ஈரோடு கதிர்

இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத் தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக் கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்லை. ஆனாலும் மனது சுக்கு நூறாய் உடைந்து சிதறிக் கிடந்தது. தோல்வி தோல்வி தோல்வி என எல்லாவற்றிற்கும் மனது அரற்றிக் கொண்டேயிருந்தது.

இதுவரை அணிந்திருந்த முகமூடிகள் மீது சொல்லொணா வன்மம் வந்து குடியேறியது. எப்படியேனும் முகமூடியை அணிந்து, யாரும் அறியா வண்ணம் முடிச்சிட்டு நேர்த்தியாய் மறைத்த உழைப்பு மறந்து போனது. அப்படியே கூரிய நகங்களை இரு பக்க கன்னப் பகுதியில் அழுத்தி முகமூடியை பிய்த்தெறியும் வெறியோடு இழுத்தான். சற்றும் முகமூடி அசையவில்லை, நகங்களை அழுந்த அனுமதிக்க மறுத்து கெட்டித்துக் கிடந்தது. நகங்கள் மட்டும் மடங்கி, நகக் கண்ணில் வலி பூத்தது.

முகத்தை அழுந்த தடவிப் பார்த்தான், கொஞ்சம் சுருக்கம் பாய்ந்திருந்தது. என்ன வேடம் இப்போது அணிந்திருக்கிறோமென்று புரிபடவில்லை. பூண்ட வேடங்களும், அணிந்த முகமூடிகளும் ஒன்றா இரண்டா!? எந்தக் கணத்தில் சுயம் தொலைந்ததென்பது மறந்து போயிருந்தது. எப்போதிலிருந்து முகமூடிகள் சுயத்தை சிதைக்கத் துவங்கின என்பதும் மறந்து போய்விட்டது. முகத்தைத் தடவிய விரல்களில், இப்போது எந்த வேடம் புனைந்திருக்கிறொமென்பதை உணர முடியவில்லை. நெற்றி ஒரு வேடத்தை, புருவம் ஒரு வேடத்தை, கன்னம் மூக்கு மூக்கு பிரிதொரு வேடத்தை நினைவூட்டியது. கண் இமைகள் இமைக்க மறந்து போய் விரைத்திருந்தது. உதடுகளிலொரு நிரந்தரச் சிரிப்பு அப்பிக் கிடந்தது. சிரிக்கும் உதடுகளை விரல்கள் கடக்கும் போது, உள்ளுக்குள் இருந்து பொங்கி வந்தது ஒரு குமட்டல். உள்ளுக்குள் சொல்லொணாத் துயரோடு சுமக்கும் ரணங்களில் வழியும் சீழ் குமட்டி வெளி வந்து, நிரந்தரமாய் பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் வழிந்தது. சீழின் நாற்றமும், உதடுகளில் படிந்திருக்கும் சிரிப்பின் போலிப் புரட்டும் சேர்ந்து அதீத அயற்சியைப் புகட்டியது.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற வாசகம் ஒரு கணம் மனதிற்குள் வந்து போனது. ”எவண்டா இதச் சொன்னது” என்ற ஓங்காரக் கோபம் வந்தது. ”வாழ்வே மாயம்” என்ற வாசகம் மனதிற்குள் வந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” வாசகத்தை துரத்தியடித்தது. ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தோன்றியது, உடன் இலவச இணைப்பாக ”ஏன் வாழக் கூடாது” என்ற கேள்வியும் வந்தது. இரண்டுமே செயற்கைத்தனமான கேள்விகளாகத் தோன்றியது. சினிமாவும் இன்னபிற பொழுது போக்குகளும் இது போன்ற நாடகத்தனமான பல சொற்றொடர்களை, கேள்விகளை தனக்குள் திணித்திருப்பதை உணரும் போது, எது நிஜம், எது நாடகத்தனம் என்பதே குழப்பமாய் இருந்தது.

எதை நோக்கிய பயணம் இந்த வாழ்க்கை என்பதில், ஒன்றேயொன்று மட்டும் விடையாகத் தெரிந்தது. அது மரணம். மரணம் என்பதை நினைக்கும் போதே அது அபசகுணம் என்ற உணர்வு வந்தது. அது எத்தனை நிஜமாய் இருந்தாலும் அது பற்றிச் சிந்திக்க மனதில் வலுவிருப்பதில்லை. விருப்பமுமிருப்பதில்லை. மரணிப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கும் போதே வறட்டுப் புன்னகையொன்று உதட்டில் வந்துபடிந்தது.

மரணத்தை நோக்கிய பயணத்திற்காக மட்டுமே பிறக்கிறோம், அதை நோக்கி கடிகாரத்தின் நொடி முள் போல், ஒவ்வொரு நொடியும் ’டிக்டிக்’கென நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது. இப்படித் தோன்றுவதும் கூட நாடகத்தனமோ எனவும் பட்டது. அவன் மேலேயே அவனுக்கு சொல்லொணாக் கோபம் கொப்பளித்து. ’எதுதாண்டா நிஜம்’?, ’எல்லாமே நாடகமோ?’ எனத் தோன்றியபோது அவன்மேலேயே அவனுக்கு அயற்சியும் அலுப்பும் கூடியது.

சிந்தனைகள் பின்னிக்கிடந்த மூளை எதையும் புதிதாய் சிந்திக்க மறுத்தது. எதைச் சிந்திக்க முனைந்தாலும் சிந்தனை சிக்கலையும், மரணத்தையுமே மையப்படுத்தியது. வாழ்வது வீணென்று சொன்ன மனதே சாவதும் எளிதன்று எனவும் சொன்னது. மூளைக்குள் ஏதோ ஒன்று நெளிவது போலவும், அந்த ஒன்று இரண்டாகி நான்காகி எட்டாகி பதினாறாகி என நினைக்கும் போது இதுதான் பைத்தியத்தின் முதல் கட்டமன்றோ எனவும் தோன்றியது. சிந்தித்து சிந்தித்து மூளை களைத்துப் போய், சிந்தனைகளைத் தொலைத்து மௌனித்துக் கிடந்தது. மௌனம் சூழ்ந்திருக்கிறதென நினைக்கும் போது விழிப்புத் தட்டியது. விழிப்பெது, சிந்தனை தொலைந்த உறக்கமெது எனவும் குழப்பம் குடிபுகத் தொடங்கியது!

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெது வெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத் தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடு தான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்து விட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன் போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக் கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில் படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெரு நாய் ஒரு ரிதத்தோடு ஓடிக் கொண்டிருந்தது. முதன் முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

————————————————————————————————–

வகை: சமூகம், புனைவு, சிந்தனை, இரவு, விடியல்

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.