இரண்டாம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு

இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.

நாள் – 09 – 06 – 2017

கவியரங்கம்

தலைமை –  கவியரசு  ஆலந்தூர் மோகனரங்கம்

தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்

பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்

unnamed (1)

தமிழ்த்தாய் வாழ்த்து

புத்தமுதாய்   இலங்குதொன்மைத்    தமிழைப்   போல

            பூமிதனில்    வேறெந்த    மொழிதாம்   உண்டோ

முத்தமிழின்    பிரிவைப்போல்    உலகந்    தன்னில்

            முகிழ்ந்துள்ள   மொழிகளிலே    பிரிவு    உண்டோ

நித்திலமாய்   ஐந்துவகை    இலக்க    ணத்தை

            நீள்புவியில்    பெற்றவேறு    மொழிதான்    உண்டோ

எத்தனையோ    மொழிகளினைத்    திணித்த    போதும்

            எழில்மாறாத்    தனித்தமிழ்போல்    வேறிங்    குண்டோ !

 

அகத்திற்கும்    புறத்திற்கும்    நெறிகள்    சொல்லும்

            அருந்தமிழைப்    போலெந்த    மொழியிங்    குண்டு

தகவுடைய    திருக்குறள்போல்    வாழ்வைக்    காட்டும்

            தனிநூல்கள்    வெறெந்த    மொழியி    லுண்டு

நகமகுட     விரல்கள்போல்    காப்பி   யங்கள்

            நல்லெட்டு    பத்துதொகை     எங்கே   உண்டு

முகத்திற்கு    முன்நிற்கும்    மூக்கைப்    போலே

            முன்பிறந்த   தமிழ்க்கிணையாய்    பிறிதெங்    குண்டு !

 

 (  1  )

ஆழ்வார்கள்    நாயன்மார்    சமணர்   யாத்த

            அரும்பாக்கள்    கொண்டமொழி;    இறைவன்   போற்றி

வாழ்வித்த   சங்கமொழி;    கணினிக்    கேற்ற

            வளமுடைய    மொழியென்றே   உலகம்    ஏற்று

வாழ்த்தியவிஞ்    ஞானமொழி;    சித்தர்    தந்த

            வளமருந்து   ஞானமொழி;    தமிழுக்    கீடாய்

வாழ்மொழியில்    எம்மொழிக்கு   மண்ணி    லின்று

வளம்கொண்ட  மொழியென்னும்  தகுதி உண்டு ! தாயே வணங்குகிறேன்  !

தலைவர் வணக்கம்

நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல

            நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம்

காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து

            கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன்

கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில்

            கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன்

மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று

            முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !

 

கவிதையொடு   நாடகங்கள்   புதினம்   என்று

            கருத்தான   படைப்புகளை   நாளும்   படைப்போன்

நவிலுமாறு   சிறுகதைகள்   குறும்பா   என்று

            நாட்டோர்கள்   புகழுமாறு   படைத்த  ளிபோன்

கவிதையிலே   நாடகத்தைச்   சிறுவர்க்   காக

            கனித்தமிழில்   முதன்முதலில்   வடித்த  ளித்தோன்

புவிபோற்றும்   காவியமாய்க்   கனவுப்   பூக்கள்

            புனைந்துதமிழ்   அன்னைக்கு   அணியைச்  சேர்த்தோன் !

 

குறுந்தொகையின்   குழந்தையென்றே   குறும்பா   பாடிக்

            குவித்திட்ட   பல்துறையின்   நூல்க   ளாலே

நறுந்தமிழோ   நன்றாக   நிமிர்ந்து   நின்று

            நவில்கின்றாள்   தனிப்பெருமை   சேர்ந்த  தென்றே

பெரும்பேறு   நாம்பெற்றோம்   ஆலந்   தூரின்

            பெருங்கவிஞர்   மோகனரங்கை   பெற்ற   தாலே

வருங்காலம்    இவரடியைத்   தொடர்ந்து   சென்றால்

            வளமாகும்  தமிழ்மொழியே  வாழ்த்து  வேமே !

(  2  )

அவையோர் வணக்கம்

மாநாட்டை   அமைத்தளித்த  முத்துசிதம்பர  சான்றோரை

மாநாட்டில்  பங்கேற்ற  மாத்தமிழ்  பேராளர்

மன்றில் கவிபாடும்  கவிஞர்கள்  அனைவரையும்  வணங்கி மகிழ்கிறேன்

 

கவியரங்கக்  கவிதை

ஈரமண்ணாய்    மனம்கசிந்து   வீட்டுப்   பக்கம்

இருப்போரின்    துயரினிலும்   பங்கு   கொண்டு

வேரடியாய்   அன்புதனில்   கிளைய    ணைத்து

            வெறுப்பின்றிக்   கூட்டமாக    ஒன்றி    ணைந்து

தூரத்தே   அடிபட்டு   வீழ்ந்த   வர்க்கும்

            துடிதுடித்தே   ஓடிப்போய்   உதவி   செய்தும்

பாரத்தைப்   பிறருக்காய்    சுமந்து   நின்ற

            பரிவென்னும்   மனிதநேயம்   போன   தெங்கே !

 

சேற்றினிலே    களையெடுக்கும்   கரங்க   ளாலே

            சேர்த்தணைத்துக்   கபடுகளைக்   களைந்தெ   றிந்து

நாற்றுகளை   நட்டுவயல்   வளர்த்தல்   போல

            நகையாலே   வஞ்சமின்றி    வளர்ந்த   நட்பால்

வேற்றமைகள்   இல்லாத   குடும்ப   மாக

            வேறுவேறு    சாதியரும்    நெஞ்ச    மொன்றிப்

போற்றுகின்ற    சோதரராய்ப்    பிணைந்தி    ருந்த

            போலியற்ற    மனிதநேயம்    போன   தெங்கே !

 

காடுகளாய்    நம்முன்னோர்    வளர்த்து   வைத்துக்

            கவின்மிகுந்த    மரங்களினை    வெட்டி   வெட்டிக்

கோடுகளாய்    மண்ணுடலைப்    பிளக்க   வைத்துக்

            கொட்டிவந்த    மழைவளத்தை    அழித்த   போல

வாடுகின்ற   பயிர்கண்டு   வாட்டம்    கொண்ட

            வள்ளலாரின்    மனிதநேயம்    அழித்து   விட்டோம்

பாடுபட்டு    யாதும்ஊர்   என்ற   பண்பைப்

            பாதுகாத்துத்    தந்ததனைத்    தொலைத்து   விட்டோம் !

                                                                  (  3  )

 

பக்கத்தில்   குடியிருப்போர்   முகத்தைக்    கூடப்

            பார்க்காமல்    வாழுகின்ற   வகையைக்    கற்றோம்

துக்கத்தில்   துடிப்போரின்   குரலைக்    கேட்டும்

            துடிக்காமல்   இயல்பாக   நடக்கக்    கற்றோம்

நக்கலாகப்    பிறர்துயரில்   வாடக்    கண்டும்

            நகைத்தவரை     ஏளனமாய்ப்   பழிக்கக்    கற்றோம்

வக்கிரமே    எண்ணமாகி    அடுத்தி   ருப்போர்

            வயிறதனில்   அடிப்பதையே    தோழிலாய்க்    கற்றோம் !

 

பிறர்வாழப்    பொறுக்காத    மனத்தைப்    பெற்றோம்

            பிறர்நெஞ்சைப்    புண்ணாக்கும்    கலையில்    தேர்ந்தோம்

பிறர்போற்றப்    பொதுநலத்தை    மேடை    மீது

            பிசிரின்றிப்    பேசிநிதம்    கள்ள   ராகப்

பிறர்பொருளை   அபகரிக்கும்    தன்ன   லத்தால்

            பிறர்காலை    வெட்டுவதில்   வல்லவ    ரானோம்

சிரம்தாழ்த்தும்    பழிதனுக்கே    நாணி    டாமல்

            சிறப்பாக    நடிக்கின்ற    நடிக    ரானோம் !

