வல்லமை நிர்வாகக் குழு விரிவாக்கம்
அண்ணாகண்ணன்
வல்லமை மின்னிதழின் நிர்வாகக் குழு விரிவடைகிறது.
வல்லமையின் ஆலோசகர் குழுவில் விசாகப்பட்டினம் வெ. திவாகர் இணைகிறார்.
இவர், கப்பல் துறையில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழில் இவர் எழுதியுள்ள வம்ஸதாரா, திருமலைத் திருடன், விசித்திரச் சித்தன், எம்டன் 22/09/1914 ஆகிய வரலாற்று நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் என்ற நூலையும் இயற்றியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளை இவருக்கு மரபுச் செல்வர் என்ற விருதினை அளித்துள்ளது. www.vamsadhara.blogspot.com, www.aduththaveedu.blogspot.com ஆகிய வலைப்பதிவுகளை நடத்தி வருகிறார்.
திரைப் பகுதிக்கு சூர்யா சுரேஷ், ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார்.
சென்னையில் வசிக்கும் இவர், கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பற்பல திரைப்படங்களைக் குறித்த இவரின் பார்வைகளை வண்ணத்துப்பூச்சியார் (http://butterflysurya.blogspot.com) என்ற இவரின் வலைப்பதிவில் வாசிக்கலாம். பல நாடுகளிலிருந்து வெளியான, பல மொழிகளில் அமைந்த ஆயிரத்திற்கும் மேலான திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றவர். திரைக் கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இவர், தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்; இயக்குநர் சேரனின் ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
வண்ணப் படங்கள் பகுதிக்கு விழியன் (உமாநாத்), ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார்.
இவர் பிறந்தது ஆரணி; வளர்ந்தது வேலூர்; மேலும் வளர்ந்தது பெங்களூர்; வாழ்வது சென்னை; படித்தது முதுநிலை பொறியியல் (வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்). தோழியே உன்னைத் தேடுகிறேன் (கடித இலக்கியம் – 2005), காலப் பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே (இரண்டு சிறுவர் நாவல்கள் – 2009) ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். நிழற்படங்கள் எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்; இவர் எடுத்த வசீகரப் படங்களை http://vizhiyan.wordpress.com என்ற வலைப்பதிவில் காணலாம்.
சமூக ஊடகங்களுக்கான ஆசிரியராக, அ.தமிழ்ச்செல்வி பொறுப்பு ஏற்கிறார்.
அ. தமிழ்ச்செல்வி, சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர். இயற்பியலிலும் கல்வியியலிலும் (B.Ed) இளங்கலைப் பட்டம், கணினிச் செயல்பாடுகளில் (M.C.A.) முதுகலைப் பட்டம், கணினி அறிவியலில் இளம் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர்; கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்; அனைவருக்கும் கல்வி இயக்கச் சிறப்பு ஆசிரியர். இவர், வல்லமையின் இடுகைகளைச் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் பஸ், கூகுள் கூட்டல், ஆர்க்குட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடுவதில் கவனம் செலுத்துவார்.
அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்), வல்லமையின் துணை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார்.
இவர், தமிழ்நாட்டில் பிறந்து, தற்சமயம் மராட்டிய மாநிலத் தலைநகராம் மும்பையில் வசித்து வருகிறார். விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவரின் படைப்புகள், வல்லமை, திண்ணை, கீற்று,வார்ப்பு, அதீதம், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், தேவதை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. http://amaithicchaaral.blogspot.com, http://amaithichaaral.blogspot.com, http://paadumkuyilkal.blogspot.com ஆகிய வலைப் பதிவுகளை நடத்தி வருகிறார்.
புதிய உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்பதோடு, அவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகிறோம்.
வல்லமையின் துணையாசிரியராக பொறுப்பேற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியும், இணைந்து பணியாற்றுவதில் பெருமையும் அடைகிறேன்.. தமிழன்னைக்கு ஒப்பீடில்லா தொண்டு செய்யும் வல்லமையின் புகழ் மென்மேலும் பரவட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்க்ள்.
புதிய உறுப்பினர்களுக்கு நல்வரவு ஆகுக.