பெருவை பார்த்தசாரதி
Happy-Mother-And-Happy-Baby-In-The-Bed

 

 

 

 

 

 

 

 

ஒருமித்த கருத்துடனே யொருசேரயிருவரும் கைகோர்த்து..

……….ஒப்பற்ற மணவாழ்க்கை…..மகிழ்ச்சிதான் ஆயினும்..

கருசுமந்து வரும்நாளைக் கருத்துடனே எதிர்பார்த்து..

……….கடமை களெதிலுமே மனமிசைய வில்லையம்மா.!

கருப்பையில் உருவாகுமன் நன்னாளை ஆவலுடன்..

……….கன்னத்தில் கைவைத்துக் காத்திருப்பேன் எந்நாளும்.!

உருவாகும் கருவுக்கேநான் எருவானாலும் பரவாயில்லை..

……….கருத்தரிக்க இப்பிறப்பில் என்னதவம் செய்யவேணும்.!

 

 

வீடுவாசலுடன் தோட்ட மதிலிருந்தால் போதுமா..

……….விளையாடிமகிழ அங்கேயோர் மழலை வேண்டாமா.?

கூடுகட்டி வாழும் உயிரினமுமதன் குடும்பத்துடன்..

……….கொண்டாடி மகிழ்வதை ஏக்கத்தோடு பார்க்கிறேன்.!

துடுப்பில்லா ஓடம்போலே தடமின்றி அலைகிறேன்..

……….துணையுடன் கோவில் கோவிலாக குழந்தைவேண்டி.!

ஆடும் தொட்டிலிலெம் குழந்தையைக் காண்பதற்கே..

……….ஆரென்ன தவம்செய்ய வேணுமென்பதை யறியோம்.!

 

 

இல்லை யிவளுக்குப் பிள்ளை பாக்கியமாமென..

……….ஈரெட்டு மாதங்கள் இருநொடிபோல் கடந்ததுவே.!

சொல்லாலே சுற்றமும் உறவுமெனை மலடியெனவே..

……….கொல்லாமல் கொல்லுவார் அன்றாட மொருமுறை.!

இல்லையொரு பிள்ளையெனும் பெருமேக்கம் கொண்டு..

……….இறைவனுக்கே எட்டுமாறு பத்துமாதம் தவம்செய்தேன்.!

இல்லையென்று ஒருபோதும் சொல்லாத இறைவனுமே..

……….எம்தவத்துக் கருளினான் ஈடில்லாச்செல்வ மகவொன்றை.!

 

 

குழலெடுத்தூதும் கண்ணன் போலயெம் குடும்பத்துக்கே..

……….அழகுக்கழகு சேர்த்தானவன் ஆடுமயில் தோகைபோலே.!

மழலையெந்தன் செல்வம் சிரித்துவிட்டால் போதுமடி..

……….மறந்துதான் போகுமங்கேயென் மனக்கவலை எல்லாம்.!

மழைகாணும் வாடியபயிர்கள் பசுமை காண்பதுபோல..

……….மகவைக் காணும்தாய்க்கு வேறென்ன? மகிழ்ச்சிதரும்.!

தழைக்கும் தன்மகவால் தாய்மைக்கின்பம் கிட்டுமதற்கு..

……….தவம்..என்னதவம் செய்தேன்?இம்மகவைப் பெறுதற்கே..!

===========================================

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::20-08-2017

நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *