இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (241)

சக்தி சக்திதாசன்

அன்பானவர்களே !

அன்புடன் கூடிய வணக்கங்கள். ஜூன் மாதத்தின் இறுதியில் நின்று கொண்டிருக்கிறோம். காலம் எவருக்கும் காத்து நிற்பதில்லை. அது காற்றைப் போல கனவேகத்தில் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நாம் எமது கடமைகளைச் சரிவரச் செய்கிறோமோ இல்லையோ அது தன் கடமையில் தவறாமல் இருக்கிறது. காலத்தின் மாற்றம் எதைச் சாதித்திருக்கிறதோ இல்லையோ உலக மக்களின் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதே உண்மை. இம்மாற்றங்களில் சில வாழ்வின் வசதிகளைக் கூட்டி வாழ்க்கை முறைகளை இலகுவாக்கியிருக்கிறது. மற்றும் சில மக்களிடையே இருந்த பிரிவுகளை அகற்றி மக்களின் ஒன்றுபடலுக்குத் துணை நின்றிருக்கின்றன. பலமாற்றங்களை நேர்மறையான உணர்வுடன் உள்வாங்கிக் கொண்ட மக்கள் வேறு சிலவற்றை எதிர்மறையான நோக்கத்தோடு எதிர்ப்பு மனப்பான்மையோடு அணுகுவதும் உண்டு. சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும் மாற்றங்கள் வேறு சிலருக்கோ முற்றிலும் ஏற்புடையதாக இருக்காது.

கலாச்சாரத்தின் பெயரால், தாம் சார்ந்திருக்கும் மதத்தின் கோட்பாடுகளின் காரணமாக பல மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதில் தயக்கம் காட்டுவோர் பலருண்டு. இன்றைய வைத்தியத்துறையின் முன்னேற்றங்களும் அதனால் மனிதகுலம் அடைந்திருக்கும் மேம்பாட்டையும் அனைவரும் அறிவோம். நவீனகால வைத்தியவசதிகளின் பால் எமக்கேற்படும் நோய்களுக்கான சிகிச்சைகளும் நவீனமயப்படுத்தப்பட்டு அதனால் நாமடையும் அனுகூலங்களை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதே பெரும்பான்மையாக நிகழ்கிறது. ஆனால் அதேசமயம் ஒரு உதாரணத்தை எடுத்தோமானால் பல நோய்களுக்கு சிகிச்சை முறையாக இரத்த பரிமாற்றம் அன்றி இரத்த ஏற்றம் நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் விபத்தின் மூலம் அதிக இரத்தம் இழக்கப்பட்ட ஒருவரின் உயிர் இரத்த வங்கியிலிருக்கும் இரத்தத்தைச் செலுத்துவதின் மூலமே காப்பாற்றப்படுகிறது. “ஜொகோவாஸ் விட்னஸ் ( Johova`s witness ) “ எனும் ஒருவகை கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்களின் மதக்கோட்பாடுகளின் நிமித்தம் அடுத்தவர்களுடைய இரத்தம் உடலில் ஏற்படுவது பரவலாக மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வைத்தியர்கள் நீதிமன்றத்தின் மூலம் அத்தகைய தீர்வுகளைப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

இது மிகவும் சிக்கலான விடயமாகிறது, அதாவது கலாச்சாரத்தின் பெயரால். மதக் கோட்பாடுகளின் பெயரால் காப்பாற்றப்படக்கூடிய ஒரு உயிர் பறிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இது நியாயமானதா ? இத்தகைய கலாச்சாரப் பின்னணிகள் அல்லது மதக் கோட்பாடுகள் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் நிலை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா எனும் விவாதங்கள் பல இடங்களில் பலரிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது. கலாச்சாரம் அல்லது மதம், இனம், நிறம் எனும் மக்களைப் பிரிக்கும் காரணிகளின் ஆதிக்கத்தை, அதன் நியாயத்தன்மையை சற்று ஆழமாக ஆராயவே சில உதாரணங்களை எடுத்துப்பார்க்க விழைந்தேன். இதற்கு ஓர் காரணம் உண்டு. இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஊடகங்களில் பரவலான விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

அது என்ன ?

unnamed (5)

இங்கிலாந்திலுள்ள ” பார்க்‌ஷையர் (Berkshire)” எனும் இடத்தில் சந்தீப் மன்டீர், ரீனா மன்டீர் எனும் ஆசிய தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்கள் சீக்கிய கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்கள். பத்து வருடங்களாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்கு இருக்கும் ஒரே குறை குழந்தைகள் இல்லை என்பதுவே. மிகவும் வசதியாக ஒரு பெரிய வீட்டில் வசித்து வரும் இவர்கள் குழந்தைக்காக ஏராளனமான பணச்செலவில் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவில்லை. அடுத்த முயற்சியாக அவர்கள் குழந்தையைத் தத்து எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதற்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கான முன்பதிவு பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு தமது பகுதியிலுள்ளஅரசாங்க தத்து எடுக்கும் பிரிவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த பதில் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

அப்படி என்ன அதிர்ச்சி ?

அவர்களது கலாச்சாரப் பின்னணி இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் இருப்பதினால் அவர்களது விண்ணப்பத்தை மேலே எடுத்துச்செல்ல முடியாது. இதற்குக் காரணம் தற்போது அப்பகுதியில் தத்து எடுக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் குழந்தைகள் “வெள்ளை” இனத்தவர்கள் என்பதே. இனம், மதம், நிறம் எனும் வேறுபாடுகள் சட்டமூலமாக ஒழிக்கப்பட்ட ஒரு நாட்டிலே , இனங்களுக்கிடையில் கலப்புத் திருமணம் அதிகளவில் இடம்பெற்று வரும் ஒரு நாட்டிலே, பல்லினக் கலாச்சாரக் கொள்கையை ஊக்குவிக்கும் ஒரு நாட்டிலே அரசாங்கத் தரப்பினால் நடத்தப்படும் ஒரு அரச இலாகாவின் பதில் இனத்துவேஷத்தை முன்னிறுத்துவதாகவே இத்தம்பதியருக்குப்பட்டது. இப்பதிலினால் மிகவும் கொதிப்படைந்த அவர்கள் தொலைபேசி மூலம் அதற்கான இலாகாவைத் தொடர்பு கொண்டு மேலும் விளக்கம் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு கூறப்பட்ட விளக்கம் ஒரு குழந்தையைத் தத்து கொடுக்கும் போது அக்குழந்தையின் கலாச்சாரப் பின்னணியைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இத்தகைய குழந்தையைத் தத்துக் கொடுக்கும் அரசாங்கத் தரப்பிலான நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது அல்ல ஏனெனில் அதற்கான விதிவிலக்குகள் சட்டத்தில் உள்ளன என்பதுவே.

“நாங்கள் மிகவும் வசதியான வாழ்க்கை உள்ளவர்கள், எமது இல்லம் 5 அறைகளைக் கொண்டது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மிக பாதுகாப்பாகவும், அன்பாகவும் செய்வோம் ” என்று அவர்கள் கூறியதும். சகோதரர்களாகிய இரு குழந்தைகளை எடுக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கிறோம் என்று கூறி ஒரு உத்தியோகத்தரை அவர்களது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்களாம். அவர்களது இல்லத்தை நன்கு பார்வையிட்டு அதன் செளகரியத்தை உள்வாங்கிக் கொண்டு, அவர்களுடன் ஓர் நேர் உரையாடலை நடத்திய பின்னர். இத்தகைய வசதி படைத்த உங்களுக்கு உங்களது கலாச்சாரப் பின்னணி இந்தியர் என்பதால் வெள்ளை இனக்குழந்தையைத் தத்து கொடுக்க முடியாததிற்கு வருந்துகிறேன் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இதனால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்கள். இந்த விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டு போக முடிவு செய்துள்ளார்கள். இங்கிலாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து ஒரு வெள்ளை இனக்குழந்தையைப் போலவே வளர்ந்து பெரியவர்களாகிய தம்மை தமது நிறத்தின் காரணமாகவே தவிர்ப்பது மனதை மிகவும் வருத்துகிறது என்கிறார்கள். ஒரு குழந்தையைத் தத்து கொடுப்பதன் முன்னால் அதன் கலாச்சாரப் பின்னணி ஒத்துப்போகிறதா என்பதை ஒரு தகுதியாகப் பார்க்கலாமே தவிர மற்ற அனைத்துத் தகுதிகளும் சரியாக இருக்கும்பட்சத்தில் இது ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு தம்மைத் தவிர்த்திருப்பதே குற்றம் என்கிறார்கள்.

இவர்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் பிரதமர் சாட்சாத் தெரேசா மே அவர்களே தான் ! இப்பிரச்சனை அவருக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர் இத்தம்பதியரின் விண்ணப்பத்தை ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தப் பிரச்சனையை இரு பக்கமும் இருந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது, தனது எதிர்காலத்தைத் தானே நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தையை முற்றிலும் மாறான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த வெற்றின, வேறு நிறத்துப் பெற்றோருக்குத் தத்துக் கொடுப்பது நீதியாகுமா ? பின்னால் வளர்ந்ததும் அக்குழந்தையின் மனதை இது எவ்வகையில் பாதிக்கும்? இவையெல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா என்பது ஒருபக்க வாதம். மதம், நிறம், இனம் என்பது குழந்தைகளுக்குத் தெரியுமா? பெற்றோர்களை இழந்து அரசாங்க அனாதை இல்லத்தில் வாழும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கப்போகும் அன்பைத் தமது அதிகாரத்தைக் கொண்டு தடுப்பது எப்படி நீதியாகும் ? அன்பே இங்கு முக்கியத்துவம் பெறப்பட வேண்டும். எந்த நிறத்தவராயினும் ஒரு குழந்தையைத் தமது குழந்தையாக அவர்களுக்கு ஒரு குடும்பச் சூழலைக் கொடுத்து வளர்ப்பதுதானே முக்கியமானது என்பது மறுபக்க வாதமாகிறது.

சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது ஒரு கறுப்பினக் குழந்தையை வெள்ளை இனப் பெற்றோர் தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். அக்குழந்தை தனது முகத்துக்கு அதிக அளவு சோப் இட்டுக் கழுவ முயற்சித்ததாம். அதற்குக் காரணம் தானும் தனது பெற்றோரின் நிறத்தைப் பெறவேண்டும் என்று கூறியதாம். இதைச் சுட்டிக்காட்டும் சிலர் இத்தகைய வித்தியாசமான கலாச்சாரப் பின்னைக் கலப்புகள் குழந்தைகளின் மனதில் மனநலக்குறைவையே உண்டாக்கிவிடக் கூடும் என்று கூறுகிறார்கள். அதேபோல மற்றொரு உதாரணம் கலப்புமணத் தம்பதியருக்குப் பிறந்த குழந்தை பள்ளிக்குப் போகும் பருவம். பள்ளியில் இருந்து அவர்களது தாத்தா, பாட்டி அழைத்துச் செல்வார்கள். இக்குழந்தையின் ஆசிய தாத்தா, பாட்டி வந்து தன்னை அழைத்துச் செல்வதை அந்தக்குழந்தை விரும்பவில்லையாம். ஏனெனில் அவர்கள் மற்றைய வெள்ளை இனக்குழந்தைகளின் தாத்தா, பாட்டி போலில்லை எனும் காரணத்தினால்.

அதேசமயம் பெற்றோரின் அரவணைப்பின்றி, பெற்றோரின் நல்வழிப்படுத்தலின்றி அனாதை இல்லங்களில் வாழும் பல சிறுவர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இனம் எதுவாக இருந்தாலும் அவர்களும் ஒரு பெற்றோரின் அன்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்தால் நன்றாகப் படித்து ஒரு நல்ல நாட்டுப்பிரஜையாக வாழும் சந்தர்ப்பத்தைப் பெறுகிறார்கள். ஆகவே வேறுபாடுகளின்றி வசதியாகப் பராமரிக்கக் கூடியவர்களுக்கு இனப்பாகுபாடின்றி குழந்தைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு அறிவார்ந்த செயல் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே !

இந்தத் தம்பதியரைப் பொறுத்த அளவில் அவர்கள் இப்போது அமெரிக்காவில் இருந்து தத்தெடுக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இங்கிலாந்தில் தமக்குத் தத்துக் கொடுப்பதற்கு மறுத்ததை நீதிமன்றத்தில் வாதாடப் போவதாகக் கூறியுள்ளார்கள். இது தமக்காக மட்டுமல்ல தம்மைப் போன்ற மற்றைய பெற்றோர்களுக்காகவும், அனாதைக் குழந்தைகளுக்காகவும் என்று கூறுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக முன்பொரு வழக்கில் இவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு மற்றொரு வழக்கில் வழங்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கின் முடிவை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அனாதை இல்லங்களில் வாடும் குழந்தைகளும் உட்பட.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க