தட்டச்சும் தட்டெழுத்தும் தொட்டெழுத்தும்

4

அண்ணாகண்ணன்

தமிழ்த் திரைப்படங்களில் கத்தி முனையில் ஒரு மிரட்டல் காட்சியை நாம் அடிக்கடி பார்க்கலாம். ஒரு பத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ’இதுல கையெழுத்துப் போடு; இல்லேன்னா ஒரே குத்து’ எனத் தாதா ஒருவர் மிரட்டுவார். இங்கு இவர் கேட்பது, கையெழுத்தா? கையொப்பமா?

கையால் எழுதும் எழுத்துகள் அனைத்தும் கையெழுத்து ஆகும்; வீட்டுப் பாடம், தேர்வுக்கு விடை, படியெடுத்தல் ஆகிய இடங்களில் எழுதும் முறையைக் குறிப்பது, கையெழுத்து ஆகும். விண்ணப்பங்கள், கடிதங்கள், பத்திரங்கள் ஆகியவற்றில் எழுதப்பட்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் இடுவது, கையொப்பம் ஆகும். கையெழுத்திற்கும் கையொப்பத்திற்கும் தெளிவின்றியே பலரும் பயன்படுத்துகின்றனர். இதைப் போன்றே தட்டச்சுக்கும் தட்டெழுத்துக்கும் தெளிவின்மை நிலவுகிறது.

தட்டச்சுப் பயிற்சி , தட்டச்சு மென்பொருள், தமிழ்த் தட்டச்சு எனப் பல சொற்றொடர்கள் புழக்கத்தில் உள்ளன. தட்டச்சு என்ற சொல்லைக் கொண்டு கூகுளில் தேடினால், 705,000 முடிவுகள் கிடைக்கின்றன. பலரும் தட்டச்சு என்ற சொல்லை விரிவாகப் பயன்படுத்துவதை இதன் மூலம் அறியலாம்.

உண்மையில் அச்சுக்காகத் தட்டுவதை வேண்டுமானால், தட்டச்சு எனலாம். ஆனால், இணையச் செயல்பாடுகளுக்காகவும் கணினித் தரவுகளுக்காகவும் தட்டுவது, தட்டச்சு ஆகாது; தட்டெழுத்தே ஆகும்.

நான் ஒரு
தட்டெழுத்து எந்திரம்
என்னை இயக்குவது ஓர்
எட்டெழுத்து மந்திரம்

என்ற வாலியின் கூற்று, இங்கு நினைவுகூரத் தக்கது.

தட்டி எழுதுவதால் தட்டெழுத்து. இதை இன்னும் சுருக்கி, தட்டு எனலாம். தட்டச்சு பழகுகிறேன் என்பதைத் தட்டிப் பழகுகிறேன் எனலாம். தட்டச்சு செய்வது என்பதைத் தட்டுவது எனலாம். தட்டச்சுப் பலகையைத் தட்டுப் பலகை எனலாம். டச் தட்டச்சு, தொட்டுத் தட்டச்சு என்ற சொற்றொடரையும் இணையத்தில் கண்டேன். இதனைத் தொட்டெழுத்து எனலாம். மின்னணுத் தட்டச்சு (e-Typing ) என்பதை மின்தட்டு எனலாம்.

சாப்பிடும் தட்டு (பொருள்), முதுகில் தட்டுவது (பாராட்டுவது), கதவைத் தட்டுவது (அழைப்பது), கையைத் தட்டுவது (பாராட்டுவது, வரவேற்பது), தட்டி நிமிர்த்துவது (சமமாக்குவது), படியின் தலையைத் தட்டுவது (தலை வழிப்பது),  போன்றவை ஏற்கெனவே இருப்பினும் இடத்திற்கேற்ப, அவற்றைப் பயன்படுத்துகிறோம். அவ்வகையில் தட்டெழுத்தின் சுருக்கத்தையும் தட்டு என அழைக்கலாம்.

தட்டெழுத்து என்ற சொல்லைக் கொண்டு கூகுளில் தேடினால், 2,570 முடிவுகள் மட்டுமே கிடைக்கின்றன. இதனை இதற்குரிய பொருளில் பயன்படுத்தும் தேவையை இந்தத் தேடல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதிகமானோர் பயன்படுத்துவதே சரியான சொல் என்ற மக்களாட்சித் தத்துவத்தை இங்கே செலுத்த முடியாது. சரியான முடிவுகள் அதிகமாகத் திறக்க வேண்டுமாயின் நாம் அதிகமாகத் தட்ட வேண்டும்.

தட்டுங்கள், திறக்கப்படும்.

===============

படம்: ராமலக்ஷ்மி

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தட்டச்சும் தட்டெழுத்தும் தொட்டெழுத்தும்

  1. தட்டெழுத்தே சரியான பயன்பாடாக இருக்க முடியும். இனி கொஞ்ச நாளில் தொடு திரையை அதிகமாகப் பயன்படுத்தும் போது தொட்டெழுத்து எனக் கூட சொல்லலாம். இருக்கும் குழப்பத்தில் இன்னும் குழப்பம் செய்கிறேனா?

  2. /டச் தட்டச்சு, தொட்டுத் தட்டச்சு என்ற சொற்றொடரையும் இணையத்தில் கண்டேன். இதனைத் தொட்டெழுத்து எனலாம். /

    இதை நானே தொட்டுக் காட்டியுள்ளேன். தொட்டுப் பயன்படுத்தும் கருவிகள், எதிர்காலத்தில் அதிகம் உருவாகும். தங்கள் புரிதலுக்கு நன்றி.

  3. கையொப்பம் மற்றும் கையெழுத்து பற்றிய வேறுபாடுகள்
    சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன. கையொப்பம் இடும் இடத்தில
    சில படிவங்களில் கையெழுத்து என்று எழுதப்பட்டிருப்பது
    உண்மையே. கேரளத்தில் “ஒப்பம் இட்டாச்சா” என்றுதான்
    கேட்பார்கள்.ஆனால் “கையெழுத்து போட்டாச்சா” என்று
    நம்மவர்கள் போல் கேட்கமாட்டார்கள். பழமையான தமிழ்ச்
    சொற்கள் அவர்களிடம் வழக்கில் இன்னமும் இருக்கிறது.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *