சாந்தி மாரியப்பன்.

என் மீதான உன் காதலை

தவிப்புடன் அடை காத்த நெஞ்சை

உதடுகளிலிருந்து உதிரும் சொற்களை முந்திக் கொண்டு

காட்டிக் கொடுத்து விடுகின்றன…

அலைபாயும் உன் கண்கள்;

இறுமாந்து போகிறேன் நான்…

 

நிராகரிக்கப் படாமல், உனக்கென நிச்சயிக்கப்பட்டதும்

மழையெனப் பொழிந்த உனதன்பால்

நமக்கென ஓர் கனவுலகை படைப்பிக்கிறாய்..

உன் கண்கள் வழியே காணும் கனவும் கூட

சுகமாய்த்தான் இருக்கிறது;

பெருமிதப் படுகிறேன் நான்…

 

குறுகியும் நீண்டும் கடந்துசென்ற

ஊடலும் கூடலுமான ஒற்றையடிப் பாதைகள்

நமக்கென செதுக்கி வைத்த

ராஜ பாட்டையில்

உன் கைத்தலம் பற்றிய உரிமையுடன்

உன் மனதருகே கிசுகிசுக்கிறேன்..

‘உனக்கான கடமைகளை எனக்கும் பங்கிடு’ என்று..

இம்முறை வியப்பது உன் முறையாயிற்று..

 

வாழ்ந்த காலங்களின் சுவை

அடி மனதில் இன்னும் தித்தித்திருக்க,

பற்றிய கைத்தலத்தை இன்னும் இறுக்குகிறாய்;

முட்களையெல்லாம் பூவாக்கும் வித்தையை

வயோதிகத்திலும் கை விடாமல்..

ஏதும் மிச்சப்படாமல்

கரைந்து போகிறேன் நான்..

 

உணர்வதற்கும்

உணர்த்தப்படுவதற்குமான இடைவெளியில்

உயிர்ப்புடனும்,

களவுக்கும்

கைத்தலத்துக்குமான பெருவெளியில்

கனவுகளுடனும்,

தலம் பற்றியபின் கடமையுடனும்

வாழ்ந்த காதல்..

வயோதிகத்தின் வாசற்படியில்

சொரிந்து நிற்கும்

ஊவாமுட்களையும்

மலரச் செய்து வாசமாய்;

சொரிந்து நிற்கிறது பன்னீர்ப் பூக்களை,

பிணைந்திருக்கும் இரு நெஞ்சங்களில்..

படத்திற்கு நன்றி.

 


2 thoughts on “வாடா மலர்கள்.

  1. வாடாத காதலே வளமான வாழ்வு. ஒருவருடைய வாழ்க்கையில் கடைசிவரை இன்பமும் இனிமையும் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அவர்கள் வாழ்வில “காதல்” உணர்வுகள் அதாவது அன்பின் அசைவுகள் கலையாது தென்றலாக வீச வேண்டும். உங்கள் படைப்பின் வரிகளும் அருமை…! கருத்தும் அருமை…! வாழ்த்துக்கள்…!

    by சித்திரை சிங்கர், சென்னை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க