இலக்கியம்கவிதைகள்

அரைகுறையாய்ப் போன கனவுகள்

சாந்தி மாரியப்பன்

மேகத்தில் சற்று தலைதுவட்டிக்கொள்ளும்

ஆவல் கொண்டு,

ஆயிரம் மூங்கில் கால்களூன்றி

ஆஹாவென்றெழுந்த

அலங்கார மாளிகைகள்,

விதிகளை மீறி விட்டதாய்

அவசரமாய் பிறப்பித்த அரசாங்க தடையுத்தரவால்,

அப்படியே நின்றன அரைகுறையாய்..

 

செங்கற்தோல் போர்த்தாத

இரும்பு எலும்புக்கூடும்,

முகப்பூச்சு காணாத கற்சுவரும்,

பரிதாபமாய்ப் பொலிவிழந்து,

பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன.. மௌனமாய்,

ஆயிரமாயிரம் கதைகள் சொல்லிக் கொண்டு.

 

தோற்ற மாறுதல்களை உள் வாங்கிக்கொண்டு

காரை பெயர்ந்து நிற்கும் சுவர்கள்,

பாசிகளின் பலத்தில்

தங்களைக் காப்பாற்ற முயன்று தோற்று நிற்க,

சலனமில்லாமல் நிகழ்கின்றன

காட்டுச்செடிகளின் குடியேற்றங்கள்..

 

கனவு இல்லத்தை

கனவில் மட்டுமே கண்டு கொண்டிருக்கும்

எளியவனின்

ஏக்கப்பெருமூச்சில் படபடக்கின்றன,

தளங்களில் கொட்டப்பட்டு

கல்லாய் மணலாய் உருமாறி,

பளிங்குக் கற்களாய் உறைந்து கிடக்கும்

முதலீடு செய்த சலவை நோட்டுகள்..

 

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க