அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
ராமலக்ஷ்மி
கோமதி நடராஜனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
சிந்திக்க ஒன்றும் சிரிக்க ஒன்றுமாக இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து, இணையத்தில் ‘கோமா’ என அறியப்பட்டும், அழைக்கப்பட்டும் வரும் கோமதி நடராஜனின் முதல் புத்தகம். கடந்த முப்பது ஆண்டு கால எழுத்துப் பயணத்தில், வாழ்க்கை அனுபவத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் அந்தந்த காலக்கட்டத்திலேயே பதிந்து வைத்தவற்றின் முழுத் தொகுப்பு. இதில் சில கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியானவை. சில அவரது வலைதளங்களில் பகிர்ந்தவை.
எனது பதினைந்தாவது வயதிலிருந்து இவரது எழுத்துக்களைத் தொடர்கிறேன் என்பது ஒரு விசேஷம். எழுபதுகளில் இவரது முதல் சிறுகதையே ஆயிரம் ரூபாய் பரிசினை வென்று பேசப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. எண்பதுகளில் என் எழுத்துப் பயணமும் ஆரம்பமாக இருவரும் ஒரே சமயத்தில் ‘நண்பர் வட்டம்’ சிற்றிதழிலும், பிறகு 2000-ன் ஆரம்பத்திலிருந்து திண்ணை இணைய இதழிலும் எழுதி வந்துள்ளோம். திரு நெல்லைக் கண்ணன் அவர்களது சிறப்பான அணிந்துரையுடன், திரு லேனா தமிழ்வாணனின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக அமைந்த இவரது முதல் தொகுப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.
தான் பார்த்தவற்றினின்று மட்டுமின்றி தனைப் பாதித்த, வருத்திய விஷயங்களிலிருந்தும் படிப்பினையை எடுத்துக் கொண்டதோடன்றி அதைக் கற்பித்தவர்களையும் போற்றும் பண்பே சொல்லும் இப்புத்தகத்துக்கும் அன்பே ஆதாரமாக அமைந்திருப்பதை: “சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். ஒரு சிலர் எப்படி இருக்கக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லித் தந்தார்கள். இருவருமே நான் போற்றும் ஆசிரியர்கள்தாம்.”
சுயமுன்னேற்றப் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறோம். நம் சுயத்தை அறிந்து கொள்ள, புடம் போட்டு வெளிவர உதவும் மந்திரக் கோலாக இப்புத்தகம் வாசிப்பவரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் அமைந்திருக்கிறது.
அன்றாட வாழ்வில் அனுசரிக்கப்பட வேண்டிய பலவற்றை, அவசர உலகில் நின்று சிந்திக்க அவசியமற்றதாய் நாம் ஒதுக்கிச் செல்லும் தவறுகளை, உணர்த்தும் விதமாக அமைந்த தனது கருத்துக்களை வலிந்து திணிக்கவும் முற்படவில்லை.
தான் முப்பது ஆண்டு காலமாக சேகரித்த பொக்கிஷம் என்கிறார் இப்புத்தகத்தை ஆசிரியர். நமக்கும் அப்படியே. கொட்டிக் கிடக்கும் பொற்காசுகள் ஒவ்வொன்றும் வாசிப்பவர் வாழ்வை வளமாக்கப் போவது நிச்சயம். இதமான அனுபவ மொழிகளாய்ச் செதுக்கி வைத்ததோடு தன் வேலை முடிந்ததெனக் கருதுகிறார் தான் சொன்ன கருத்துக்கே முன் மாதிரியாக நின்று: “அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள். இந்த விஷயத்தில், நாம் எல்லோரும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகம் போல் காத்திருப்போம்.”
இதோ இப்புத்தகமும் காத்திருக்கிறது. வாருங்கள் உள்ளே செல்வோம்.
மொத்தம் பதினான்கு அத்தியாயங்கள். ஒரு சிலவற்றினின்று ஒருசில துளிகளைப் பகிர்கிறேன்.
‘குடும்பத்தைக் கோவிலாக்குவோம்’ அத்தியாயத்தில், “மழையில் நனைகிறேன், வெயிலில் காய்கிறேன், எல்லாவற்றிற்கும் நான் தானா அகப்பட்டேன் என்று குடையும், குளிர் நிழல் தரும் ஆலமரமும் நினைத்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களின் சலிப்பும் முணுமுணுப்பும்.”
‘உரையாடும் கலை’யில், “சிலருக்கு, அடுத்தவரை ஏளனப்படுத்திப் பார்ப்பதில் அலாதியான சந்தோஷம் இருப்பதாக நினைத்து, வார்த்தைகளுக்கு நடுவே குத்தலும் கேலியும் விதைத்து உரையாடுவர்…. அப்படிப்பட்டவர்கள் உண்மையான சந்தோஷத்தின் அர்த்தத்தை உணராதவர்களாகத்தான் இருக்கமுடியும்..” என்கிறவர் ஜடப்பொருட்களுக்குத் தரும் கவனிப்பையும் கரிசனத்தையும் ஏன் கண்ணெதிரே நடமாடும் மனிதர்களுக்கு இவர்கள் தருவதில்லை என ஆற்றாமையுடன் வினவுகிறார். “கனிவாய் உரையாட, மனித நேயத்தின் பெருமையை உணர்ந்திருந்தாலே போதும்” என்கிறார்.
‘சிற்பிகளைச் செதுக்கும் சிப்பிகளே!’, “குழந்தைகளின் மனதில் ஒரு நல்ல குணம் பதிய வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லிக் காட்டுவதை விடச் செயலில் காட்டுவதே சிறந்தவழி….பிஞ்சுக் கால்கள் என்றுமே தனக்கு முன்னே தெரியும் காலடிச் சுவடுகளைப் பின்பற்றித்தான் நடை போடும்….குழந்தைகள் உங்கள் அடிமைகள் என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை அடக்க முயலாதீர்கள்….குழந்தைகளிடையே அன்பு, கண்டிப்பு இவற்றில் பாரபட்சம் காட்டினால், அவர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமையை முளையிலேயே கிள்ளி எறியும் மோசமான தோட்டக்காரர் நீங்கள்.”
‘உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்.’ பிரதிபலன் எதிர்பாரா சுனை நீராக மனம் இருக்க வேண்டுகிறார். “உதவி பெற்றவரே உங்களுக்கு உதவ வேண்டும் என்று இறைவனும் நினைத்திருந்தால், இந்தப் பரந்த உலகில், உறவு வட்டம் மிகவும் சுருங்கியிருக்கும்.” அடுத்தவருக்கு உதவும் சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லப் பழகிக் கொண்டால் ‘நான் உதவினேன்’ எனும் மமதை மறையும் என்கிறார்.
ஆளாக்கினோம் என்பதற்காகக் குழந்தைகளிடம் கூட பிரதிபலனை எதிர்பாராதீர்கள் என்கிறவர், பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்கிற உதவிகளைச் சொல்லிக் காட்டுபவர்களுக்காக கடமைக்கும் உதவிக்கும் இடையேயான வித்தியாசத்தை அழகான உதாரணத்துடன் விளக்கியிருக்கிறார்.
‘நாம் நாமாக..’ எந்நேரமும் இருக்க முயன்றிடுவது சரிதானா எனும் கேள்வியை எழுப்புகிறார். “நம் சந்தோஷம், அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும்.” என்கிறார்.
பாசம் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப அமைப்பில் முன்னோர் விட்டுச் சொல்லும் பணத்தினால் எப்படியெல்லாம் பூசல்கள் எழுகின்றன என்பதைச் சொல்லுகிறது ‘பத்திரம் பத்திரம்’: “நம் சொந்த முயற்சியில் ஈட்டிய ஒரு கோடி நமக்கு அடிமை என்றால், அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறித்து எடுத்த ஒற்றை ரூபாய் ஆயுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி.”
‘மன அஜீரணத்துக்கு மருந்து’ வழங்குகிறார். ‘நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர..’ வழிகாட்டுகிறார்.
இந்த அத்தியாயங்களுக்கு எல்லாம் சிகரமாக அமைந்திருக்கிறது கடைசி அத்தியாயம்: ‘அறுபதுக்கு அன்புக் கட்டளைகள்’. தமக்கென்று வாழாமல்
குடும்பத்துக்காகவே உழைத்து, பிள்ளைகள் வாழ்வை சீரான பாதையில் செல்ல வைத்த பின்னும் தம் மேல் அக்கறையின்றி இருப்பவர் ஆயிரம் ஆயிரம் பேர். ஓய்வு காலத்தில் இவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவையாக பகிர்ந்திருக்கும் ஆலோசனைகள் பெரியவர்களைப் பரவசப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. வாசிக்கும் இளைஞர்களும் தம் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர செய்கிறோமா என சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. வாசிப்பதோடு நின்றிடாமல் ஒன்றுக்குப் பத்தாக வாங்கிவைத்துக் கொண்டு சந்திக்கும் பெரியவர்களுக்குப் பரிசாக வழங்கினால் உங்களை மனதார வாழ்த்தி ஆசிர்வதிப்பார்கள்.
“அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்”அன்பு எனும் சொல்லுக்கு அகராதியாய், நம்மைச் சுற்றி இருப்பவரை மதிக்கவும், நம்மை நாமே நேசிக்கவும் சொல்லித் தந்து, அன்பால் மட்டுமே இப்பூவுலகம் சுழல, அன்புடன் வேண்டி நிற்கிறது. படைத்தவரும் உயர்ந்து நிற்கிறார்.
அடுத்து இரண்டு தொகுப்புகளாகத் தனது ஹாஸ்யக் கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளிக் கொணர ஆசிரியர் எடுத்துவரும் நல்முயற்சி விரைவில் வெற்றி பெற வாழ்த்துவோம்.
***
அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்பக்கங்கள்:76 ;
விலை:ரூ.40
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம்
புத்தகத்துக்கு அணுகவும் : 044-24342926, 044-24346062
மின் அஞ்சல் : manimekalai1@dataone.in
*** ***
வலைப்பூ: முத்துச்சரம்
http://tamilamudam.blogspot.com/
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் கோமாக்கா. ஹாஸ்யக்கட்டுரைகளும் விரைவில் புத்தகமாக வரவிருப்பது ரொம்ப சந்தோஷமளிக்கும் செய்தி 🙂
நல்லதொரு விமர்சனம் ராமலஷ்மி.
நன்றி சாந்தி.