தி.சுபாஷிணி


சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று இயல்பாய் பயணித்தமை மிகவும் யதார்த்தமாய், நடப்பின் வரப்பில் மிகவும் பழகிப் போனது போல் அவருடனே பயணித்தது எளிமையாய் இயற்கையாய் இருந்தது. அது சாதாரண இரயிலாய் இருந்தாலும், சிறப்பு விரைவு இரயிலாய் இருந்தாலும், பயணத்தின் தன்மையைக் கட்டுப்படுத்த வில்லை. அவருடன் இணைந்து செல்ல ஏதுவாகிறது. ஆனால் அடுத்த தளமாகிய ‘கவிதைக்கு’ வரும் போது, கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் அச்சம், கொஞ்சம் நம்பிக்கையின்மை என்மேல் படர்கின்றது. இக்கலவையான உணர்வு வெளியிலேயே அவர்தம், ‘கவிதைகளுடன்’ பயணிக்கிறேன். நண்பர்களே! தவறாயின் மன்னியுங்கள் அது முழுவதும் என்னுடைய அறியாமையைத்தான் சாரும். இதற்கான முழு பொறுப்பும் என்னுடையதே.

கவிதைகள்: நாஞ்சில் நாடனின் முதல் கவிதைத் தொகுப்பு. விஜயா பதிப்பகம் ஜூலை 2001ல் வெளியிட்டிருக்கிறது, 64 பக்கங்கள் கொண்டது.  ஜீவா ஒவியங்கள் தீட்டியிருக்கிறார். விலை ரூ.30.

”என்றுமே கவிதைக்கு நான் ஒரு வாசகன்” என்று தன்னைப் பணிவாகக் கூறிக் கொள்கிறார். சிறுவயது முதல் கேட்ட பாடல்கள், தமிழாசிரியர் , சமய சொற்பொழிவு , வில்லுப்பாட்டு , பள்ளி நாட்களில் காவல் கிடந்து கேட்ட, பங்கு கொண்ட பேச்சுப் போட்டிகள் ஆகியவைகள் மூலமாகத் தெறித்து விழுந்த கவிதை வரிகள், கவிமணி பாரதி, பாரதிதாசன் எனப்பல அணுக எளிமையாய் இருந்த கவிதைகள் அறிய வந்த தாக்கத்தில் தானும் எழுதிப் பார்த்திருக்கிறார். அவரது உரை நடையில் சில வரிகளில் கவிதையின் வீச்சு காணப்படுகின்றன. அது அவர் சங்க இலக்கியம், கம்பன், ஆழ்வார், நாயன்மார், சித்தர், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றைத் துய்த்த பாதிப்பாக இருக்கலாம் என்கிறார் நாஞ்சில் நாடன். நாவலாக, சிறுகதையாக, கட்டுரையாக எடுத்து விட முடியாத தனக்குள் நீந்திக் கொண்டிருக்கும் வரிகள் கவிதைகளில் சாத்தியமாகின்றது என்கிறார் கலைமாமணிக் கவிஞர்!. 1990ம் ஆண்டு தொடங்கி 2000 ஆவது ஆண்டு வரை இதழ்களில் வெளி வந்த கவிதைகளின் தொகுப்பாக மிளிர்கின்றது ‘மண்ணுளிப் பாம்பு’ என்னும் இச்சிறு கவிதை தொகுப்பு. (அடுத்த பத்தாண்டு கழித்து ‘பச்சை நாயகி’ என்றும் இரண்டாவது தொகுப்பு 2010 டிசம்பரில் சென்னைப் புத்தக கண்காட்சியில் உயிரெழுத்து வெளியிடப்பட்டது)

தண்டவாளங்கள் தாங்கும்

நாட்பட்ட கிடப்புக்

கட்டை

இனி எங்கே

கட்டில் மேஜை நாற்காலி

அடுப்பெரிக்க ஆகும்

தசை நார்கள்

அதிர்ந்து அதிர்ந்து

தாங்கும் நிலைக்கும்

எரியும் நிலைக்குமான

பகுப்புக் கோட்டில்

அவன்.

இக் கவிதையில் அவர் கூறிய ‘அவன்’ என்பதோடு ‘அவளையும்’ சேர்த்துக் கொள்கின்றேன். வீட்டிற்குத் தலைப் பிள்ளை இல்லாவிடில் ஒரு வீட்டில் பொறுப்பைத் தானாக முன் வந்து சுமக்கும் பிள்ளை, அவன் மேல் சுமத்தப்பட்ட பிள்ளைகள் மற்றும் சமுதாயத்தின் தாக்குதல், எதிர்ப்பார்ப்புகள், கிடைக்கும் பொருளும் தேவையும் தலைகீழ் விகிதத்தில் இருக்கும் நிலைப்பாடு, வறுமைத்தீயக்கும் உணர்வுத் தீய்க்கும் தங்களை எரித்துக் கொள்ளும் நிலைக்கோடு  ஆகிய இரண்டுக்கும் இருக்கும் பகுப்புக் கோடு என்று நான் உணர்கின்றேன். கவிஞரின் நிலையில் நிற்கிறேனா என்பது தெரியாதா எனக்கு.

அருள் ஞானப் பழம் கூட

அழுகக்

கூடும்

இக்கவிதை எனக்கு விதியின் பயனை ஞானியும் துய்க்கத்தான் வேண்டும் என்கின்றது.

இருட்டுக்கு அறிவு விடியும்

அகாலத்தில்

சின்ன இருட்டின்

சிந்தனையில்

தொடுவானம் துலங்கும்

இருட்டு அறிந்திடுமோ கவிஞரே-! தான்தான் “விடியலுக்கும” என்று அறிந்திடுமோ கவிஞரே!

