நலம் .. நலமறிய ஆவல் (68)
நிர்மலா ராகவன்
இருவரும் வெற்றி காண..
ஆணோ, பெண்ணோ, எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், அவர்கள் படும் அவதிகள் பொதுவானவைதாம். இருபாலருக்குமே சரியான முறையில் ஒருவரையொருவர் நடத்துவது எப்படி என்று தெரிவதில்லை. ஒருவருடைய சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, இன்னொருவர் பறிக்காமல் இருந்தால்தான் உறவு நீடிக்கும்.
கதை
டாங் (TONG) கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரி மாணவன். பணக்காரப் பெற்றோருக்கு ஒரே மகன். பெண்களுடன் நெருங்கிப் பழகியது கிடையாது. அவன் அறிந்ததெல்லாம் படிப்பும், பாட்டும்தான்.
இவனிடம் வலுவில் வந்து உறவாடி, பலவாறாக அவன் திறமைகளைப் பாராட்டி, நெருங்கிப் பழகலானாள் ரோஸ். இவனுடைய மென்மையான குணம் அவளுடையதைவிட நேர்மாறாக இருந்ததே முதலில் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது.
ஈராண்டுகள் இன்பமாகக் கழிந்தன. பல இடங்களிலும் ஒன்றாகச் சுற்றினார்கள். அதன்பின், காதலன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும், தனக்காகவே செலவு செய்யவேண்டும் என்பதுபோல் ரோஸ் எந்நேரமும் உரிமை கொண்டாட ஆரம்பிக்க, ஏதோ தன்னை நெருக்குவதுபோல் உணர்ந்தான் டாங். `நம்மிருவருக்கும் ஒத்துவராது,’ என்று கழன்றுகொண்டான்.
அவளுக்கு ஒரே ஆத்திரம், நல்ல பொருள் கைவிட்டுப்போகிறதே என்று. அவனைப்பற்றித் தாறுமாறாக அவனுடைய நண்பர்களிடம் சொல்லிப் பொருமினாள்.
“ஆனால் எங்களுக்கு அவன் குணம் நன்றாகத் தெரியும். அவள் சொல்லியதை யாரும் நம்பவில்லை,” என்று என்னிடம் கூறினான் இக்கதையை என்னுடன் பகிர்ந்துகொண்ட டாங்கின் நண்பன்.
பெண்களுக்கு மரியாதையா!
பெண்களுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று ஆண்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இளம் வயதிலேயே பெற்றோரும், ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கடமை அது.
சில ஆசிரியர்களுக்கே அந்த அறிவு இருப்பதில்லையே, என்ன செய்வது?
கதை
என் பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் வேறு ஏதோ வேலையாக சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்தேன்.
பந்து என்னருகே விழ, அவர்களுடைய ஆசிரியர் ஃபாதில் (FADHIL) “ஏய்! பந்தை எடுத்துப்போடு!” என்று என்னை விரட்டினார். அவர் கட்டொழுங்கு ஆசிரியர் ஆனதால், `நான் மிகப் பெரியவன்!’ என்ற எண்ணம். மாணவர்கள் மட்டுமின்றி, எல்லாரையும் விரட்டலாம் என்ற மமதை.
அவரது கூப்பாடு காதில் விழாதமாதிரி நின்றேன்.`தான் சொல்ல, மாணவர்களுக்கு எதிரே இவள் – ஒரு பெண் — தன்னை மதிக்காமல் நடந்துகொள்வதா!’ என்ற ஆத்திரத்துடன் “உன்னைத்தான்! பந்தை எடுத்துப்போடச் சொன்னேனே!” என்று அவர் மீண்டும் மலாய் மொழியில் கத்த, நான் நிதானமாக அவர் பக்கம் திரும்பினேன்.
“Who do you think you are? No one talks to Mrs. Raghavan like that, Mister. Speak with respect,” (உங்களை நீங்கள் யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னிடம் யாரும் அப்படிப் பேசிவிட முடியாது. மரியாதையாகப் பேசுங்கள்!” கண்களைச் சுருக்கிக்கொண்டு, ஆள்காட்டி விரலை நீட்டியபடி மிரட்டினேன்.
மெதுவாக ஆரம்பித்து, ஒவ்வொரு வாக்கியத்திலும் சூடு ஏறிக்கொண்டே போக, மாணவர்களுடன் சேர்ந்து அவரும் அரண்டு போய்விட்டார். புரியாதவர்போல நடித்து, “ஓ, அப்படியா?” என்று சமாளிக்கப் பார்த்தார்.
நான் பந்தை எடுக்கவில்லை.
இம்மாதிரியான ஆசிரியரை முன்னோடியாகக் கொண்ட மாணவர்களும், அவருடைய மகன்களும் அவரைப்போலத்தானே ஆவார்கள்?
இன்னொரு முறை, வேறு பள்ளிக்கூடத்தில் கால்பந்து என்னருகே விழ, `”டீச்சர், டீச்சர்! பந்து!” என்று மாணவர்கள் கெஞ்சலாகக் கூவினார்கள்.
`இருங்கள்!’ என்று நான் சைகை காட்டிவிட்டு, சில அடிகள் பின்னோக்கி நடந்து, பந்தை உதைத்தேன். அது வெகு தூரம் பறக்க, மாணவர்களுக்கு ஒரே அதிர்ச்சியும், ஆச்சரியமும். பிறகு, ஒரே குரலில் சிரித்தார்கள்.
மரியாதை கொடுத்தால்தான் மரியாதையை எதிர்பார்க்க முடியும்.
அன்று பிற வகுப்புகளைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னிடம் வந்து, “டீச்சர் கால்பந்து விளையாடி இருக்கிறீர்களா?” என்று மிக மரியாதையாக விசாரித்தார்கள்!
பள்ளிக்கூடத்தில் எல்லாவித விளையாட்டுகளையும் தினமும் முக்கால் மணி கற்றிருக்கிறேன். குறிப்பிடும்படியாக எதிலும் சிறக்காவிட்டாலும், இளமையில் முடிந்தவரை எல்லாவற்றையும் கற்பது எக்காலத்திலாவது உதவுகிறது.
அச்சுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை. அது வெறும் கட்டுப்பாடுதான். நாளடைவில் இரு தரப்பினருக்குமே வெறுமை ஏற்பட்டுவிடும்.
யாரையெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள்?
1. பதின்ம வயதுப்பெண்கள்தாம் பலவிதமாகப் பழிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த வயதில், தம்மைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ, அழகாக இருக்கிறோமா, எல்லாருக்கும் நம்மைப் பிடிக்குமா என்று ஏதேதோ குழப்பங்கள் எழும். `நீ குண்டு!’ `முட்டாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, மனமுடைந்து போய்விடுவார்கள்.
2. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, பணத்தை நிர்வகிக்கத் தெரியாது வளர்ந்திருக்கும் பெண்ணைக் கட்டுப்படுத்துவது எளிது. இவளைப் போன்றவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது. சம்பாதிப்பது எல்லாவற்றையும் கணவனிடம் கொடுத்துவிட்டு, அத்துடன் தன் சுதந்திரத்தையும் இழந்து, தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமையை அவனுக்கு அளித்துவிடுபவள்.
3. ஆண்களுடனும் அதிகம் பழகியிராது, மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்திருக்கும் பெண். `கணவன் சொற்படி நடந்தால்தான் பிறந்த வீட்டுக்கு மரியாதை!’ என்பதுபோல் வளர்க்கப்பட்டிருப்பாள். இவள் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ வதைக்கு ஆளாகிறாள். அவளுடைய திறமைகள் ஒடுக்கப்படுகின்றன. `ஏன் முன்போல் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பத்திற்கு அவளால் விடை காண முடிவதில்லை.
உடல் ரீதியிலோ, உணர்ச்சிபூர்வமாகவோ வதைக்கு உள்ளாகுபவர்கள் தன்னம்பிக்கை குன்றிப், மன இறுக்கத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு.
அடுத்த தலைமுறையினரும் இப்படி ஆகாமலிருக்க என்ன வழி?
பெற்றோர் சொல்வதையெல்லாம் மறுபேச்சு பேசாது ஏற்று நடப்பவர்கள்தாம் நல்ல பிள்ளைகள் என்பதில்லை. ஆணோ, பெண்ணோ, சுயமாகச் சிந்தித்து நடக்கும் உரிமையை, திறமையை, பெற்றோர் அவர்களிடம் வளர்க்க வேண்டும். ஆனால், தமது கருத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், அது நன்மைதானா என்று அறியும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லையே!
மகனுக்கு வழிகாட்ட, `உன் மனைவியை மதித்து நட. உன் தந்தையைப்போல் மனைவியைத் தூக்கி எறிந்து நடத்தினால், இந்தக் காலத்துப் பெண் ஒரே மாதத்தில் உன்னை விவாகரத்து செய்துவிடுவாள்!’ என்று பேச்சுவாக்கில் கூற, பெண்களை எப்படி நடத்துவது என்று புரிந்துகொள்வான்.
கதை
அன்று காலைதான் அவனுக்குக் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. ஆனால் மணமகனின் முகத்தில் கலக்கம்.
“எல்லாரும் Happy married life! என்று வாழ்த்துகிறார்கள். அது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை!’ என்று அயர்ந்தான்.
“பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதைப் புரிந்து, மதித்து நட. அவளுடைய பொழுதுபோக்குகளில் ஊக்கமளிப்பதுடன், முடிந்தால், நீயும் உதவி செய். ஆனால், ரொம்பத் தழைந்துபோய், மனைவி உன்னை மட்டமாக நினைத்து நடத்த இடம் கொடுக்காதே!” என்று அறிவுரை கூறினேன்.
(பணியில் சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், சிரித்த முகத்துடன் பழகும் ஆசிரியர்களுக்கு பிறகு எப்போதுமே அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். இது என் அனுபவம். ஆரம்பத்தில் கெடுபிடியாக இருந்தால், பிறகு அதிகாரத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளலாம். இதைத்தான் மணமகனுக்கு மாற்றிச் சொன்னேன்).
அவன் மணந்த பெண் பணக்காரி, கர்வி. கல்யாணம் முடிந்து, ஒரு வாரத்திலேயே அவளுடைய சுபாவம் புரிந்தது. பெற்றோர்களிடமே மரியாதைக்குறைவாகத்தான் நடந்துகொண்டாள். ஆனால் அவளுடைய அதிகாரம் அவனிடம் செல்லவில்லை. தான் மிரண்டால் கணவருடைய அதிகாரம் இன்னும் அதிகரித்துவிடும் என்று பயந்தோ, என்னவோ, மரியாதையாக இருக்கிறாள். இல்லறம் நல்லபடியாக நடக்கிறது.
சில பெண்கள், `நாங்கள் நீண்ட காலம் ஆண்களைவிடக் கீழான நிலையிலே இருந்துவிட்டோம். இப்போது, ஒரு மாறுதலுக்காக, நீங்கள்தாம் எங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்து பாருங்களேன்!’ என்பதுபோல் மிரட்டலாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது பிரச்னைகளைப் பெரிதாக்கும் வீண்முயற்சிதான்.
தாழ்ந்தே இருக்க நேரிட்டால், எவருக்குமே ஆத்திரம்தான் வரும். ஒருவர்க்கொருவர் ஊக்கமளித்து உதவினால், இருவருமே முன்னேறலாமே!
தொடருவோம்