( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

 

இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி

மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி

நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி

நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

 

புலனெல்லாம் தூய்மைபெற

புத்துணர்வு பொங்கிவர

அலைபாயும் எண்ணமெலாம்

நிலையாக நின்றுவிட

மனமெங்கும் மகிழ்ச்சியது

மத்தாப்பாய் மலர்ந்துவிட

வாசல்நின்று பார்க்கின்றோம்

வந்திடுவாய் தீபாவளி !

 

பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்

தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்

கஷ்டமான அத்தனையும் கழன்றோட வேண்டுமென்று

இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

 

தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்

தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்

தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்

தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

 

ஓலைக் குடிசையிலும் ஒழுகிநிற்கும் வீட்டினிலும்

கூழைக் குடித்தாலும் குறையெனவே எண்ணாமல்

வாழக்கிடைத்ததை வரமாக எண்ணி எண்ணி

வாழ்கின்றார் மகிழ்ந்துவிட வந்திடட்டும் தீபாவளி !

 

ஏழையொடு பணக்காரர் எல்லார்க்கும் தீபாவளி

வாழ்வினிலே வருவதனை வையகத்தில் பார்க்கின்றோம்

வசதிபல வந்தாலும் மனமகிழ்ச்சி வரவேண்டும்

மனநிறைவு பெற்றவர்க்கே வாய்க்கும் நல்லதீபாவளி !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.