கனம் கோர்ட்டார் அவர்களே! – 1

இன்னம்பூரான்

இந்தியாவுக்கு நல்ல பெயரும் உண்டு, அதனில் மாசு படிந்தும் இருக்கும், நச்சுக்காளான்கள் பூத்தும் இருக்கலாம். ஏன்? இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எனினும், உலகெங்கும் மதிக்கப்படும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ‘இந்தியா மசி’ என்று ஒரு தொடரை துவக்கியிருப்பதும், அவ்வாறு ஒரு தேசத்தின் மீது அந்த இதழ் சிறப்புத் தொடர் ஒன்றை அமைத்தது இது தான் முதல் தடவை என்று கேட்கும்போது, மகிழ்ச்சிக்கு மேலாக, கவலை எழுகிறது. இந்தியர்களாகிய நாமும், நமது குடியரசும், வண்ணக் கலவை போல் திகழும் பாரத சமுதாயமும், அதனுள் உறையும் சமூகங்களும், வணிகம், தொழில், சேவை, கட்டுமானம் போன்ற கிளைகளும் செவ்வனே இயங்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மார்க் டல்லி ஒரு பிரபல நிருபர். இந்தியாவின் நண்பர், டில்லி வாசி. அவர் பத்து வருடங்கள் முன்னால், ‘மந்தகதியில் இந்தியா’ என்ற நூல் எழுதினார். முகவுரையிலேயே, ‘இந்தியாவில் அரசுதான் பிரச்னை…மாசு படிந்த அரசாட்சி அதனுடைய தனித்துவம்’ என்றார். எள்ளலன்று அது, கசக்கும் உண்மையென்று 2011-ல் நாம் தலையில் அடித்து சத்தியம் செய்கிறோம். கையோடு கையாக சோறு தின்னப்போய் விடுகிறோம். இந்தப் பின்னணியில் தொடங்குகிறது: கனம் கோர்ட்டார் அவர்களே! தொடருவது உங்கள் கையில். வாசகர்களுக்கு பயன் இல்லாததை எழுதுவது தவறு. அவர்களுக்கு ஆர்வமில்லாததை எழுதுவது வீண். தனக்காக எழுதுவது அசட்டுத்தனம்.

தற்கால அரசியல் அமைப்புகளுக்கு வடிவமும், கடமைகளும் வகுத்த மாண்டஸ்க்யூ என்ற ஃபிரென்ச் தத்துவ ஞானி, சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றம், பரிபாலிக்க அரசாளும் ஆளுமை, அறிந்தும், ஆராய்ந்தும் உரை பகர நீதிமன்றம் என்று பாகப்பிரிவினை செய்தார். அவ்வழியே இயங்கும் இங்கிலாந்தின் உச்ச நீதி மன்றமான பிரபுக்கள் சபையின் தீர்வுகளை அலசும் பணியிலிருந்த போது, ஒரு தீர்வு கண்டு அசந்து போனேன்.

பினோஷே’ என்ற தென்னமெரிக்காவின் சில்லி நாட்டு கொடுங்கோல் அதிபர் இங்கிலாந்தில், கொலைகள் பலவற்றிற்கு காரணமானவர் என்று தண்டிக்கப்பட்டார், பிரபுக்கள் சபையினால். அந்த சபையே, வழக்கை மறுபடியும் அனுமதித்துத் தள்ளுபடி செய்தது. காரணம்: ஒரு நீதிபதியின் மனைவி, பினாஷேக்கு எதிர் வாடையில் இருந்த உலகப்புகழ் சமாதான மையத்திற்கு (ஆம்னஸ்டி இண்டெர்நேஷனல்) நன்கொடையாளர். அதை அவர் முன்கூட்டிச் சொல்லவில்லை. ஒரு பிரபலத்திடம் விளக்கம் கேட்டேன். இது நியாயமில்லை என்றேன். அவரோ ‘நியாயத்தை விட தர்மம் உயர்ந்தது. இந்த தீர்வு தார்மீகம்’ என்றார்.

இதை நான் எடுத்துச் சொல்வதற்குக் காரணம், இன்று (14-09-2011) இந்தியாவின் உச்ச நீதி மன்றம், என்றுமில்லாத வகையில் உன்னதத்திற்கும் உயரமாக, வானத்தில் ஒளி விடும் விண்மீனைப் போன்ற தீர்ப்பு ஒன்றை வழங்கி, இந்தியாவின் உச்ச நீதிமன்ற மேலாண்மைக்கு என்றும் மறவாத வகையில் புகழ்மாலை சூடியிருக்கிறார்கள். இத்தனைக்கும் வழக்கு சிறியது; தீர்வு கல்வெட்டு சாஸனம்.

தீர்வு முழுதும் இணையதளத்தில் வரவில்லை. அநேக நாளிதழ்கள் அதை இன்னும் கண்டு கொள்ளவில்லை. இருந்தும், நான் பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், மக்கள் மன்றம் என்ன சொல்கிறது என்று அறிந்து கொள்ள. சூடு தணிவதற்கு முன்னே என்பது, என் கட்சி.

தீர்ப்பு: “எந்த ஒரு அரசுக்கும், அதிகார மையத்துக்கும், தலைமை நீதிபதி உள்பட, அளவு கடந்த அதிகாரம் கிடையாது. தட்டிக்கேட்க முடியாத ஆளுமை கிடையாது. நீதித்துறை எந்த முடிவையும் பரிசோதிக்கலாம்.”

வழக்கு: தன்னுடைய 50 ஊழியர்களுக்கு விதிமுறைகளுக்கு அதிகமான சலுகைகளை, கல்கத்தா உயர்நீதி மன்றம் அளித்தது. ஒரு ஊழியருக்கு தவறுதலாக அளித்த சலுகையை, மற்றவர்களுக்கும் வழங்க, முடிவு எடுத்தது தலைமை நீதிபதி. உள் தணிக்கைத்துறை இதை தவறு என்றது. அரசாட்சியும் அவ்வாறே கூறியது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாதத்தை ஒத்துக்கொண்டு, தலைமை நீதிபதியின் ஆணையை சட்டப்படி தள்ளுபடி செய்தார். தலைமை நீதிபதி, தன்னுடைய ஆணை கவர்னரது போல; நீதித்துறை அந்த முடிவை பரிசோதிக்க முடியாது என்றார். தள்ளுபடியை தள்ளுபடி செய்தார். மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

வழக்கை விசாரித்த திரு.ஆர்.வீ.ரவீந்தரன் அவர்களும், திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்களும் போட்ட போடு: “ஜனநாயக ஆட்சியில், சட்டத்தின் மேலாண்மை தான் தலைமை. யாரும், எத்தருணமும், தன்னிச்சையாக நடப்பதை அது அனுமதிக்காது. ‘நான் ஆணையிட்டால்…’ என்றெல்லாம் ஆட விடாது, நீதித்துறை. சட்டபூர்வமான ஆளுமையை ‘சட்’ என்று தட்டி விடமாட்டோம். ஆனால், அது ஒரேடியாக ஆட்டம் போட முடியாது.”

இதைப் படித்தபோது ஒன்று நினைவில் வந்தது: “ஒரு நாடாளும் மன்றம், பூனைக்கண் குழந்தைகளை கொன்று விடவேண்டும் என்று தீர்மானித்தால், அக்குழந்தைகளை பராமரிப்பது சட்ட விரோதம். ஆனால், அப்படி ஒரு சட்டம் இயற்றுபவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். அதற்கு பணியும் மக்களும் மூடர்களே.” (லெஸ்லி ஸ்டீஃபன்: 1907) ஹூம்! அவர் சொல்லி நூறு வருடங்களுக்கு மேல் ஆச்சு.  நூறு வருடங்கள் ஆனாலும் செவிடனாகத்தான் இருப்பேன் என்றால், என்ன செய்யமுடியும்? நீங்களே சொல்லுங்கள்.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கனம் கோர்ட்டார் அவர்களே! – 1

  1. முதலையும் மூர்க்கரும் கொண்டது விடார் என்னும் சொல்வழக்கு இன்னமும் தொடர வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை இக்கட்டுரை மிக அழகாக உணர்த்துகிறது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. தொடருங்க. படிக்க இருக்கோம்.
    அதே சமயம் இதுக்கும் ஒரு எல்லை இருகக்ணுமே. இப்ப மூணு பேரை தூக்கில போட ஆய்வு செய் ங்கிறவங்க இத கெட்டியா பிடிச்சுப்பாங்க….

  3. தள்ளுபடிக்கே தள்ளுபடியா! இது அந்த நீதிபதியின் அகந்தையைக் காட்டுவதாக உள்ளது. ஊடகங்களின் கவனத்தில் இருந்து நழுவிப் போன மிக முக்கிய தீர்ப்பினை வாசகர்களின் கவனத்திற்குக் கொணர்ந்தமைக்கு நன்றி ஐயா. அருமையான கட்டுரை. நல்ல தொடக்கம். தொடருங்கள் ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *