வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (21)

2

பவளசங்கரி

 

அன்பு நண்பர்களே,

தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடரில் சில வாரங்களாக சிறு தடை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து வரும். நன்றி.

கதை தொடர்கிறது…

 

தோட்டம் முழுவதும் வண்ண வண்ண மலர்கள்! ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான மணம். குணமும் தான். சில மலர்கள் மூன்று நாட்கள் வரை வாடாமல் அப்படியே பசுமையாக இருக்கும். ஆனால் சில மலர்களோ மலர்ந்த சில மணித்துளிகளே பசுமை காக்கும். இது படைத்தவனின் பாகுபாடே அன்றி, தானே விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை அல்லவே.

ரிஷி களைத்துப் போன தோற்றமும் சவரம் செய்யாத முகமும், அக்கறை இல்லாத உடையுமாக இப்படி ஆளே உருமாறி இருந்தான். மனைவி வந்தனாவின் உடல் நலிவு தன்னை ரொம்பவும் பாதித்திருப்பதை உணர்ந்தும் தன்னால் அதை வெளிக்காட்டக்கூட முடியாமல் போனது சங்கடமாக இருந்தது. காரணம் அந்த வருத்தம் தன் அன்பு மனைவியின் ரணத்தை அதிகப்படுத்துமே என்பதால் தான். ஒரு பொய் முகத்தை மாட்டிக் கொள்ளும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. வந்தனா மிகவும் இளகிய மனம் படைத்தவள் ஆயிற்றே……….சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட காலங்கள் போய் இன்று சீரியசான விசயத்திற்கு புன்சிரிப்பாக பொய் முகமூடி அணியும் பக்குவம் வந்ததை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது அவனுக்கு!

பல முகங்கள் கொண்ட மனிதர்களிடையே இது போன்ற புன் சிரிப்பாய் சிரிக்கும் முகமூடி எவ்வளவோ தேவலை அல்லவா? குழந்தைத்தனமும், குறும்புத்தனமும் இருந்த பழைய ரிஷிக்கும், பொறுமையும், பொறுப்பும் நிறைந்த இன்றைய ரிஷிக்கும் எவ்வளவு மாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டான். தள்ளி நின்று தன்னைப் பார்க்கக் கற்றுக் கொண்ட இந்த நிலையே தன்னை அமைதியுடன் செயல்களைச் செய்யத் தூண்டுவதோடு, மனிதர்களையும், சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. நேரம் போனது தெரியாமல் சிந்தையில் ஆழ்ந்து கிடந்தவனுக்கு, அன்பு மனைவி வந்தனாவின் நினைவு வந்தவுடன் அடுத்த நொடி,பரபரவென கிளம்பி மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவமனைச் சூழல் ஒரு மனிதனை எந்த அளவிற்கு புரட்டிப் போடுகிறது என்பதன் உச்சம்தான் புற்று நோய் மருத்துவமனைச் சூழல். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்திற்கு எள்ளளவும் குறைந்ததாக இருக்காது அவர்களின் நெருங்கிய உறவினரின் துன்பம். இந்த மருத்துவமனைக்கு வந்து தங்கியிருக்கும் இந்த சொற்ப நாட்களிலேயே பல சிந்தனைகளும், தெளிவும் ஏற்பட்டதும் மறுக்க இயலாத உண்மை. ‘ஒரு மனிதன் உண்மையான மனத்தெளிவு பெறக்கூடியதும் இது போன்ற சூழல்களில்தானோ’ என்ற எண்ணமும் தோன்றியது.

அன்று மருத்துவமனைக்கு நுழைந்தவுடன் ஏதோ ஒரு பரபரப்பு தெரிந்தது! அன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா? அன்னபூரணி அம்மாள் வருகின்ற நாள் அல்லவா, அதுதான் காரணமாக இருக்கலாம். அவர் வந்தாலே அமைதியான ஒரு சிறு பரபரப்பு தெரியும். அன்பான அந்த வார்த்தைகளும், கனிவான , ஆதரவான அந்த பார்வையும் பாதிக்கப்பட்ட இதயங்களுக்கு வெண்சாமரம் வீசி குளிரச்செய்யும். நல்ல மனிதர்களின் நல்லெண்ண அலைகள் பரவும் போது தீயவைகளின் சக்தி அடங்கிப் போகும் என்று எங்கோ ஏதோ காலட்சேபத்தில் கேட்டது திடீரென நினைவிற்கு வந்தது ரிஷிக்கு……

பல நாட்களாக அன்னபூரணியம்மாள் பற்றிய பேராச்சரியம் அவனுக்கு. ஞாயிற்றுக்கிழமை என்பதை அவர் வருவதை வைத்தே நினைவில் கொள்ள முடியும் என்பார் அங்கு பல ஆண்டுகளாக பணிபுரியும் வாட்சுமேன் சாந்தநாதன். அன்னபூரணியம்மாளின் சரிதம் கேட்டு மலைத்துப் போயிருந்தான் ரிஷி. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரே செல்லப் பெண். அம்பிகையைப்போல் அழகாக, அமைதியான முகத்துடனே பிறந்த, தவமிருந்து பெற்ற குழந்தைக்கு அன்னபூரணி என்ற பெயரே பொருத்தம் என்று எண்ணி வைத்திருப்பார்களோ என்னவோ….

இந்த அழகு தேவதைக்கு மாப்பிள்ளை பார்க்கும் சிரமமே சற்றும் இல்லாமல், தூரத்து உறவினனான, தங்கள் மகளின் அழகிற்கும், அந்தஸ்திற்கும் சற்றும் குறைவில்லாத மிதிலன் ஏழு செருப்புகள் தேய நடையாய் நடந்து பெண் கேட்டு , எல்லாரும் முழு மனதுடன் சம்மதிக்க, ஊரே கலகலக்க நடந்த திருமணம். அதற்குப் பிறகு அது போன்றதொரு ஆடம்பர திருமணம் இன்றுவரை நடக்கவில்லை என்று சொல்லுமளவிற்கு யானை ஊர்வலத்துடன் ஊரே திரண்டு நடத்திய திருமணம். திருமணம் முடிந்து மகளை மகாலட்சுமியாக அனுப்பி வைத்த பெற்றோர், அடுத்த மூன்றாவது மாதம் தன் மகள் மூளியாக அப்படி வந்து நிற்பாள் என்று கனவிலும் நினைத்தவர்கள் இல்லை!

திருமணம் முடிந்து மூன்று நாட்களில் பால் சொம்புடனும், பல நூறு கற்பனைகளுடனும் அழகு தேவதையாக முதல் இரவு அறை நோக்கிச் சென்றவள். கணவனின் அன்பு அணைப்பின் சுகம் நாடி அருகில் சென்றவள், அவனின் சோர்ந்த முகமும், சிவந்த கண்களும் கண்டு, லேசான அதிர்ச்சியுடனும், கேள்விக்குறியுடனும் பார்க்க, அன்புக் கணவனும் பேராவலுடனும், பெருமிதத்துடனும் அழகு தேவதையான அன்பு மனைவியை மென்மையாக கையைப் பிடித்து அருகில் அமரச் செய்ய, கையில் இருந்த அந்த சூடும், அருகில் வீசும் அனலும் அதிர்ச்சியைத்தர, அடுத்த நொடி சற்றும் தயங்காமல், அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவள் அந்த சூட்டையும், கண்களின் சிவப்பையும் வைத்து நல்ல காய்ச்சல் இருப்பதை உணர்ந்து கொண்டவள் , அடுத்த நொடி துள்ளி எழுந்து, வெட்கமெல்லாம் மறைந்து போக,

“ காய்ச்சல் அதிகமாக இருக்கும் போல் உள்ளதே?” என்றாள்.

“ம்ம்…..ஒன்றுமில்லை. திருமண அலைச்சலாக இருக்கும். கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும், நீ ஒன்றும் கவலைப்படாதே” என்று சொன்னாலும் அவனால் அதற்கு மேல் ஏதும் பேச முடியவில்லை. காய்ச்சல் வேகம் அதிகரித்ததோடு, குளிரும் சேர்ந்து கொண்டது.
அவனை அப்படியே படுக்க வைத்து கம்பளி எடுத்துப் போர்த்தி விட்டு, தலையைப் பிடித்து விட்டாள். அனாவசியமாக எல்லாரையும் தொல்லை செய்ய வேண்டாமே,  அனைவரும் திருமண வேலையில் களைத்துப் போயிருந்தனர். எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்களே. அவர்களை எழுப்பி சிரமம் கொடுக்கவும் மனமின்றி, தானும் அமைதியாக கட்டிலின் ஒரு ஓரமாக சுருண்டு படுத்துக் கொண்டாள்……….

அடுத்த நாள் விடியலில் எழுந்து வெளியே சென்ற போது, சிவந்த கண்களும், கலையாத வதனமும் அவளின் நிலையை தெளிவாக உணர்த்த, மாமியார் கேள்விக்குறியுடன் மருமகளின் முகம் பார்க்க, புரிந்து கொண்ட அன்னபூரணியும், மிதிலனுக்கு காய்ச்சல் இருப்பதையும், எடுத்துக் கூறினாள். குளிர் சற்று விட்டிருக்க, காய்ச்சல் மட்டும் இருப்பதாக அந்த சூடு உணர்த்தியது. மாமியாரும், ‘அலைச்சல் காரணமாக இருக்கும் சற்று ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். ஏற்கனவே இதுபோல இரண்டு மூன்று முறை வந்திருக்கிறது’ என்று சர்வ சாதாரணமாக சொன்னது மனதிற்கு ஆறுதலிப்பதாக இருந்தாலும், உள்ளுணர்வு ஏதோ விபரீதத்தை உணர்த்தியது. அதற்குத் தகுந்த மதிப்புக் கொடுக்கவும் எண்ணினாள்.  காலைப் பொழுது மலர்ந்தவுடன் முதல் வேலையாக மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.

அடுத்து நடந்த நிகழ்வுகள், கேட்பவர் மனது கல்லாக இருந்தாலும் கரையச் செய்யக் கூடியதாகும். ஆம்! கலகல்ப்பாக சிரித்துக் கொண்டு இருந்தாலும் மிதிலனின் முகத்தில் நோயின் கடுமை நன்றாகவே தெரிந்தது. மருத்துவமனைக்குச் சென்று வந்த போதும், அவர்கள் கொடுத்த மருந்துகள் காய்ச்சலை பூரணமாக குணப்படுத்த முடியாமல், அவ்வப்போது விட்டுவிட்டு வர தொடர்ந்து மருத்துவமனைக்கு நடக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. காய்ச்சலும் நீடித்துக் கொண்டே இருந்ததால் மருத்துவர்களுக்கும் ஐயம் ஏற்பட பிறகு பல விசேச சோதனைகள் செய்யப்பட முடிவில் அன்னபூரணியின் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய ஒரு பெரிய குண்டைத் தூக்கி வீசினர் மருத்துவர்கள்………..

 

படத்திற்கு நன்றி

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (21)

  1. தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடருக்குக் கருத்து எழுதுவதில் சில வாரங்களாக சிறு தடை. இனி தொடர்ந்து வரலாம்!
    ‘…பல முகங்கள் கொண்ட மனிதர்களிடையே இது போன்ற புன் சிரிப்பாய் சிரிக்கும் முகமூடி எவ்வளவோ தேவலை அல்லவா? ..’
    ~ என்று சொன்னாலும், அது எளிது அல்ல. இயன்றாலும், மன அழுத்தம் நிழல் போல் கூட வரும். ஆனாலும், எல்லாரும் முகமூடி அணிந்து தான் உலாவுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.