மண்ணுளிப்பாம்பு

பாம்பினம்தான்

கரையான் தின்று

புற்றினுள் கிடக்கும் மண்ணுள்ளி

வேதம் பயின்றதால்

கடி பழகிக் கொள்ளவில்லை

சீறல் தெரியாது

விஷமில்லை யாதலால் விலையில்லை

தோலாலும் பயனில்லை

எனக்கெனவோர்

ஜீவித நியாயம் கிடையாது

என்னுடல் நீர்பட்டால்

தோலெல்லாம் எனதே போல்

ஆமென்று யாரோ அறிவிக்க

கல்லால் தடியால்

உனையடிப்பாரில்லை

எனினும்

தீ வளர்த்து

எறிவார்

தூக்கி

மண்ணுள்ளிப் பாம்பின் தன்னிரக்கப் பாடல். என்ன செய்ய! ஈண்டு சமுதாயத்தில் மெலியரின் நிலைப்பாடு இதுதானே நண்பர்களே! பண வலிமை வேண்டும். இல்லையெனில் அரசியல் செல்வாக்கு வேண்டும். வாய்த்திறமையாகினும் வேண்டும். அடுத்த கவிதை இயலாமையின் வெளிப்பாடு. முதுமையின் இயலாமை.

வதை

மூக்கில் பொடி தூவி

சவுக்காய் வால் முறுக்கி

பல்பதியக் கடித்து

தாரேற்றி

முகம் பொசுங்கப் புகைபோட்டு

பட்டாசு வெடித்து

ஆசன வாயில் எரிவன அரைத்துப் பூசி

என் செய

சண்டித்தனமல்ல

தள்ளாமை

மறியலல்ல

இயலாமை

சாலை நடுவில்

எம் கிடப்பு

கிராமத்துச் சாலையின் ஒரு ஓடை. அதன் ஓரத்தில் சோம்பேறியான ஒரு பாம்பு. அதைக் கண்ட நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வாலைப் பிடித்து ஓங்கி சுழட்டி அடிக்கின்றனர். போதமிலாது விழுகின்றது தரையில். வாலில் மட்டும் சிறியதுடிப்பு. இதைக்கண்ட சிறுவர்கள் ‘வாலின் உயிரே தலைக்கு வா’ என மந்திரம் போல் ஓதுகின்றனர். அங்கு வந்த அந்தணச் சிறுவன் கழித்துத் தெளித்த சிறுநீரின் வெம்மையில் உயிர்பெற்றது. உடல் நெளிகின்றது. ‘நச்சென்று’ வெட்டாங்கல்லில் அடி.

வாலில் இருந்து நகர்ந்து ஏறிய

நைந்த உயிரும் கடிதில் போச்சு

காற்றில் கேட்டது பள்ளியின் முதல்மணி

காகம் மட்டும் பாம்பைச் சற்றுக்

கனிவுடன் கண்டது

‘உயிர்’ எனும் இக்கவிதை, யாரை நோவது-? ஆணையா? பெண்ணையா? ஓழுக்கம் என்பது கற்றுக் கொடுத்தா வரும் கவிஞரே-! மன இயல்பாக, அறிவின் தெளிவாக இருக்க வேண்டாமா-! என்று கிடைக்கும்-? எங்கு கிடைக்கும்?

சொல்லில் முடியாத சோகம்

“இரவெல்லாம் விழித்து

அடர்மழை பொழியும்

காலையில்

எழுதி முடித்தான்

நோபல் பரிசின் ஏற்புரை

படைப்பை இனிமேல்

யோசிக்கலானான்”

படைப்பின் நம்பிக்கை தரிசனம் இது.

கவிதை

“மொழியின் மூச்சென

உயிரின் துடிப்பென

புனிதமானதென அமரத்துவம் பெற்றதென

புரட்சியின் மின்னல் கொடியென

அக்கினிக் காற்றாய் வீசியது

குளிர்பதன அரங்குகளில் கவிதை

அது

செந்தமிழும் அறியாத

சித்திரமும் தெரியாத

செவிட்டு ஊமையின்

கனவு”

என்று  கவிதையார் மண்ணைப் பகர்வது தனித்துவங்களைக் கூறுவது போல் கூறி, அது அரங்கேறும் அரங்குகளில் உலா வருவதைப் பதிவு செய்கிறார் கவிஞர்.

“ ‘நடுநிலைப் பள்ளியின் மாணவப் பத்திகள்’

‘சிறுகண் ஒளிர சிலம்பித்திரிகையில்’

‘எம் முற்றத்தில் தெரியக் கிடப்பன எவர்தலை ஓடுகள்’ ”

ஆகியவை எனக்குப் பிடித்த வரிகள். மரபு சார்ந்த மொழி நடை, பேசப்படும் பொருள், பகிர்ந்து கொள்ளப்படும் பொருள் மிகவும் அழுத்தமானதாக இருக்கிறது. சிறு பிள்ளைத்தனமாய், அந்திப் பொழுதில் படிப்பது போல் அல்லாமல், மிகவும் கவனமாக காலைப் பொழுதில் படிப்பது போல் படிக்க வேண்டி இருக்கிறது. புரிந்து கொண்டு விட்டோமோ என்ற அச்சத்திலும் நான் இருக்கிறேன். என் அறிதல் புரிதல் நிலை அப்படி! இக் கவிஞருடன் அவருடைய கும்ப முனியும் அவர் தலையில் அமர்ந்து இருக்கிறார் என்ற உணர்வை நான் உணர்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *