புவனா கோவிந்த்

அம்மா கை சிகப்புப் பார்த்து
அது போல் எனக்கும் வேணுமென
அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்த
அழகிய பசுமை நினைவுகள்!!!

வாய்ல வெச்சுப்ப வேண்டாம்ன்னு
வாகாய் அம்மா எடுத்துச் சொல்ல
வேணும்னா வேணும்னு
விடாமல் அழுத நினைவுகள்!!!

இலையைப் பறிப்பதில் தொடங்கி
இன்னும் பாக்கும் கூடச் சேர்த்து
அரைத்து எடுக்கும் வரை
அம்மா காலைச் சுற்றிய நினைவுகள்!!!

விரல் நுனியில் தொப்பி வைத்து
வட்டத்தை உள்ளங்கையிலிட்டு 
அசைக்காம நில்லேண்டின்னு 
அம்மா அதட்டிய நினைவுகள்!!!

ஒரு கைக்குப் போதும்டி
ஒழுங்கா கேளுன்னு சொல்ல
புரண்டு கைகால் உதைத்து
பொய்க் கண்ணீர் உகுத்த நினைவுகள்!!!

படுத்தால் கலைந்திடும்ன்னு
பல்லைக் கடித்து தூக்கம் விரட்டி 
பின்னிரவில் அம்மா ஸ்பரிசத்தில் 
படுக்கையில் சுருண்ட நினைவுகள்!!!

எனக்குத்தான் நல்லாச் சிவந்ததென
எந்தங்கையை சிணுங்கச் செய்து 
பாட்டியிடம் கொட்டு வாங்கி 
அழுது முகமும் சிவந்த நினைவுகள்!!!

பெரியவளாய் ஆன நாளில்
பெருமிதமாய்க் கண்ணேறு கழித்து 
சொந்தங்கள் மருதாணியிட்ட 
சொர்க்கமான நினைவுகள்!!!

சிவக்குமளவு ஆசையாம் என
சிநேகதிகள் கேலி செய்ய 
சும்மாவெனத் தெரிந்தாலும் 
சிவக்கணுமெனச் செய்த முயற்சிகள்
இந்த நொடி நினைத்தாலும் 
இனிமையான நினைவுகளே!!!

கைத்தலம் பற்றிய நாளில் 
கள்ளப் பார்வையில் ரசித்து விட்டு 
பின் கிடைத்த தருணத்தில் 
பாராட்டிய ரகசியங்கள் 
சற்றேயின்று நினைத்தாலும் 
சிவக்க வைக்கும் நினைவுகள்தாம்!!!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மருதாணி நினைவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *