அகில இந்திய மொழி நல்லிணக்க நாள் – கவிதாயினி மதுமிதாவின் பங்கேற்பு
கவிதாயினி. மதுமிதா
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை கடந்த 2009 -ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியன்று, பெங்களூருவிலும், கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் திருவுருவச் சிலை அதே மாதத்தில் 13 -ஆம் தேதியன்று சென்னை அயனாவரம் ஜீவா பூங்காவிலும், அப்போதைய தமிழ்நாடு, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வக்ஞரும் திருவள்ளுவரைப் போலவே ஒரு ஒப்பில்லா புலவராவார். கர்நாடக மாநிலத்தின் ஹவேரி மாவட்டத்தில் ஹிரேகெரூர் தாலுக்காவின் அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவராவார். மூன்று அடிகளைக் கொண்ட ‘திரிபதி’ எனப்படும் இவர் இயற்றிய செய்யுட்கள் ‘வசனா’ என வழங்கப்பட்டன. ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுட்கள் இது வரையில் கிடைத்துள்ளன.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிகள் நிச்சயமாக இரு மாநில மக்களின் இதயங்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை வளர்ப்பதாகவே அமைந்தன. இதைப் பாராட்டும் விதமாக கடந்த 2010 – ஆம் வருடம் ஆகஸ்ட் 13- ஆம் தேதி ‘அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்’ கன்னட மற்றும் கலாச்சாரத் துறையால் கொண்டாடப்பட்டது.
பெருமளவில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் அண்டை மாநிலங்களிலிருந்து கலந்து கொண்ட அந்த இலக்கிய விழா, இலக்கியத்தின் மூலமாகவும் மனங்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியதன் பலனாக, இந்த வருடமும் கடந்த ஆகஸ்ட் 13 – ஆம் தேதியன்று, பெங்களூரின் ‘கன்னட பாவன நயனா’ அரங்கில் ‘அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்’ கொண்டாடப்பட்டது.
காலையில், ‘கலாச்சாரப் பரிமாற்றக் கருத்தரங்கும்’ இடைவேளைக்குப் பின், ‘பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பும்’ நடந்தன. இந்த விழாவில் தமிழ் மொழியின் சார்பாக கவிதாயினி மதுமிதா அவர்கள் கலந்து கொண்டார்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?. அதுபோல்தான் நம் மதுமிதாவும். இவரது படைப்புகள் வெளியாகாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். மற்றும் ‘மகாகவி பர்த்ருஹரி’ யின் பொன் மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தும் உள்ளார்.
விழா மேடையில் திரு. ராமதாசுடன்.
‘அமிழ்து அமிழ்து’ என்று இடைவிடாமல் உச்சரித்துப் பாருங்கள். அது ‘தமிழ் தமிழ்’ என்று ஒலிக்கும். அப்படிப்பட்ட ‘தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வேண்டும்’ என்று ஆசை கொண்டான் பாரதி. அந்தத் தமிழ் மொழியின், நம் இலக்கியங்களின் பெருமையை, மதுமிதாவின் வாய்மொழியிலேயே கேட்கலாம், வாருங்கள்..
எல்லரிகி நமஸ்காரா.
இல்லி நிம்ம எல்லரினி நோடுதிகி தும்ப சந்தோஷ. இவுக இங்கலீஸ் நல்லி நேனு மாதாடிதினி. சமஸ்பிடி.
இரண்டு நிமிடங்களுக்குள் பேச நேரம் கொடுத்திருக்கிறார்கள். இதோ நீங்கள் கேட்டுக்கொண்ட ’மொழியும் இலக்கியமும் குறித்து உங்கள் கருத்து என்ன’ என்பது குறித்து பதினைந்து நிமிடங்கள் பேச ஆங்கிலத்தில் உரை எடுத்து வந்திருக்கிறேன். தமிழ் மொழி குறித்தும் தமிழ் இலக்கியம் குறித்தும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் என்ன பேசிவிட முடியும். மூன்று நாட்கள் தொடர்ந்தாலும் அது குறித்து முழுமையாகப் பேசிவிடத் தான் இயலுமா?
மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களையும், உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள மொழி மிகச் சிறந்த சாதனம்.
இலக்கியம் என்பது ஆரம்பத்தில் வேதங்கள், உபநிஷதங்களாகட்டும், பின்னர் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகட்டும், இப்படித் தொடரும் வரிசையில், மனிதர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பாடல்கள் உருவில் இருந்தன.
வேதங்களையும், இதிகாசங்களையும் போன்று தாலாட்டு, விழாக்கால பாடல்கள், ஒப்பாரி முதலிய பாடல் வகைகளும் எழுத்து வடிவில் இல்லாது, செவி வழியாகத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள் தான். இன்று அவற்றில் பல எழுத்துவடிவம் பெற்று விட்டன.
