’ஒத்த வீடு’ – திரைப்படச் செய்தி

0

விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ் குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம். எஸ். பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமான், பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா, சண்முகம், யோகி தேவராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ. தஷி இசையமைத்துள்ளார்.  ஸ்ரீ ரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கே. இத்ரீஸ், எம். சங்கர் இருவரும் இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் பாலு மலர்வண்ணன் கூறுகையில், “கிராமங்களில் ஒத்த வீடு பற்றி நிறைய கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படி ஒரு ஒத்த வீட்டில் நடக்கும் சம்பவம் தான் இந்தப் படத்தின் கதை.  அந்த ஒத்த வீட்டு தலைமை கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, நடித்திருக்கிறார்.  ஒரு கிராமத்துத் தாயின் வெள்ளந்தியான மனமும், அதனால் ஏற்படும் விளைவுகளும், பிரிவும், பரிவும் தான் படத்தின் பலமான காட்சிகள்.

வடிவுக்கரசியின் மகனாக கதாநாயகன் திலீப்குமார், மகளாக பந்தனா நடித்திருக்கின்றனர்.  ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தைப் பக்கத்து வீட்டில் இருந்து பார்ப்பது போல அவர்கள் வாழ்ந்து காட்டியிருகின்றனர்.

திலீப்குமாருக்கு இது முதல் படம் என்றாலும், பல படங்களில் நடித்து நிறைய அனுபவம் வாய்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார்.  வில்லிவலம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் கரகம் எடுத்துத் தெருவழியாக வலம் வந்து, அம்மன் கோவிலில் இறக்கி வைக்கும் காட்சி எடுத்த போது, அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்கள் செலவில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து நடித்ததோடு அல்லாமல், திலீப்குமாரின் வீரனார் ஆட்டத்தைப் பார்த்து வியந்து போனர்கள்.  அந்த பாத்திரமாகவே படத்தில் வாழ்ந்து அந்த கதாபாத்திரத்தை வாழ வைத்திருகிறார்.  சண்டைக் காட்சியிலும் இயல்பாக நடித்து படப்பிடிப்புத் தளத்தில் கை தட்டலை  வாங்கியிருக்கிறார்.

கதாநாயகி ஜானவி, மும்பை அனுபம்கெர் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.  வசனங்களை உள்வாங்கிக் கொண்டு, தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். திலீப்குமார், ஜானவி இருவரது நடிப்புத் திறமையைப் பார்த்து 350 படங்களுக்கு மேல் நடித்த வடிவுக்கரசி, வியந்து ஆச்சரியப்பட்டார்.

கதாநாயகனின் பெரியப்பாவாக, சாமியாடி வேடத்தில் எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார்.  அவரவர், தங்கள் தெளிவுக்குத் தகுந்தது போல் வாழ்கை நடத்துவது போல, அவரும் அவரது தெளிவுக்குத் தகுந்தது போல் பேசி வாழும் கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.  அவர் அறியாத விஷயங்களைப் பற்றி யாரும் பேசினால் அவருக்குக் கோபம் வந்து விடும்.  அப்படி ஒரு கோபக்காரராக நடித்து சிரிக்க வைக்கிறார்.  அவரை உசுப்பேற்றும் வேடத்தில் இமான் நடித்திருக்கிறார்.

’ஒச்சாயி’ படத்தின் தயாரிப்பாளரும், அந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவருமான திரவிய பாண்டியன், இந்தப் படத்தில் பசுத்தோல் போர்த்திய புலி போன்ற வில்லன் வேடத்தில் நடித்து, அந்தப் பாத்திரத்தை வலிமைப் படுத்தி இருக்கிறார்.

கலை இயக்குநர் சண்முகம், இந்தப் படத்தில் ஒரு கோபக்கார இளைஞராக நடித்திருக்கிறார்.  புதுமுகம் பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா என பலர் நடித்திருக்கின்றனர்.  கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன்.

ஒரிய மொழியில் அறுபது படங்களுக்கு மேல் பணியாற்றிய, ஸ்ரீ ரஞ்சன் ராவ் என்கிற ஒளிப்பதிவாளரை, இப்படத்தில் பயன்படுத்தி, அவரது திறமையை பயன்படுத்திக் கொண்டேன்.  அதே போல கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ. தஷியின் இசையில் ஆறு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது.  எல்லாமே சூழ்நிலைக்குத் தகுந்த மாத்திரி எழுதப்பட்ட பாடல்கள்.

தனு கார்த்திக் எழுதிய வீரனார் பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும். அந்த அளவுக்கு பாடலில் டெம்போ இயல்பாகவே அமைந்திருக்கிறது.  எனக்குத் தெரிந்து, வீரன் பற்றிய பாடல் இதுவரை வெளிவந்ததில்லை என நினைக்கிறேன்.  அதே போல பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், வாட்டாக்குடி இராஜராஜன், சிங்கப்பூர் சொ. சிவக்குமார், இனியதாசன் போன்றவர்கள் எழுதிய பாடல்களும் பெரிய அளவில் பேசப்படும். ஒரு பாடலை சிங்கப்பூரில் எடுக்க இருக்கிறேன்.

வித்தியாசமான நடனத்தை, நடன இயக்குநர் ஈஸ்வர் பாபு, ரமேஷ் ரெட்டி அமைத்திருக்கின்றனர்.  பரபரப்பான சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் தேஜா பயிற்சி அளிக்க படமாக்கி இருக்கிறேன்.

கிராமத்துக் கதை என்பதால், காஞ்சிபுரம் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்திலும், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்திலும் படமாக்கி இருக்கிறேன்.

மக்களிடம் நான் பார்த்த விஷயங்களை எடுத்து, அதை படமாக்கி இருக்கிறேன்.  நான் எதையும் கற்பனையாக கொண்டு வரவில்லை.  எல்லாமே இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான்.  கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகத்தானே!

இந்தப் படம் திரையில் ஓட ஆரம்பிக்கும் போது, முதல் காட்சியிலேயே அந்த கிராமத்துக்குள் சென்று அங்கு தங்கி, அந்தக் கதாபாத்திரங்களுடன் பேசிப் பழகி, வாழ்ந்து, படம் முடியும் போது அந்த கிராமத்தை விட்டு வெளியே வருகிற உணர்வை ஏற்படுத்தும் படமாக ரசிகர்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்….” என்று கூறினார்.

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.