சுயம்வரம்
விசாலம்
பழைய ‘பாஞ்சால தேசம்’ இன்று குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா என்ற பிரிவில் ‘டார்னேடார்” என்ற இடமாக உள்ளது. இந்த இடம் எதற்கு விசேஷம் என்றால், இந்த இடத்தில் தான் மஹாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனை திரௌபதி சுயம்வரமாக திருமணம் செய்து கொண்டாள்.
சுயம்வரத்தின் போட்டி மிகவும் கடினமான ஒன்று. சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தில் ஒரு மீன் ..அதுவும் தலைக்கு மேலே சுழலும் சக்கரம்.. கீழே ஒரு நீர்த் தொட்டி. அதில் சுழலும் மீனின் பிம்பம் தெரியும். நீரில் தெரியும் மீனின் பிம்பத்தைப் பார்த்து மேலே கட்டப்பட்டிருக்கும் மீனை அம்பால் குறி வைத்து எய்ய வேண்டும்.
அப்பா! இது என்ன! சாமானியமான காரியமா ? ஒரு இடத்திலேயே நிற்கும் மீனை அடித்து விடலாம். ஆனால் சுழலும் மீனை அதுவும் கீழே நீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்து அடிக்க வேண்டுமென்றால் அர்ச்சுனன் இந்தக் கலையில் எத்தனை மேதையாக இருந்திருப்பான். மீனை அடித்து வெற்றி கண்ட அர்ச்சுனனை திரௌபதி மிக மகிழ்ச்சியுடன் மணக்கிறாள்.
இந்த சுயம்வரம் நடந்து அர்ச்சுனன் அதில் வெற்றி பெற்ற இடம் தான் ‘டார்னேடார்‘. இன்றும் இந்த நாளை ஒரு திருவிழாவாக இங்கிருக்கும் மக்கள் கொண்டாடுகின்றனர். இங்கிருக்கும் ‘திருநேத்ரேஸ்வரர்‘ என்ற கோயிலில் முதல் நாள் கொடியேற்ற விழா விமரிசையாக நடக்கும்.
‘ராஜா கர்ணா சிங்ஜி ஜாலா’ என்பவர் இந்தக் கோயிலைப் புதுப்பித்தது மாசி மாதத்தில். அவர்தான் இந்தத் திருவிழாவையும் ஆரம்பித்தார் . இந்தக் கோயில் மிகப் பழமை வாய்ந்தது, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ‘ராஜா சோலாங்கி மாந்தாதா’ என்ற மன்னர் முதன் முதலில் இந்தக் கோயிலைக் கட்டி ‘ ‘த்ரிநேத்ரேஸ்வரர்‘ என்ற பெயரிட்டு வணங்கி வந்தாராம்.
இரண்டாம் நாளன்று கங்கை நீர் சேகரிக்கப்பட்டு, எல்லோரும் அதில் ஸ்நானம் செய்து தங்கள் பாபங்களைப் போக்கிக் கொள்வார்கள். மூன்றாம் நாள் ‘ ‘திரௌபதி சுயம்வரம்’ ஞாபகமாக இங்கும் சுயம்வரம் நடக்கும்.
பல மலைச்சாதிப் பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள். எங்கும் பச்சை,சிவப்பு போன்ற ஆழமான வர்ணங்களின் உடைகள், அதில் பதிக்கப்பட்டு பளபளக்கும் கண்ணாடிகள். சம்க்கி வேலை செய்யப்பட்ட ரவிக்கைகள், குட்டிப் பாவாடையான ‘காக்ராஸ்‘ அதில் இருக்கும் மடிப்புக்கள் பெரிய வட்டமாகச் சுழட்ட வசதியாக இருக்கும்.
தாண்டியா நடனம்
நெற்றியில் பெரிய பொட்டும் சரிகையுடன் மின்னும் இந்தச் சுயம்வரப் பெண்கள் வரிசையாக நிற்க ஆண்களும் வரிசையாக எதிர் வரிசையில் நிற்பார்கள். அவர்களின் உடையும் வித்தியாசமாக இருக்கும். கீழே பஞ்சகச்ச வேஷ்டி சரிகைப் போட்டது, தலையில் பளபளக்கும் சரிகை முண்டாசு. மேலே முழுக்கைச் சட்டை, மிகக் குட்டையாக இருக்கும்.
இப்போது சுயம்வரம் ஆரம்பிக்கும். வாத்தியங்களில் ‘ஷெனாய்’ முக்கியமாக இருந்து மங்கல ஒலி எழுப்பும். பின் மேளதாளங்கள் ஒவ்வொன்றாய் முழங்க ஆரம்பிக்க, விழா களைக் கட்டும்.
இப்போது ஒவ்வொரு ஆணும் பெண்ணிடம் சென்று குஜராத்தியில் தங்கள் ஆசையைத் தெரிவிப்பார்கள். அப்படி என்னதான் சொல்கிறார்கள்?
“என்னைப் பார், என் அழகைப் பார் . என்னை மணக்க உனக்குச் சம்மதமா?” என்று அவர்கள் கேட்பார்களாம். சம்மதம் என்றால் மூன்று முறை தலையை ஆட்டி பெண்கள் சம்மதம் தெரிவிப்பார்கள்.
பின் என்ன? ‘டும்..டும்..டும்’ என்று கல்யாணம் ஆகும். பின் இந்த ‘திரிநேத்திரேஸ்வரர்’ கோயிலுக்குப் போய் வணங்குவார்கள் .
நடனம் இல்லாமலா ? குஜராத்தின் பாரம்பரிய நடனமான, பெயர் பெற்ற ”தாண்டியா‘ நடனம் நடக்கும். சிலம்பாட்டம், பானைகளைத் தலையில் வைத்தபடி ஆட்டம், குத்துச்சண்டை, கத்திச்சண்டை போன்ற கலைகளும் அங்கு வெளிப்படும்.
மணமக்களுக்கு அடுக்கடுக்காக பூ வேலைகளுடன் பல வண்ணங்களுடன், மணிகளால் அலங்காரம் செய்யப்பட்ட மூன்றடுக்குக் குடையைப் பரிசாகக் கொடுப்பார்கள். இந்த சுயம்வரத்தைப் பார்க்க வெளிநாட்டினரும் வருகின்றனர். முதல் வருடம் திருமணம் செய்து கொண்டவர்களும் மறு வருடம் இந்த நாளில் வந்து, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விழாவில் பங்கு பெறுகிறார்கள்.
த்ரிநேத்ரேஷ்வர் கோவில் படத்துக்கு நன்றி
தாண்டியா நடனப் படத்திற்கு நன்றி
நல்வரவு. குஜராத்தில் பல வருடங்கள் கழித்த எனக்கு இது புதிய செய்தி. இத்தகைய கட்டுரைகள் நம் பாரம்பரியத்தின் ஒருமைப்பாட்டை முன்வைக்கின்றன.
பெண்ணின் விருப்பத்திற்கு முதலிடம் தரும் இவ்வகைச் சுயம்வரங்கள் வரவேற்பிற்குரியவை! பகிர்ந்தமைக்கு நன்றி!