சதகங்கள் என்றால் 100 பாடல்களைக்கொண்ட தொகுப்புகள். இலக்கியத்தில் இவை தனிவகை.
பத்து பத்தாக நூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பு பதிற்றுப்பத்து.
தெலுங்கில் நூறு பாடல்களான வேமன சதகம், சுமதி சதகம் பிரசித்தி பெற்றவை.
சமஸ்கிருதத்தில் திரி சதகங்களாக பர்த்ருஹரி சுபாஷிதம் 300 பாடல்களைக் கொண்டது.
தமிழில் அகநானூறு, புறநானூறு 400 பாடல்களைக் கொண்டவை. தமிழில் ஐங்குறுநூறு 500 பாடல்களைக் கொண்டது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணையிலும் நூறு நூறு பாடல்களாக இயற்றப்பட்டுள்ளது.
பிற மொழிகளிலும் சதக இலக்கியங்கள் பரவலாக இருக்கின்றன.
இதிகாசங்களும், சதகங்களும், செவிவழிப் பாடல்களும் அனைத்து இந்திய மொழிகளிலும் பொதுவாக உள்ள இலக்கிய வகையைச் (Pan Indian Literature genre) சார்ந்தவை.
சுதந்திர போராட்ட காலத்தில் தேச விடுதலை இயக்கப் பாடல்களை அளித்தவர் சுப்ரமணிய பாரதியார். இது இதற்கு முன்பு இல்லாத தனிவகை இலக்கியம்.
உரைநடை எழுச்சி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்தது. புதினம், சிறுகதை, கட்டுரை என அதன் வளர்ச்சி முன்னேறியது. முன்னால் பேசிய திரு நடராஜ் அவர்கள் ஜெயகாந்தனின் நூலை மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டார். பாரதியார், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களைத் தொடர்ந்து இன்றுவரையிலும் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் தமிழுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சரித்திரநாவல்கள் தனிவகையைச் சேர்ந்தவை. நெடுங்கதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும், மரபுக் கவிதைகளும், பின் வந்த புதுக்கவிதைகளும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றன.
ஆண் எழுத்தாளர்களைப் போன்று பெண் எழுத்தாளர்களும் இன்று வரை சிறப்பாக எழுதிவருகிறார்கள். திருநங்கைகளின் வரிசையில் பார்த்தால் ‘லிவிங் ஸ்மைல் வித்யா’வும் தனது சரிதையைத் தமிழில் கொடுத்துள்ளார். அதை டாக்டர் தமிழ்ச்செல்வி கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் வெளிவரும் மொழி பெயர்ப்புகளை நான் பெரிதும் மதிக்கிறேன். பல மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற மொழியறியாத தமிழுக்கு கொண்டு சேர்க்கும் சீரிய பணியை அவர்கள் செய்கிறார்கள்.
மலையாள எழுத்தச்சன்களைக் கொண்டுதான் கேரளத்தில் குழந்தைகளுக்கு அ, ஆ சொல்லிக்கொடுத்து படிப்பை ஆரம்பித்து வைக்கிறார்கள். தெலுங்கில் கிருஷ்ணதேவராயரின் ஆமுக்த மால்யத நூலை தமிழ்ப் படுத்திய பன்மொழிப்புலவர் மு. கு. ஜகன்னாதராஜாவை ஆந்திராவுக்கு வரவழைத்து சிம்மாசனத்தில் அமரவைத்து மேலிருந்து பூமாரி பொழிந்து கௌரவம் செய்திருக்கிறார்கள். கன்னடத்திலும் அதே போன்று கௌரவிப்பதை டாக்டர் தமிழ்ச்செல்விக்கு செய்த சிறப்பிலிருந்து அறிய நேர்ந்தது. நானும் அவரும் இணைந்து அக்கமகாதேவியின் வசனங்களை இரண்டு வருட உழைப்பில் தமிழில் கொண்டு வந்தோம்.
இங்கே இதற்கு முன்பு வெவ்வேறு மொழிகளில் பேசிய அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்தது என்பதே இன்றைய சிறப்பாகக் கருதுகிறேன். இப்படியாக பிற மொழிகளில் எழுத்தாளர்களுக்கு சிறந்த மரியாதை கொடுக்கிறார்கள். பிற மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒரே ஒரு வேறுபாட்டைக் காண்கிறேன். இப்படிப்பட்ட மரியாதை தமிழில் எழுத்தாளர்களுக்கு இல்லை.
ஆங்கில மொழியில் ஆங்கில மொழி கட்டாயப் பாடமாக்கப் படவேண்டும் என்பதோ பிரெஞ்சு தேசத்தில் பிரஞ்சுமொழி கட்டாயப் பாடமாக்கப்படவேண்டுமென்பதோ இல்லை என்று இதற்கு முன்பு பேசியவரின் கருத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான கருத்தாக இருந்தது. கன்னடம் அந்நிய மொழியாகத் தோன்றவில்லை. மேடையில் பேச வந்த திரு ராமதாஸ் அவர்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ஞானபீட பரிசு பெற்ற அனந்தமூர்த்தி அவர்களைப் பார்த்து குருப்யோ நம: என வணங்கிச் சொன்னார். இவர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் இப்படியொரு மரியாதையை வெளிப்படுத்தும் மரபு இருந்திருக்காது. இதுவே தமிழ் எழுத்தாளர்களிடமும், தமிழ் மக்களிடையேயும் இருக்கும் நிலை.
தெரியாத மொழி பேசும் மக்கள் சேர்ந்திருக்கிறோம் என்னும் நினைவை மறந்து இந்த ஒருங்கிணைந்த நாளில் மன ஆழத்திலிருந்து மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர முடிந்தது. சென்ற வருடம் இதே அகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சர்வக்ஞர், திருவள்ளுவர் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் போன்று இன்று இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலும் பெரு மகிழ்ச்சியடைகிறேன். விடைபெறுகிறேன்.
தன்யவாதுகலு.
மதுமிதாவின் இந்த உரை, திரு. ராமதாஸ் அவர்களால் கன்னடத்திலும், திரு. நடராஜன் அவர்களால் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட, அரங்கமே மிகுந்த கரவொலிகளுடன் அதிர்ந்தது.
இடைவேளைக்குப்பின், நடைபெற்ற, ‘பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பில்’ அவர் வாசித்த கவிதையும், மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அர்த்தங்கள் பொதிந்த அந்தக் கவிதை இதோ, உங்கள் பார்வைக்காக.
ஆசிரியர் யார்?
ஒவ்வொருவர் கரங்களிலும்
பிரத்யேகமான புத்தகம் ஒன்று
திணிக்கப்படுகிறது
பூமியில் முதல் அடி வைக்கும்போதே
முதல் பக்க ஆரம்பமும்
கடைசி பக்க முடிவும் மட்டும்
அனைவருக்கும் ஒரேகாட்சி தான்
ஆனால் இடையிலுள்ள பக்கங்கள்
ஒவ்வொரு புத்தகத்திலும்
வெவ்வேறு விதங்களாக வேறுபடும்
ஏணிகளில் ஏறியும் இறங்கியும்
பாம்பின்வாயில் பிடிபட்டு
கடிபட்டும் தப்பித்தும்
படித்துக்கொண்டே தொடரும் பயணம்
இருளும் ஒளியுமான இரு சதுரங்களிலும்
மாறி மாறி காலத்தைக் கடத்திக்கொண்டு
கருப்பு வெளுப்பு கட்டங்களிடையே
ஒவ்வொருவரும் ஆடியே ஆகவேண்டும்
ஓய்வேயின்றி
எல்லா பக்கங்களிலும்
அவரவரே முதன்மை கதாபாத்திரம்
இன்பமோ துன்பமோ
பக்கங்களைப் புரட்டிக்கொண்டே போகவேண்டும்
பக்கங்கள் அனைத்தும் தீரும் வரை
விரும்பினாலும் விரும்பாவிடினும்
மாறிக்கொண்டே செல்கின்றன காட்சிகள்
பக்கங்கள் புரளும்பொழுதே
வந்துவிடுகிறது முடிவும்
அங்குமிங்கும் அனேக திருப்பங்கள்
மகிழ்ச்சியும் சோகமும்
குறுக்கும் நெடுக்குமாய்
கடந்து செல்கின்றன
கடைசிப் பக்கத்தில் கதை
திடுமென முடிந்து விடுகிறது
புத்தகத்தை மூடத்தான் வேண்டும்
முடிவை ஒத்திவைக்கவும்
புத்தகத்தில் உள்ளவற்றை மாற்றவும்
ஆசிரியருடன் தொடர்புகொள்ளவும்
ஒப்பந்தம் செய்துகொள்ளவும்
வீணாக விரும்புகின்றனர் சிலர்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார்?
யாருக்குத் தெரியும்!
மதுமிதா.
ஒருங்கிணைப்பாளர். திரு. மல்லிகார்ஜூனாவுடன்.
‘முப்பதுகோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்புமொழி பதினெட்டு உடையாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்’
என்று பாடிய பாரதியின் வாக்கிற்கேற்ப, மனங்களை இணைத்து ஒற்றுமையை வளர்க்கும் இதுபோன்ற மொழி நல்லிணக்க விழாக்கள், மென்மேலும் தொடரட்டும்..
படங்கள் தந்துதவிய அன்புத்தோழி முத்துச்சரம் ராமலஷ்மிக்கு மிக்க நன்றி.