க. பாலசுப்பிரமணியன்

பேசும் திறன் – சில பார்வைகள்

education-1

பல நேரங்களில் நாம் மற்றவர்களுடன் தனியாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ அல்லது கூட்டமாகவோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது  கீழ்கண்டவைகளை நாம் கவனித்திருக்கலாம்

       1.. ஒருவர் பேசும் பொழுது மற்றவர் குறுக்கிடுதல்

 1. ஒருவர் பேசுவதை உடன் மறுத்துப் பேசுதல்
 2. ஒருவர் பேசுவதை முழுதும் கேட்காமலேயே பேசத் துடித்தல்
 3. ஒருவரோடு பேசும்பொழுது தேவையில்லாமல் குரலை உயர்த்திப் பேசுதல்
 4. ஒருவரோடு பேசும்பொழுது கோபத்தோடு பதிலளித்தல்
 5. ஒருவர் பேசியதை நிதர்சனமாக தரம் குறைத்தல்
 6. ஒருவர் பேசியதையே மீண்டும் திருப்பிச் சொல்லுதல்
 7. மற்றவர்களைப் பேசவிடாமல் தானே பேசிக்கொண்டிருத்தல்
 8. மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்க மறுத்தல்
 9. தன் கருத்தை மற்றவர்கள் மீது திணித்தல்

இது போன்ற குறுக்கீடுகள் பேசும் கலையின் தரத்தைக் குறைக்கின்றன. பல அரங்கங்களிலும், நிறுவனங்களிலும் சில நேரங்களில் கருத்துப் பரிமாற்றங்களுக்காக கூட்டங்கள் நடத்தும் பொழுது இந்த மாதிரியான செயல்களை ஒருவருடைய அறியாமையாகவோ அல்லது முதிர்ச்சியில்லாத நடத்தையாகவோக் கருதுகின்றனர்

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மொழிசார்ந்த கற்றல் நடக்கும் தருணங்களில் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி எவ்வாறு பேசும் திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விளக்குதல் மற்றும் அறிவுறுத்தல் அவசியம்..

மேலும் ஒருவரோடு உரையாடல் நடக்கும்பொழுதில் கீழ்கண்ட குறிப்புகளை மனதில் கொள்ளுதல் அவசியம்:

 1. மற்றவர்களோடு பேசும் பொழுது அவர்களுடைய கண்களை பார்த்துப் பேசுதல் வேண்டும்.
 2. தலை குனிந்தோ, வேறு இடங்களில் பார்வையை திருப்பியோ வைத்துக் கொண்டு பேசவோ அல்லது கேட்கவோ கூடாது.
 3. மற்றவர்கள் பேசும் பொழுதோ அல்லது நாம் உரையாடும் பொழுதோ நமது உடல் நிமிர்ந்தும் நேராகவும் இருத்தல் அவசியம்.
 1. தொட்டுப் பேசுதலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பல நாடுகளில் அதை மரியாதைக் குறைவாகக் கருதுகின்றனர்.
 2. நாம் நிற்கும் தூரம், நம்முடைய குரலின் வளம் மீது கவனம் தேவை.
 3. குரலின் உயர்வு தாழ்வு மற்றும் நெகிழ்தல் ஆகியவை கேட்பவரின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்புள்ளது.

உரையாடலின் போது பேசுபவர்களுக்கிடையே  உடல்மொழி பரிமாற்றங்கள் நடக்கின்றன. இது பார்ப்பதற்கு ஒரு அறிய விருந்து. விளையாட்டாக இதை “உரையாடல் நடனம்” (conversational dance ) என்று சொல்லுவார்கள்.

கற்றல் மேலும் சிறப்பாக அமைவதற்கு ஒரு தலை ராகமாக பாடங்களை நடத்தாமல், கருத்துப் பரிமாற்றங்களுக்கு கீழ்கண்ட முறைகளை பயன்படுத்தினால் அதிக பலன் அளிக்க வாய்ப்புள்ளது.

 1. குழு விவாதம் (Group Discussion)
 2. மூளை தாக்கங்கள் (Brain storming)
 3. நேரடியான விவாதங்கள் (Debate)
 4. மேடை விவாதங்கள் (Panel discussion)
 5. அறிக்கையிடல் (Reporting )
 6.  கதை வழங்கல் ( Narrative presentation )

பல நேரங்களில் மாணவர்களும் இளைஞர்களும் அறிவுடையவர்களாக இருந்தாலும் திறன் உடையவர்களாக இருந்தாலும் பேச்சுத்திறன் இல்லாமையினாலோ அல்லது பேசும் கலையின் நுணுக்கங்களை அறியாததாலோ முழுத்தகுதி இல்லாதவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆகவே கற்றலில் பேசும் திறன்களை வளர்த்தலும் போற்றுதலும் இன்றியமையாததாகும்.

சில நேரங்களில் சில மேடைப் பேச்சாளர்களை நாம் பேச்சுத்திறன் உடையவர்களாகக் கருதுகின்றோம். எவ்வாறு மேடைப்பேச்சுக்கு சில திறன்கள் தேவையோ அதே போல ஒவ்வொரு முறையான பேச்சுக் கலைக்கும் வேறுபாட்ட திறன்கள் தேவைப்படுகின்றன. ஆகவே பேசும் திறன்களின் எல்லாவிதமான நுணுக்கங்களையும் கற்றலும் அவைகளை தேவையான அளவில் உபயோகித்தாலும் தேவை.

நல்ல பேச்சுத் திறனுக்கு கற்றல் மிகவும் அவசியம். நல்ல பல நூல்களையும்  சான்றோர்களின் கருத்துகளையும் மற்றும் நடைமுறையில் உள்ள அறிவுசால் நூல்களையும் நன்றாகப் படித்து அவைகளின் கருத்துக்களை உள்வாங்கி தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் தகுந்த முறையில் உபயோகித்தல் ஒரு சிறந்த பேச்சாளரின்  அறிகுறி. எந்த இடத்தில் ஒருவர் பேசினாலும் பொது அறிவு (common sense ) மிகவும் இன்றியமையாதது. நல்ல பல கருத்துகள்கூட நடைமுறை பொதுஅறிவு இல்லாதவரிடம் உயிரற்ற பொருளாகிவிடும். மற்றும் பேசும் கலைக்கு உயிர்நாடியாக இருப்பது ஒருவரின் நகைச்சுவை உணர்வு. இதைப் பற்றி மேலும் விவரமாகப் பார்ப்போம்.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கற்றல் ஒரு ஆற்றல் 26

 1. க.பா. அவர்கள் சொல்வதை தனிப்பக்கமாக அச்சடித்து வினியோகிக்கலாம். எல்லாமே பாயிண்ட் மேட். தொடருக, க.பா. உங்கள் பத்து கட்டளைகளை இரவல் வாங்கி மற்றவர்களுக்கு, க.பா. சொன்னபடி என்று பரப்புரை வழங்கப்போகிறேன்.
  இன்னம்பூரான்

 2. அன்புடையீர்,
  வணக்கம். 
  தங்கள் கனிவான கருத்துக்கு தலை வணங்குகிறேன். பல நூறு ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கூறியதைத் தான் நானும் என்னுடைய வார்த்தைகளில் உள்ளடக்கியிருக்கிறேன். தற்கால அவசர வாழ்க்கைக்கு இவை  மீண்டும்  ஒரு நினைவூட்டல். 

  நன்றி.
  அன்பன்,
  க.பாலசுப்ரமணியன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *