நான் அறிந்த சிலம்பு – 207
–மலர் சபா
மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி
கண்ணகி கோவலனைத் தழுவுதலும், அவன் உயிர்பெற்று எழுந்து பேசுதலும்
இவ்வாறெல்லாம் அழுது புலம்பினாள் கண்ணகி.
இலக்குமி வசித்துவரும் கோவலனின்
பொன்மார்பு தன் மார்போடு பொருந்துமாறு
அவள் அவனைத் தழுவிக் கொண்டாள்.
அப்போது கோவலன் உயிர்பெற்று எழுந்தான்.
“முழுநிலவு போன்ற உன் முகம் ஒளி குன்றிவிட்டதே”
என்றே அவன் கூறி,
அவளுடைய கண்ணீரைத்
தன் கைகளால் துடைத்தான்.
தன் பாதத்தைக் கண்ணகி பற்ற, கோவலன் வானுலகு செல்லுதல்
கண்ணகி ஏக்கம் கொண்டு அழுது, நிலத்தில் வீழ்ந்து,
வணங்கத் தகுந்த தன் கணவனின் திருவடிகளைத்
தன் கையால் பற்றிக் கொன்டாள்.
அந்த நேரம், வெட்டுப்பட்ட கோவலன்
உடல் காயங்கள் எல்லாம் நீங்கப்பெற்று,
உயிரோடு சொர்க்கம் புகுந்திட எழுந்தான்.
“ஓவியத்தில் வரைந்திட்டது போன்ற
அழகிய மைதீட்டிய கண்களை உடையவளே!
நீ இங்கேயே இருப்பாயாக” என்று கூறித்
தேவர்களுள் ஒருவனாகி வானுலகம் சென்றான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html—
படத்துக்கு நன்றி: கூகுள்