருவரால் பாடப்பெற்றது. இவருக்கு நாதன் என்ற பட்டம் நந்தியெம் பெருமானால் கொடுக்கப்பட்டது. இதனை,

“நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றொம்.”
என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள் விளக்குகிறது.
திருமூலர் மூலனின் உடலில் புகுந்ததை,
“அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே.” (141)
என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரா?
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருந்தாரா? என்று பலருக்கும் ஐயம் எழும். அவர்களது ஐயத்தைப் போக்குகின்ற வகையில்,

“வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வெட்டு வளியனு மாமே.”(551)
“நீல நிறனுடை நேரிழை யாளொடும்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞால மறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி யாணையே.”(718)
என்றும்,

“எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்யில் ஆக்கைக்கு அழிவில்லை.”(552)
“அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை.”(715)
“நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை.”(584)
“ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமா யிரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.”(702)
என்றும்,

“காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்கும் குறியது வாமே.”(553)
மூல நாடி மூக்கட் டலக்குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காண்
மேலை வாயில் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.”(602)
என்றும்,

“உடம்பா ரழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”(704)
என்றும் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இப்பாடல்களில் திருமூலர் தம் அனுபவத்தைக் கூறியுள்ளார். “தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”என்பது ஆன்றோர் கொள்கையாதலால், உலகத்தார் அறிந்து வாழ்வாங்கு வாழ்வதற்காக நீண்ட நாள் வாழ்கின்ற நெறிகளைத் திருமூலர் தம் நூலின்கண் தெளிவுறுத்தியுள்ளார்.

திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாக அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்திக் கூறியுள்ளார்.

அகத்தியர், 12 காண்டத்தில்
1.திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000
20.திருமூலர் ஞானோபதேசம் 30
21.திருமூலர் நடுவணை ஞானம் 30
22.திருமூலர் ஞானக் குறி 30
23.திருமூலர் சோடச ஞானம் 16
24.திருமூலர் ஞானம் 11
25.திருமூலர் குளிகை 11
26.திருமூலர் பூஜாவிதி 41
27.திருமூலர் வியாதிக் கூறு 100
28. திருமூலர் முப்பு சூத்திரம் 100…
என்ற நூல்களும் இவரால் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஆய்விற்குரியது. ஆனாலும் திருமந்திரமே திருமூலரின் ஒப்பற்ற நூலாக அனைவராலும் போற்றப்படுகின்றது.

திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார்.

திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாகக் கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமந்திரத்தில் உடலோம்பு நெறிகளாகப் பல்வேறு யோகநெறிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

ராஜயோகம், ஹடயோகம், மந்திர யோகம், சந்திர யோகம், ஆசனங்கள், அட்டாங்க யோகம், பரியங்க யோகம் போன்ற யோகநெறிகள் திருமூலரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. எளிமையாக யோகநெறிகளைத் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளமை சிறப்பிற்குரியது. முதன் முதலில் யோகநெறிகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் இயம்பிய பெருமை திருமூலரையே சாரும் எனலாம். அதனால்தான் திருமூலரை யோகநெறிகளின் பிதாமகர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவருக்குப் பின்னர் பலர் யோகநெறிகளை எடுத்துரைத்திருந்தாலும் அனைத்திற்கும் மூலமாக அமைந்திருப்பது திருமூலர் குறிப்பிடும் யோகநெறிகளேயாகும் என்பது வெள்ளிடை மலையாகும்.


முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
Malar.sethu@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *