“கல்லறைப் பூவின் கண்ணீர் துளி”
பெருவை பார்த்தசாரதி
நேரில் பார்த்தவர்கள் நெஞ்சமகிழ்ந்து குளிர
—தேரில்ஏறி தெய்வத்தின் மார்பிலும் தலையிலும்
வீற்றிருந்த மலர்கள் தான்நாங்கள் எனினும்
—கற்றறிந்து பூவின் கண்ணீர் துளியதையறிவீர்.!
பூக்களைப் பாடாத புலவருண்டோ புவியில்
—பூக்களின் வாசமதில் வகையாகும் சிந்தனையில்
புவியில் எழுச்சியுறும் கவிகள்பலர் பிறந்தனர்
—பூவுக்கும் உணர்வுண்டு உணர்ச்சியுண்டு கேளீர்.!
பூவைப் பூவையரோடு ஒப்பிடாத கவிஞரிலர்..
—புவியில் தோன்றியதில் போற்றுவதும் பூவினம்தான்
இன்று புதிதாகப் பிறந்தோமென்றான் மஹாகவி
—இதற்குமிகப் பொருத்தம் பூவென்றால் மிகையாகா.!
முதலிரவில் பூக்கள்மேல் காதலர்கள்கண்டு களித்தாலும்
—பகலிரவு போலென பகட்டான ஒருநாள்வாழ்வில்.!
இன்னலுறும் வாழ்வினி வேண்டா வென
—பின்னெழும் உளமதிலே யொருவைர வைராக்கியம்.!
மலர்ந்தால் தானேதுன்பம் மலராமல் இருந்தால்.?
—மனதுக்குள்ளே மலரும் நித்தமொரு போரட்டம்.!
சூடுவதற்கென்றே விழாக்கள் பலகண்ட பூக்களினம்..
—வாடுவதற்கே வாழ்க்கை விதியும் நியதியுமாம்.!
பிறப்பு இறப்பென பேதமெமக்கில்லை யெனினும்..
—பிறந்த நாளென வாழ்த்துண்டா எனக்கென.?
கழுத்தோடு மாலையாக மகிழ்வாக உறவாடி..
—காதோடு பேசுமெம் வேதனையதை யார்தானறிவர்.!
பூவினத்தின் மேன்மை யறிந்த மாந்தர்களே
—பூவிடும் மென்மைக் கண்ணீரைக் கண்டதுண்டா.!
அள்ளிஅள்ளி மலரை மாண்டவர்மீது கொட்டுகிறீர்.!
—கொள்ளியில் போடுமுன் எங்கள் நிலையறிந்தீரா.!
மணவாழ்வில் தினம் மலர்கின்றோம் நாங்கள்
—பிணத்தின் மேல்பிய்த்தெறியும் வேதனை யுணர்வீரா.!
அன்றலர்ந்த மலராகயாம் அன்றாடம் படும்பாட்டால்.
—மன்றாடி மடிகிறோம் மகத்துவம் அறியாது.!
பூவே பெண்களெனப் பெரிதாய்ப்புகழும் புலவர்களே
—பலநாளும் களித்திருந்தோம் பா..பாடிய மகிழ்ச்சியில்
சிலநாளில் பூக்கள்படும் அவலமதைப் பாடுவீரா.!
—சிலநொடியுள் சீரழிவதைச் சிந்தையுள் கொள்வீரா..!
மலர்ந்தொரு நொடியில் மார்பில் வாசம்.!
—மற்றொரு நாளில் கட்டிலறைக் குடியிருப்பு.!
பூத்த ஒரு நாளில்யெம் புவிக்கே மரியாதை.!
—பூத்தபயன் அறியுமுன் புவியுள்ளே புகுந்தோம்.!
பூக்களின்மேல் பட்ட பனித்துளி இருக்கும்
—பூவுக்குள் கண்ணீர்துளி இருப்பதைக் காணீரோ.!
இழிவையும் பரிசாயேற்கும் பூவின் கண்ணீரை
—இயற்குணம் கொண்டு இயல்பாய் பாடுங்கள்.!
ஏரிக்கரை வளத்தால் ஏற்றமிகு வளர்ச்சியில்நான்
—நீரிருக்கும் இடத்தில் நேற்று மொட்டானேன்.!
தீஞ்சுவைத் தென்றல் தழுவிநானின்று மலரானேன்.!
—பிஞ்சு மனதோடு பிணத்தையும் தழுவுகிறேன்.!
கண்ணுக்குக் குளிர்ச்சி காதலுக்குப் புத்துணர்வு.!
—கழுத்தோடு உறவாடி காதருகில் கதறுகிறேன்.!
கல்லறைப் பூவின் கண்ணீர் துளிகளையு(உ)ம்..
—கலங்கிய கண்ணுடன் கவியாகப் புனைவீரே.!
=====================================
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு.. 19-06-17
நன்றி படஉதவி..கூகிள் இமேஜ்.