 

                      சாதிகளின்    பெயராலே    சங்கம்   வைத்தோம்

            சாதிக்காய்த்    தலைவரினைத்    தேர்ந்தெ   டுத்தோம்

சாதிக்கும்    சக்தியெல்லாம்    ஊர்வ    லத்தில்

            சாதனையாய்ப்   பகையுணர்ச்சி   பெருக்கு   வித்தோம்

வாதிக்கும்    கருத்தெல்லாம்    வாயா    லன்றி

            வாள்தடிகள்    சங்கிலியால்    மோதிக்    கொண்டோம்

போதிக்கும்    அன்புவிட்டு   மதங்க    ளென்னும்

            போதையாலே    மதம்பிடித்தே    அலைகின்   றோம்நாம் !

 

(  4  )

 

அறிவியலில்    உலகமெல்லாம்    அற்பு   தங்கள்

            அரங்கேற்றக்    கலவரங்கள்    அரங்க    மேற்றி

அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம்

            அணுப்பிளந்து   அடுத்தகோளில்    அவர்க    ளேற

வெறியாலே   உடன்பிறந்தார்    உடல்பி   ளந்து

            வீதியெலாம்    குருதியாற்றில்   ஓடம்   விட்டோம்   

நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும்

            நேர்த்திகடன்   கோயில்முன்   செய்கின்    றோம்நாம் !

 

வானத்தை   நாம்வில்லாக    வளைக்க   வேண்டா

            வாடுவோரின்   குரல்கேட்க   வளைந்தால்    போதும்

தேனெடுத்துப்   பசிக்குணவாய்க்    கொடுக்க   வேண்டா

            தேறுதலாய்   நம்கரங்கள்   கொடுத்தால்   போதும்

தானத்தில்   சிறந்ததெனும்   நிதானத்   தில்நாம்

            தமரென்றே    அனைவரையும்   அணைத்தால்   போதும்

மானுடந்தான்   இங்குவாழும்    சமத்து  வத்தில்

            மண்பதையே    அமைதிவீசும்   நேயத்    தாலே !              

 

பலமொழிகள்   பேசினாலும்   அன்பு   என்னும்

            பாலத்தால்   ஒருங்கிணைந்தே   வாழ்வார்  அங்கே

கலக்கின்ற   கருத்தாலே   மொழிக   ளுக்குள்

            காழ்ப்புகளும்   உயர்வுதாழ்வு   இருக்கா  தங்கே

இலக்கியங்கள்   மொழிமாற்றம்   செய்தே   தங்கள்

                                    இலக்கியமாய்ப்    போற்றிடுவர் !   கணினி   மூலம்

                        பலரிடத்தும்   பலமொழியில்    பேசு   கின்ற

                                    பயனாலே   மொழிச்சண்டை   இல்லை  அங்கே !

 

(  5  )

 

நாடுகளுக்    கிடையெந்த   தடையு   மில்லை

            நாடுசெல்ல   அனுமதியும்   தேவை   யில்லை

நாடுகளுக்    கிடையெந்த    பகையு   மில்லை

            நட்பாலே   உதவுதற்கும்   எல்லை   யில்லை

வாடுகின்றார்   ஒருநாட்டு   மக்க   ளென்றால்

            வளநாடு    கரங்கொடுத்தே   காத்து   நிற்கும்

பாடுபட்ட   பலனெல்லாம்    அனைவ   ருக்கும்

            பகிர்ந்தளித்தே   வாழ்ந்திடுவர்    பொதுமை   என்றே !

 

உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை

            உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை

உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி

            உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர்

உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை

            உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர்

அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின்

            அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே !

 

வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை

            வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை

ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே

            என்றெந்த    நாட்டினிலும்   கேட்போ   ரில்லை

தேன்சிந்தும்   மலர்மணத்தைச்    சொந்த    மென்று

            சொல்கின்ற   முட்டாள்கள்    இல்லை   அங்கே

கூன்முதுகில்   இருப்பதன்றி    அறிவு   தன்னில்

            கூன்விழுந்த   குறுமனத்தார்   இல்லை   அங்கே !

(  6  )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *