நினைவு நல்லது வேண்டும் (4)
முனைவர் சங்கரராமன்

“பிரச்சினைகளை சமாளிப்பது எப்படினு நீங்க எழுதுங்கள் சார்” என் அன்பு மாணவனின் வேண்டுகோள் … எனக்கு என்ன பயமென்றால் பதிவை படித்துவிட்ட பிறகு பிரச்சினைக்கு வந்து விடுவார்களோ என்ற எண்ணத்திலேதான் எழுதுகிறேன். இந்த உலகில் இதுவரை பிரச்சினையைக் கண்டு ஒதுங்கியவர்கள் யாரும் வாழ்வில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
சிலர் அணுகும் முறையிலேயே பிரச்சினையை அதிகரித்துவிடுகிறார்கள். “காலைலேயே போனா. இன்னமும் வரல. எப்பவுமே சீக்கிரம் வந்துருவா ..இன்னமும் வரல” என்றே குழந்தைகள் பள்ளி கல்லூரி விட்டு வர தாமதமாகும் போது பெற்றோர்களுக்கு வரும் கவலை நியாயமானதே. ஆனால் வெறும் கவலை மட்டும் அதற்கு தீர்வாகிவிடுமா ?.
நமக்கெல்லாம் ஞாபகம் இருக்கும் முன்னர் தந்தி வந்தது என்றால் முதலில் அழுதுவிட்டுதான் பிரிப்பது வழக்கமாகவே இருந்தது . கடைசியாக அது வேலை கிடைத்த தந்தியாகவோ வாழ்த்து தந்தியாகவோஇருக்கும்.பிரச்சினைகளை புரிந்துகொள்ளும்போதே பாதி தீர்வு கிடைத்துவிடும். கண்ணாடிக் கதவுகளில் தள்ளு ,இழு என்று எழுதப்பட்டிருக்கும் அதை மாற்றிச் செய்தால் ஒரு போதும் கதவுகளை திறந்திட முடியாது. முதலில் பிரச்சினைகளை புரிந்துகொள்ளுங்கள். இரண்டாவது அதை எதிராளியின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். பிரச்சினைகள் தீரந்துபோகும்
ஒரு சிறிய எலந்தைப் பழத்தை வைத்து பார்க்க சொல்லிவிட்டு கண்களை மூடச் சொல்லிவிட்டு திறக்கும்போது லென்சு ஒன்றை வைத்து அதே எலந்தைப் பழத்தைப் பார்த்தால் அதுவே பலாப்பழம் போல தெரியும் . உண்மையில் நமக்கு வரும் சிக்கல்களை நாம் அணுகும் முறையின் அவசரத்திலே அதை மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றி விடுகிறோம். எப்போதும் தீர்வுகளோடுதான் எல்லாப் பிரச்சினைகளுமே வரும். ஆனால் பதட்டத்தால் நாம் தீர்வுகளைக் கண்டுகொள்வதே இல்லை. தேவையின்றி நாம் படும் கவலைகளால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் . அதே போன்று மோசமான ஒன்று நம்முடைய வறட்டுப் பிடிவாதங்கள் . அவற்றால் நாம் இழந்தவற்றை பட்டியலிட்டாலே தெரிந்து விடும். எத்தனை சுவாரசியமான வாழ்வை நாம் எத்தனை சிக்கலாக்கி வைத்துள்ளோம் என்று …
வறட்டுப் பிடிவாதங்கள் கவலைகள் அனைத்தையும் தூக்கி எறிவதே அனைத்து பிரச்சினைகளுக்குமே தீர்வாக அமையும்
கவலைகளால் எதையும்
கடந்துவிட முடியாது
மகிழ்ச்சியோடு அணுகுங்கள்
காணாமல் போகட்டும் கவலைகள்
தொடருவோம்