படக்கவிதைப் போட்டி (36)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு. எல். சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.10.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
பாவத்தில் கரையாதே
எத்தனை கோடி இன்பம் வைத்தேன்
ஓமனிதா
அத்தனையையும் தொலைத்து
புத்தியின்றி நீ செய்யும்
காரியங்கள்தான் எத்தனை
களவு பல செய்து
ஈட்டிய பொருளின் பகுதியை
எனக்கும் காணிக்கையாக்கி
கற்பூரமேற்றுகிறாய்!
உழைப்பவரை மிதித்துவிட்டு
நீ மட்டும் உயரப் பார்க்கிறாய்
உயரே நான் இருப்பதை
மறந்து போகிறாய்!
ஊழலில் திளைத்து
ஊரையே சீரழிக்கிறாய்
தேவாலயங்கள் கட்டி
அதையும்
வியாபரம் ஆக்குகிறாய்
தினந்தோறும்
நீ என்முன்
படைக்கும் பாவம் கரைக்க
ஆண்டுக்கு ஒருமுறை
கடலில் கரைகிறேன்
நீ செய்யும் பாவங்களில்
உன் பரம்பரையே
கரைந்துவிடும் என்பதை மட்டும்
கவனத்தில் கொள்!
முதல் மரியாதை
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
முதல்வன் நீ
மண்ணிலும்
சாணத்திலும்
மஞ்சளிலும்
வருபவன் நீ
மண்ணில் பிறந்தவை
மண்ணில் மறையும்
என்ற தத்துவத்தை
உணர்த்தவே கரைத்தோம்
கற்றூணை பூட்டியோர்
கடலிற்பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே
என்பதற்கிணங்க நிமிர்ந்து
நிற்கும் உனைப்பார்த்து
கவிஞர்களெல்லாம்
கரையாமல்
கரை ஏறிய கணபதிக்கு
முதல் மரியாதையாக
மொளனம் சாதித்தனரோ?
சரஸ்வதிராசேந்திரன்
முதல்வன்
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
முதல்வன் நீ
மண்ணில் பிறந்தவை
மண்ணிலேயே
மறையும் என்ற
தத்துவத்தை உணர்த்த
தண்ணீரில் கரைக்கிறோம்
பண்ணும் பாவங்கள்
போதாதென்று
உன்னை உதைத்தும்
தள்ளியும் விடுகின்றனர்
கடலிலுனுள்
கற்றூணை பூட்டியோர்
கடலிற்பாய்ச்சினும்
நற்றுணையாவது
நமசிவாயவே என நீ
கரையாமல் கரையேறி நிற்பது கூட
பாவங்களிருந்து
எங்களை கரையேற்றத்தானோ ?
சரஸ்வதி ராசேந்திரன்
தாங்கிக்கொள்…
மண்ணில் மாவில் மஞ்சளிலும்
மாட்டுச் சாணி எதிலெனிலும்,
எண்ணம் போல வடிவுபெறும்
எங்கள் யானை முகத்தவனே,
புண்ணியம் என்றே நினைத்துபல
பகட்டைச் சேர்த்தார் வழிபாட்டிலே,
தண்ணீர் நிலைகளில் கரைத்தாலும்
தாங்கியே அருள்வாய் விநாயகனே…!
-செண்பக ஜெகதீசன்…
தண்ணீர்க் கரையில் தனியாக நீகரைந்து
கண்ணீர் குளிக்கின்ற மக்கள் – மண்ணில்
எதிர்பார்த்து ஏங்கும் அமைதிக்கு நல்ல
பதிலொன்று தந்து விடு.
நம்பிக்கை இல்லா தவறை விடு.உனை
நம்பிக் கரைபோர் நலம்வாழ -தும்பிக்கை
நாயகனே நீயும் துணைசெய். வீண்வாதப்
பேயகற்றி விட்டு விடு .
மூடநம் பிக்கை எனஇகழும் வாய்களினை
மூடவிடு போதும் எதிலுமே தேடலின்றிக்
குற்றம் குறைகாணும் கோமாளிக் கூட்டம்தம்
குற்றம் உணர்த்துக் கரைந்து.
கையில் இருக்கின்றக் காசைக் கரைத்துமே
மெய்யில் இருக்கும் அழுக்கினைத் – பொய்யாய்
மறைக்கின்ற மாந்தர் மனத்தழுக்கை நீக்க
இறைவா கரைந்து விளக்கு
படம் 36
விநாயக சதுர்த்தி.
விரதம் முடிய, பார்வதியே
விரவல் செய்தார் கடலிலுன்னை.
பரதத்துவம் பாதத்தில் மிதிபடாமல்
சிரத்தையாயுன்னை நோன்பு இறுதியில்
பரவையில் போட கரைகிறாய்
பூமியில் அவதரித்த நாமிறுதியில்
பூமிக்கேயென்ற தத்துவம் கூறும்
பூதல உருவாய் நீயிங்கு!
பஞ்சமா பாதகங்களை மானுடம்
அஞ்சாது செய்வதை தொலைக்க
நெஞ்சத்தால் உணர்ந்து கரைக்க
தஞ்சம் நீயென அடையாளமாகுகிறாய்.
தளர்வற்ற மாசறு மனம்
அளவற்று நீள அருள்வாய்!
வளர்பிறைச் சதுர்த்தி ஆவணியில்
வரம் தா ஆனைமுகத்தோனே!
( விரவல் – கலத்தல். பரதத்துவம் – பரம்பொருள். பரவை – கடல்.)
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2015.