குறளின் கதிர்களாய்…(121)
–செண்பக ஜெகதீசன்
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து. (திருக்குறள் -565: வெருவந்த செய்யாமை)
புதுக் கவிதையில்…
எளிதில் காண்பதற்கு அரியவனாய்,
இன்முகம் காட்டாமல்
இறுகிய முகத்துடன் உள்ளவனிடம்
உள்ள செல்வம்,
பேய்பெற்ற பெற்ற பெருஞ்செல்வம்போல்
பயனற்றதே!
குறும்பாவில்…
எளிதில் காணமுடியாதவனாய்
இன்முகம் காட்டாதவன் செல்வம்,
பேய்பெற்றதைப் போன்றதே…!
மரபுக் கவிதையில்…
யாவரும் காண முடியாதவன்,
–என்றும் இனிய முகத்துடனே
தேவைக் கேற்ற இன்சொல்லைத்
–தெரிந்து பேசத் தெரியாதவன்
சேவை செய்யுந் தலைவனாகான்,
–சேர்த்த அவன்தன் செல்வமதும்
ஆவியாய் அலைந்திடும் பேயதுதான்
–அடைந்த செல்வம் போன்றதுவே…!
லிமரைக்கூ…
இன்சொல்லது சொல்லாமல் வாயால்,
இன்முகத்தை எளிதில் காட்டாதான் செல்வம்,
செல்வமாமே சேர்த்தது பேயால்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் பாக்கவேணும்
எப்பவுமே பாக்கவேணும்
மனுசன
எளிசாவேப் பாக்கவேணும்…
பேசவேணும் பேசவேணும்
மனுசன்
நல்லசொல்லாப் பேசவேணும்,
நல்லமொகமாப் பேசவேணும்…
இப்புடியெல்லாம் இல்லாதவங்கிட்ட
இருக்கிறதெல்லாம் செல்வமில்ல,
அது
பேயதுதான் சேத்துவச்ச
பெருஞ்செல்வம் பெருஞ்செல்வம்,
ஒருத்தருக்கும் ஒதவாத
பெருஞ்செல்வம் பெருஞ்செல்வம்…!