தவறின்றித் தமிழ் எழுதுவோமே! -பாகம் 2 –
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ – பிரான்சு
வேண்டாம், வேண்டா எது சரி ?
இக்கட்டுரையின் முன்னுரையில் (‘பாகம் ஒன்று காண்க)
‘இலக்கணம் என்றதும் விளக்கெண்ணை குடித்தது போல் ஓடவேண்டா! ‘ என எழுதி இருந்தேன்.
இதனை ஊன்றிப் படிப்போர்க்கு ஐயம் ஒன்று தோன்றி இருக்கும்,
‘ஓடவேண்டாம்’ எனச் சரியாக எழுதாமல் ‘ஓடவேண்டா! ‘எனத் தவறாக எழுதி இருக்கிறேனே என்று!
எது சரி ? எது தவறு ?
முறையாகத் தமிழ் படித்தவர்கள் இதனை எப்படி எழுதுகிறார்கள் ? கவனித்திருக்கிறீர்களா?
இலக்கணச் செம்மல் முனைவர் திரு சி இலக்குவனார் அவர்களின் திருமகனார் திருமிகு திருவள்ளுவன் இலக்குவனார், முறையாகத் தமிழ் படித்தவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் இயக்குநராகப் பணியாற்றிப் பணிநிறைவு செய்தவர். இணைய தளம் ஒன்றில் மது விலக்கு பற்றிய தம் கட்டுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு :
‘குடி வேண்டா எனச் சொல்லும் குடிமக்களா நீங்கள்?’
இந்தக் காலத்தும் மரபுக் கவிதை எழுத வல்லார் உளர். அவர்களுள் ஒருவர், எறும்புகள் இரண்டு நிற்கும் படம் போட்டுத் தந்தை எறும்பு கூறுவதாக எழுதிய வெண்பா ஈதோ :
ஒன்றே நினைக்கின்றோம் ஓரறிவோ ஈரறிவோ
நன்றே அதுபோதும் நாம்வாழ! – என்றென்றும்
ஆறறிவு வேண்டா! அட,மகனே, மாந்தர்தம்
நாறறிவு வேண்டா நமக்கு!
( நனவுகள் – 22.10.2008 )
– அ. நம்பி
இக்காலத் தமிழ் அறிஞர், கவிஞர் எனப் பலர் இப்படி எழுத அக்காலத் தமிழ்ப் புலவர்கள் எப்படி எழுதினர்?
சங்க காலப் புலவர் வரிசையில் முன் நிற்பவர் இருவர் :
கபிலர், பரணர். அதனால் தான் உம்மைத் தொகைக்கு எடுத்துக் காட்டு கூறவந்த உரையாசிரியர், ‘கபில பரணர்’ என்கிறார். அவ்வளவு சிறப்பு பெற்றவருள் ஒருவரான பரணர் அகநானூறு 186 -ஆம் பாடலில் (மருதத் திணை), பாடுகிறார் :
‘வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர்’
(மழைபெய்தலை வேண்டாத வறுமையுறுத்தல் இல்லாத வாழ்க்கை உடைய மீனவர்…)
உலகில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் தலையாய காரணம் திருக்குறள்.
அதில் திருவள்ளுவர் எப்படி எழுதுகிறார் பாருங்கள் :
‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு’.
‘அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தா னோடூர்ந்தா னிடை ‘.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்’.
‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு’
‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்’.
இத்தனை குறள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதாகக் கொண்ட குறுமுனி அகத்தியர். அவர் பாடலிலும் இப்படியே வருகிறது :
‘மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ‘
ஒருவாசகத்துக்கும் உருகாதவர் கூட, மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்துக்கு உருகுவார்களாமே. அந்த மாணிக்கவாசகரின் மணிவாசகத்தைக் கேளுங்கள் :
‘புகவே வேண்டா புலன்களில்நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்…’
இப்படி இன்னும் பல அடுக்கிகொண்டே போகலாம்.
‘வேண்டாம், வேண்டாம்!’ என நீங்கள் கூக்குரல் இடுவது கேட்கிறது !
ஆக அக்காலமும் இக்காலமும் முக்காலமும் ‘வேண்டா‘ என்ற சொல்லே வழங்கி வந்திருக்க நீங்களும் யானும் ‘வேண்டாம்’ என எழுதியும் பேசியும் வருவது சரியா?
முறையாகத் தமிழ் படிக்கவில்லை என்றாலும் ஆர்வத்தால் தமிழ் கற்றுக் கொண்ட சிலர் புலவர் ஒருவர் பாட்டுகளை எடுத்துக்காட்டக் கூடும். வரிக்கு வரி அவர் , ‘வேண்டாம்’ , ‘வேண்டாம்’ என்று ஒன்றல்ல, இரண்டல்ல, 67 முறை பாடி இருக்கிறாரே எனக் கேள்விக் கணை பூட்டக் கூடும். அவர்?
வேறு யாரும் அல்லர். உலக நீதி என்னும் நூலைப் பாடிய புலவர் உலகநாதன் தாம். அன்று, சிறு வயதில் நாம் கற்று இன்று மறந்த பாடல் …
(இந்தக் காலத் தலை முறைக்கு இதனைச் சொல்லிக் கொடுக்கிறார்களா எனத் தெரியவில்லை!)
‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் …
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்’
நினைவில் நிழலாடுகிறதா?
பதின்மூன்று விருததங்களில் அமைந்த இந்த நூலின் முதல் 12 பாடல்களில் மொத்தம் 67 முறை வேண்டாம் என்று வருகிறது. அப்படியானால், வேண்டாம் எனபது சரிதானே?
சற்றே சிந்தித்துப் பார்ப்போம்
யாப்பிலக்கணம் கற்றுப் பாப் புனையும் பாவலர், எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தப் பாவின் ஓசை நலம் குன்றாமல் பாடிய புலவர், தமிழ் இலக்கணம் அறியாதவராகவா இருந்திருப்பார்? இல்லை, தமிழ் மரபு தெரியாதவராகவா வாழ்ந்திருப்பார்? பின் எப்படி, இப்படி?
பிழை புலவ்ரிடத்தில் இல்லை.
‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் ;
பாடியவன் பாட்டைக் கெடுத்தான்’ எனச் சொல்வார்கள்.
‘வேண்டா’ எனப் புலவர் சரியாக எழுதியதைப் படி எடுத்தவன் தவற்றைத் தான் திருத்துவதாக எண்ணிக்கொண்டு
‘வேண்டாம்’ என்று எழுதிவிட்டான். பின் வந்த மேதாவிகளும் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு
எழுத்திலும் பேச்சிலும் அப்படியே வழங்கி வரச் செய்து விட்டனர்.
இப்படியாகத்தான் எழுத்திலும் பேச்சிலும் ‘வேண்டாம்’புகுந்திருக்கவேண்டும்.
இதனை மாற்றுவதற்காகத்தானோ என்னவோ,வள்ளல் பெருமான், அருட்பிரகாச வள்ளலார்
‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருக்க வேண்டும்”…
என்று வேண்டும், வேண்டும் என்பதை வேண்டுமென்றே அழுத்தம் திருத்தமாகப் பதினான்கு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடி இருக்கிறார்.
இலக்கியப் படி, தமிழ் மரபுப் படி ‘வேண்டா’ என்பதே சரியான சொல் என்று பார்த்தோம்.இனி இலக்கணப் படி கொஞ்சம் பார்ப்போமா! அட எங்கே நழுவுகிறீர்கள்? அஞ்சற்க!எளிய முறையில் சொல்லுகிறேன். அதுவும் ஏரண (தர்க்க) நூல் முறைப்படி!
பதம், எதிர்ப் பதம் பற்றி அறிவீர்கள் அல்லரா? எளிய, சிறிய வினைச் சொற்கள் சொல்லுகிறேன்.
அவற்றுக்கு எதிர்ப் பதம் சொல்லுங்களேன்.
தொடும், வரும், தரும், எட்டும், முட்டும், கிட்டும், தட்டும்….இன்ன பிற.
இவற்றுக்கு எதிர்ப் பதங்கள் ? (‘து’ போடாமல் சொல்லுங்கள் ; அப்படிச் சொல்வதுதான் மரபு)).
சொல்ல முடிகிறதா?
நீங்கள் சொல்லத் தொடங்கி, சொல்லத் தயங்கி, சொல்லாமல் விட்டவைதாம் :
தொடும் X தொடா
வரும் X வரா
தரும் X தரா
எட்டும் X எட்டா
முட்டும் X முட்டா
கிட்டும் X கிட்டா
தட்டும். X தட்டா
இன்ன பிற
இந்த முறையில் இப்போது
வேண்டும் என்பதற்கு எதிர்ப்பதமாக…
என்ன சொல்வீர்கள்?
ஆம், அதேதான்
வேண்டா என்றுதானே சொல்வீர்கள், சொல்ல வேண்டும்.
எனவே இனிமேல், வேண்டாம் என
எழுதவோ பேசவோ வேண்டா!
சரிதானே!
அடுத்த பகுதியில்
வேறொரு தவற்றைத் திருத்த முயற்சிப்போமா?
முயற்சிப்போமா –
இதில்கூட ஏதோ ஒன்றைச் சொல்ல முயல்கிறீர்களோ
தேவ்
இப்பொழுது தொடா வரா என்று உள்ள சொற்களில் து என்ற உயிர்மெய்யை சேர்த்து தொடாது வராது என்று எதிர்மறை பொருளை குறிக்கிறோம் , இது சரியாய், எப்பொழுது இந்த பழக்கம் உண்டானது
தொடும் X தொடா
வரும் X வரா
தரும் X தரா
எட்டும் X எட்டா
முட்டும் X முட்டா
கிட்டும் X கிட்டா
தட்டும். X தட்டா